குடியிருப்பாளர்கள் இனிமேல் நிலுவையில் உள்ள போக்குவரத்து அபராதங்களைச் செலுத்தாமல், தங்கள் குடியிருப்பு விசாவை (Residency visa) புதுப்பிக்கவோ அல்லது ரத்து செய்யவோ முடியாது என்று துபாய் குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் விவகாரத் துறையின் (GDRFA – General Directorate of Residency and Foreigners Affairs) தலைவர் அறிவித்துள்ளார்.
அபராதம் செலுத்தினால் மட்டுமே புதுப்பிப்பு:
துபாய் குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் விவகாரத்துறை ஒரு புதிய மின்னணு அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அமைப்பு குடியுரிமை தொடர்பான அனைத்து பரிவர்த்தனைகளையும் துபாய் காவல்துறை போக்குவரத்து அபராதம் செலுத்தும் அமைப்புடன் இணைக்கிறது.
இதன் மூலம் விசா புதுப்பித்தல், ரத்து செய்தல் அல்லது மாற்றுதல் போன்ற எந்தக் கோரிக்கையையும் செய்வதற்கு முன், அனைத்து நிலுவையிலுள்ள போக்குவரத்து அபராதங்களையும் செலுத்த வேண்டும். அப்போது தான் விசா புதுப்பித்தல் அல்லது ரத்து செய்தல் போன்ற கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும்.
அபராதங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும்:
துபாய் GDRFA-ன் இயக்குநர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் முகமது அகமது அல் மர்ரி கூறுகையில், ”குடியிருப்பாளர்கள் உள்ளூர் சட்டங்களை மதித்து, நிலுவையிலுள்ள அபராதங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும். நாங்கள் குடியிருப்பாளர்களுக்காக எல்லாவற்றையும் செய்கிறோம். இங்கு வாழ்பவர்கள் விதிகளைப் பின்பற்ற வேண்டும்.
போக்குவரத்து அபராதம் பெரிய தொகையாக இருந்தால், அவர்கள் தவணை முறையில் செலுத்தலாம். நாங்கள் மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. இந்தக் கொள்கை குடியிருப்பாளர்களுக்கு சுமையாக இருக்க வேண்டும் என்பதல்ல, மாறாக அனைவரும் சட்டத்தை மதிக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதே இதன் நோக்கம்.” என்றார்.
அபராதத்தை தவிர்ப்பது அதிகரிக்கிறது:
அல் மர்ரி, ”குடியிருப்பாளர்கள் போக்குவரத்து விதிகளை மீறுவதையும், அபராதங்களைச் செலுத்துவதைத் தாமதப்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். பணம் செலுத்தாததால் அபராதத் தொகை பெரும்பாலும் அதிகரிக்கிறது.
இது குறித்து அமைச்சகமும் போக்குவரத்துத் துறைகளும் மீண்டும் மீண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், எச்சரிக்கை செய்தும் அபராதங்களைத் தவிர்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது ” என்றும் சுட்டிக்காட்டினார்.
