உலக சாதனை: துபாய் காவல்துறைக்கு AAA+ பிராண்ட் அங்கீகாரம்!

துபாய் காவல்துறை, உலகின் மிகச் சிறந்த மற்றும் வலிமையான காவல் துறை பிராண்டாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. “பிராண்ட் ஃபைனான்ஸ்” (Brand Finance) நடத்திய ஒரு புதிய ஆய்வின்படி, துபாய் காவல்துறை உலகளாவிய அளவில் மிகவும் வலிமையான காவல் துறையாக உருவெடுத்துள்ளது.

துபாய் காவல்துறைக்கு AAA+ மதிப்பீடுடன் முதலிடம்

துபாய் காவல்துறை உலகளவில் மிக வலிமையான காவல்துறை பிராண்டாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இது Brand Finance நிறுவனத்தின் Institutional Brand Value Index மதிப்பீட்டில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது. இந்த காவல்துறைக்கு AAA+ மதிப்பீடு மற்றும் 10 இல் 9.2 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. இது 10 நாடுகளிலும் 8,000-க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் நடைபெற்ற ஆய்வின் மதிப்பாகும். இந்த மதிப்பீட்டில், துபாய் காவல்துறை செயல்திறன், நெறிமுறை, தெளிவுத்தன்மை, புதிய முறைகள் போன்ற அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளது.

பிராண்ட் ஃபைனான்ஸின் தேசிய பிராண்ட் அறிக்கையின்படி, துபாய் காவல்துறையின் பிராண்ட் மதிப்பு மட்டும் சுமார் AED 57.9 பில்லியன் (சுமார் $15.8 பில்லியன்) ஆகும். இது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் துபாயின் “மென்சக்தியை” வலுப்படுத்துவதற்கும் பங்களிக்கிறது.

துபாய் காவல்துறை உலகிலுள்ள மற்ற முன்னணி காவல் படைகளை விட, 11 முக்கிய நற்பெயர் அம்சங்களிலும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. அவற்றின் விவரங்கள்:

  • அனைத்து தனிநபர்களையும் நியாயமாக நடத்துதல் – 57%
  • நம்பிக்கை மற்றும் நேர்மை – 60%
  • பாதுகாப்பு, பாதுகாப்பு உறுதி – 67%
  • ஒழுக்கமான நடத்தை – 59%
  • தொழில்முறை ஈடுபாடு – 62%
  • கடமைகளை சிறப்பாக செய்யும் திறன் – 64%
  • சமூக ஊடகங்களில் நேர்மையான தோற்றம் – 57%
  • வெளிப்படையான மற்றும் பயனுள்ள தகவல் பரிமாற்றம் – 51%
  • குற்றங்களை தடுக்கும் புதிய முயற்சிகள் – 54%
  • நவீனத்தன்மை மற்றும் முன்னேற்ற வளர்ச்சி – 54%
  • களத்தில் வலிமையாக செயல்படுவது – 63%

இந்த தகவல்கள் துபாய் காவல்துறையின் திறமையும், நம்பிக்கையும், உலகளாவிய அளவில் மதிப்புமிக்க நிலையை வெளிக்காட்டுகின்றன.

துபாய் காவல்துறையின் வெற்றிக்குக் காரணம் என்ன?

துபாய் காவல்துறையின் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அப்துல்லா கலீஃபா அல் மர்ரி, ”இந்த அங்கீகாரம் ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்கள் மீது வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது மற்றும் பொது பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் வாழ்க்கைத் தரத்திற்கான துபாய் காவல்துறையின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. இன்று நாங்கள் உலகளவில் தலைசிறந்த காவல்துறை பிராண்டாக உயர்ந்திருக்கிறோம். இதற்கு நம் தலைவர்கள் கொடுத்த வழிகாட்டலும், நாங்கள் கடைபிடித்த முயற்சிகளும் காரணம். துபாய் காவல்துறை, நவீன தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு போன்றவற்றைப் பயன்படுத்தும் முன்னோடியான அமைப்பாக மாறியுள்ளது” என்று கூறினார். மேலும்  துபாய் காவல்துறையின் உலகளாவிய மதிப்பை உயர்த்த பல முக்கிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில்,

  • ஸ்மார்ட் காவல் நிலையங்கள் (SPS),
  • UAE SWAT சவால்,
  • சமூக ஈடுபாட்டு நிகழ்வுகள், 
  • மின்-விளையாட்டு போட்டிகள் மற்றும் ‘Esaad’ நலத்திட்டம் போன்றவை அடங்கும்.

பிராண்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி டேவிட் ஹைக், துபாய் காவல்துறை உலகின் முன்னணி பிராண்டாக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து அவர் “துபாய் காவல்துறையின் பிராண்ட் வலிமையை இந்த சாதனை உறுதிப்படுத்துகிறது. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், உலகளாவிய நற்பெயருக்கும் புதுமையான, எதிர்காலத்தை நோக்கிய பொது நிறுவனங்கள் எவ்வளவு முக்கியம் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. ஒரு அரசு பாதுகாப்பு நிறுவனத்திற்கு இவ்வளவு பெரிய அளவிலான நம்பிக்கை கிடைத்திருப்பது மிகவும் அரிதான மற்றும் சிறப்பான விஷயம்” என்று குறிப்பிட்டார்.

TAGGED: