ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள், 54வது Eid Al Etihad நினைவுப்பொருட்களை வடிவமைக்க அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Eid Al Etihad என்றால் என்ன?
Eid Al Etihad என்பது ஐக்கிய அரபு அமீரகம் ஒன்றிணைந்த நாளைக் குறிக்கிறது. இந்தியா போன்ற நாடுகளில் எப்படி சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறதோ, அதேபோல் ஐக்கிய அரபு அமீரகத்தில், துபாய், அபுதாபி, ஷார்ஜா உள்ளிட்ட எமிரேட்கள் ஒன்றிணைந்த நாளைக் குறிக்கும் தேசிய தினமாகும்.
எப்படி கொண்டாடப்படும்?
ஒவ்வொரு வருடமும், இந்த நாளை விமரிசையாகக் கொண்டாட, ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பு வாசிகளுக்கும், கலைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும். அதன்படி அவர்கள், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒற்றுமையை, மேன்மையை வெளிப்படுத்தும் விதமாக தாங்கள் செய்யும் படைப்புகளை/நினைவுப் பொருட்களை காட்சிப்படுத்தலாம்.
Eid Al Etihad குழு, இந்த ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி நடைபெறும் 54வது வருடாந்திர விழாவிற்கான அதிகாரப்பூர்வ நினைவுப்பொருட்கள் உருவாக்குவதற்கும், வடிவமைப்பதற்கும், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள கலைஞர்கள், வடிவமைப்பாளர்களுக்கு அதிகாரபூர்வ அழைப்பை அறிவித்துள்ளது.
இதன் நோக்கம் என்ன?
இந்த ஆண்டு, Year of Community என்ற கருப்பொருளைக் கொண்டு நினைவுப் பொருட்கள் உருவாக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம், நாட்டின் பல்வகைத் திறமைகளையும் கலாச்சாரங்களையும் கொண்டாடுவதாகும். இதன் வழியாக, மக்கள் ஒருவருக்கொருவர் உணர்வுப்பூர்வமாக கலந்துரையாடச் செய்வதுடன், ஐக்கிய அரபு அமீரகத்தின் அடையாளத்தையும் ஒருமைப்பாட்டையும் நினைவுப் பொருட்களில் பிரதிபலிக்க முடியும்.
இந்தப் பொருட்கள், நாட்டின் மரபும், எதிர்காலமும் இணைந்த ஒரு தேசிய அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. மக்கள் இதன் மூலம் நாட்டின் மீதுள்ள பற்றை வெளிப்படுத்த முடியும்.
ஈசா அல் சுபூசி, Eid Al Etihad குழுவின் இயக்குநர், இது குறித்து பேசுகையில், இந்த அழைப்பு நாட்டின் கூட்டாண்மைக்கும், பங்கேற்புக்கும் இடமளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தேர்வாகும் விண்ணப்பதாரர்கள்:
- இவர்களின் வடிவமைப்புகள் அதிகாரப்பூர்வ நினைவுப்பொருட்கள் தொகுப்பில் இடம்பெறும்.
- விற்பனைக்காகவும் பயன்படுத்தப்படும்.
- மேலும், Eid Al Etihad பிராண்ட் அடையாளத்தை அனைவரும் தங்களது கொண்டாட்டங்களில் பயன்படுத்தலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எப்படி விண்ணப்பிப்பது?
2025 செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 17 வரை, Eid Al Etihad-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும், சமூக வலைத்தளங்களில் வழங்கப்பட்ட இணைப்புகள் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.
