துபாயில் சுங்க (Salik) கட்டண முறையிலும், பார்க்கிங் கட்டண முறையிலும் அறிமுகமாகும் புதிய மாறுதல்கள் என்ன?

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) நகரத்தில் போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்துவதற்கான விரிவான உத்தியின் ஒரு பகுதியாக, மாறுபட்ட சுங்க கட்டண விலை (salik) மற்றும் பார்க்கிங் கட்டண முறைகளில் மாற்றத்தை செயல்படுத்துவதாக அறிவித்துள்ளது.

சுங்க கட்டணம் & நேரம்:

மாறுபட்ட சுங்க கட்டண விலை (salik) வருகிற ஜனவரி 31 2025, முதல் அமலுக்கு வரும் எனவும், அதன் மூலம் அதிகாலை 1 மணி முதல் காலை 6 மணி வரை வாகன ஓட்டிகளுக்கு கட்டணமில்லா பாதையை வழங்குகிறது.

வார நாட்களில், காலை 6 மணி முதல் 10 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை கட்டணம்  AED 6 ஆக இருக்கும்.

நெரிசல் இல்லாத நேரங்களில், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையிலும், கட்டணம் 4 திர்ஹாம்களாக இருக்கும். ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறைகள், சிறப்பு நிகழ்வு நேரங்களை தவிர்த்து, நாள் முழுவதும் கட்டணம் 4 திர்ஹாமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரமலான் காலத்தில் சாலிக் கட்டண விலைகள்:

புனித ரமலான் மாதத்திற்கான அதன் மாறக்கூடிய விலை நேரங்களையும் கட்டணங்களையும் பட்டியலிட்டுள்ளது.
 
அதன்படி, சாதாரண நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 6 திர்ஹம்ஸ் என்றும், மற்றும் நெரிசல் இல்லாத நேரங்கள் காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் அதிகாலை 2 மணி வரையிலும் 4 திர்ஹம்ஸ் ஆகக் குறையும் என்பது தெரிய வந்துள்ளது.

மேலும், திங்கள் முதல் சனிக்கிழமை வரை அதிகாலை 2 மணி முதல் காலை 7 மணி வரை Tariif இலவசம்.

ஞாயிற்றுக்கிழமைகளில் (பொது விடுமுறை நாட்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் தவிர), சாலிக் கட்டணம் நாள் முழுவதும் காலை 7 மணி முதல் அதிகாலை 2 மணி வரை AED 4 ஆகவும், காலை 2 மணி முதல் 7 மணி வரை இலவசமாகவும் இருக்கும்.

பார்க்கிங் கட்டண முறையில் மாற்றங்கள்:

பார்க்கிங் கட்டண முறையில் செய்யப்பட்ட மாற்றங்கள்  2025  மார்ச் மாதம் இறுதிக்குள் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாறுதல்கள் மூலம் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், பிரீமியம் பார்க்கிங் இடங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு AED 6 என்றும், மற்ற பொதுக் கட்டணம் செலுத்தும் பார்க்கிங் இடங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு AED 4 என்றும் பார்க்கிங் கட்டணத்தை நிர்ணயிக்கப்படுகிறது.

நெரிசல் இல்லாத நேரங்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை பார்க்கிங் கட்டணத்தில் எந்த மாறுதல்களும் செய்யப்படவில்லை. மேலும், இரவு நேரங்களில் 10 மணி முதல் காலை 8 மணி வரை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாள் முழுவதும் பார்க்கிங் இலவசம் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு நிகழ்வுகளுக்கான பார்க்கிங் கட்டணம்:

நிகழ்வுப் பகுதிகளுக்கான பார்க்கிங் கட்டண கொள்கையானது, சிறப்பு நிகழ்வு மண்டலங்களுக்கு அருகில் வாகன நிறுத்துமிடங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு AED 25 என கட்டணம் அறிமுகமாகிறது. இந்தக் கொள்கையானது துபாய் உலக வர்த்தக மையத்தைச் சுற்றியுள்ள முக்கிய பகுதிகளில் ​​பிப்ரவரி 2025 இல் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.