அக்டோபர் 1 முதல் எமிரேட்ஸ் விமானங்களில் பவர் பேங்க்குகள் (Power banks) பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, எமிரேட்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்கள் கைப்பையில் ஒரு பவர் பேங்க் எடுத்துச் செல்லலாம், ஆனால் அதை விமானத்தில் பயன்படுத்தவோ அல்லது சார்ஜ் செய்யவோ அனுமதி இல்லை.
ஏன் பயன்படுத்தக்கூடாது?
விமானப் பயணத்தின்போது பவர் பேங்க்குகளை பயன்படுத்துவது ஏன் ஆபத்தானது என்பதை எமிரேட்ஸ் நிறுவனம் விளக்கியுள்ளது.
- பவர் பேங்க்குகளில் லித்தியம்-அயன் பேட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை சேதமடைந்தாலோ அல்லது அளவுக்கு அதிகமாகச் சார்ஜ் செய்யப்பட்டாலோ, வெப்ப ஓட்டம் (thermal runaway) என்ற அபாயகரமான நிலை ஏற்படலாம்.
- இந்த நிலையில், பேட்டரிக்குள் உருவாகும் வெப்பம் வெளியேற முடியாமல், வேகமாக அதிகரித்து, கட்டுப்பாட்டை மீறி உயரும். இதன் விளைவாக, தீ விபத்து, வெடிப்பு, மற்றும் விஷ வாயுக்கள் வெளியாவது போன்ற தீவிரமான விளைவுகள் ஏற்படக்கூடும்.
இது குறித்து விமானப் போக்குவரத்து நிபுணரான ஹான்ஸ்-ஜார்ஜ் ராபாச்சர் கூறுகையில், “சூரிய ஒளி, மோசமான காற்றோட்டம் அல்லது பேட்டரியில் ஏற்படும் சேதம் போன்றவற்றால் வெப்ப ஓட்டம் ஏற்படலாம். இதனால் வெடிப்பு மற்றும் 1,000°C-க்கு மேல் வெப்பநிலையில் தீ விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது” என்றார்.
பயணிகளின் கருத்து!
- எமிரேட்ஸ் நிறுவனத்தின் இந்த முடிவை பெரும்பாலான பயணிகள் வரவேற்றுள்ளனர். துபாயைச் சேர்ந்த டயான் கிறிஸ்டின் மனினாங், “இது எல்லோரின் பாதுகாப்புக்கும் நல்லது என்பதால் இந்த விதி எனக்கு ஏற்புடையது. நான் விமானத்தில் உள்ள சார்ஜிங் போர்ட்டுகளையே பயன்படுத்துவேன்,” என்று கூறினார்.
- மற்றொரு பயணி அர்ஃபாஸ் இக்பால், “விமான நிலையங்களிலும், விமானங்களிலும் சார்ஜிங் வசதிகள் உள்ளன. எனவே பவர் பேங்க் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை,” என்று தெரிவித்தார்.
பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட இந்த முடிவு, விமானப் பயணத்தை மேலும் பாதுகாப்பானதாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட தூரப் பயணங்களுக்குச் செல்லும் பயணிகள், விமானத்தில் ஏறும் முன் தங்கள் சாதனங்களை முழுமையாக சார்ஜ் செய்து வைத்துக்கொள்வது அவசியம்.
