பொது பாதுகாப்பை வலுப்படுத்த துபாயில் புதிய சட்டம் அறிமுகம்; மீறினால் AED 1,000,000 வரை அபராதம் பாயும்

துபாயில் பொது பாதுகாப்பை வலுப்படுத்த புதிய சட்டத்தை துபாய் ஆட்சியாளர் வெளியிட்டுள்ளார். ஜூன் 1 முதல் இந்த சட்டம் அமலுக்கு வருகிறது. 

துபாய் ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் துபாயில் பொது பாதுகாப்பை வலுப்படுத்த, 2003ஆம் ஆண்டு கொண்டு வந்த சட்டத்தை மாற்றி Law No.2 of 2026 என்ற புதிய சட்டத்தை வெளியிட்டுள்ளார். இந்த சட்டத்தின் முக்கிய நோக்கம், பொது இடங்களில் மக்களுக்கும், பொது சொத்துகளுக்கும் உயரிய பாதுகாப்பை வழங்குவதாகும். அதன்படி இந்த சட்டத்தின் கீழ் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் இதோ. 

முக்கிய பொது பாதுகாப்பு விதிமுறைகள் 

  • நிகழ்ச்சிகள், பொது இடங்கள், கட்டிடங்கள் ஆகியவற்றில் பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
  • பொது இடங்களில் அவசர வெளியேற்ற வழி, தீயணைப்பு சாதனங்கள், முதலுதவி வசதி, அலாரம் அமைப்பு போன்றவை இருக்க வேண்டும்.
  • போதுமான ஒளி மற்றும் காற்றோட்ட வசதி இருக்க வேண்டும்
  • கூட்ட நெரிசலைத் தவிர்க்க அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையான மக்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்
  • அதிக ஒலி வெளிப்பாட்டை தவிர்க்க வேண்டும்.

பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்

  • கடற்கரைகளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே நீச்சல் அடிக்க வேண்டும். 
  • பொது உபகரணங்களைப் பயன்படுத்தும் போது பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். 
  • வெடிபொருட்கள், பட்டாசுகள், நச்சுத்தன்மை வாய்ந்த அல்லது எரியக்கூடிய பொருட்களை ஆகாரமின்றி கையாளக்கூடாது. 
  • பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 
  • ஆபத்தான பொருட்களை குப்பை தொட்டிகளில் அல்லது குப்பை சேகரிப்பு வாகனங்களில் போடக்கூடாது

விதிமீறலுக்கான அபராதம் 

இந்த சட்டத்தின் விதிகளை மீறுபவர்களுக்கு AED 500 முதல் AED 1,000,000 வரை அபராதம் விதிக்கப்படும். அதே குற்றத்தை மீண்டும் செய்தால், அபராதம் AED 2,000,000 வரை உயர்த்தப்படும்.

இந்த குற்றத்திற்கு எதிராக மேல்முறையிடு செய்பவர்கள் 10 நாட்களுக்குள் எழுத்துபூர்வமாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.  துபாய் நகராட்சியின் இயக்குநர் ஜெனரல், தொடர்புடைய அதிகார சபை அல்லது நகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட குழுவால் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு மனு குறித்து முடிவு செய்யப்படும். 

TAGGED: