துபாய் அரசு 2026 – 2028 வரை மூன்று ஆண்டுகளுக்கான பட்ஜெட்டையும், ஷார்ஜா அரசு 2026ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டையும் ஒதுக்கியுள்ளன.
பட்ஜெட் ஒதுக்கிய எமிரேட்கள்:
அமீரகத்தின் முன்னணி எமிரேட்டுகளாக விளங்கும் துபாய் மற்றும் ஷார்ஜா, நாட்டின் மொத்த பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன.
ஆடம்பர சுற்றுலா, உலகளாவிய வணிகம் மற்றும் நவீன தொழில்நுட்பங்களில் துபாய் முன்னணியில் திகழ்கிறது. அதேவேளை, தொழிற்துறை வளர்ச்சி, கல்வி, கலாசாரம் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலா தலங்களுக்காக ஷார்ஜா பரவலாக அறியப்படுகிறது.
வரும் ஆண்டுகளில் சுற்றுலா மற்றும் தொழில்துறைகளுடன் மட்டுமல்லாமல், போக்குவரத்து, கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், கல்வி, டிஜிட்டல் மாற்றம் மற்றும் நிலையான வளர்ச்சி உள்ளிட்ட பல துறைகளிலும் தங்களது ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த பட்ஜெட்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த முக்கியமான பட்ஜெட் திட்டங்களுக்கு துபாய் மற்றும் ஷார்ஜா ஆட்சியாளர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளனர்.
2026-2028ஆம் துபாய் பட்ஜெட்
துபாய் ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் 2026-28 ஆண்டுகளுக்கான AED 302.7 பில்லியன் பொது பட்ஜெட்டை அறிவித்துள்ளார். துபாய் வரலாற்றில் ஒதுக்கப்பட்ட மிகப்பெரிய பட்ஜெட் இதுவாகும். இதற்கு முன்னதாக 2024-26 ஆண்டில் AED 246.6 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது 22% அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கிடைக்கும் வருவாய் AED 329.2 பில்லியன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவே 2026ஆம் ஆண்டிற்கான வருவாய் மட்டும் AED 107.7 பில்லியனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் உள்கட்டமைப்புக்கு மட்டும் 48% ஒதுக்கப்பட்டுள்ளது.
2026 ஷார்ஜா பட்ஜெட்
ஷார்ஜா ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் டாக்டர் சுல்தான் பின் முகமது அல் காசிமி அவர்கள் 2026ஆம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டிற்காக AED 44.5 பில்லியன் நிதி ஒதுக்க ஒப்புதல் வழங்கியுள்ளார். இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட AED 42.7 பில்லியன் நிதியை விட 3% அதிகமாகும். ஷார்ஜா வரலாற்றில் ஒதுக்கப்பட்ட மிகப்பெரிய பட்ஜெட் இதுவாகும்.
ஒதுக்கப்பட்ட நிதியில் 35% நகரின் உட்கட்டமைப்பிற்கும், 12% மானியங்கள் மற்றும் நலத்திட்டங்களுக்கும், 15% கடன் வட்டியை திருப்பி செலுத்துவதற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அரசு ஊழியர்களின் சம்பளத்திற்காக 30% அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
