எதிஹாட் ரயிலில் பயணித்த துபாய் ஆட்சியாளர்;  ரயிலின் சிறப்பம்சங்கள் என்ன?

எதிஹாட் ரயில் திட்ட பணிகளை நேரில் பார்வையிட்ட துபாய் ஆட்சியாளர் துபாய் மற்றும் ஃபுஜைரா இடையே பயணிகள் ரயிலில் பயணம் செய்தார்.

துபாய் ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், நாட்டின் மிகப்பெரிய உள்கட்டமைப்பு திட்டமான எதிஹாட் ரயில் திட்ட பணிகளை நேரில் ஆய்வு செய்தார். அவர் துபாயில் இருந்து ஃபுஜைரா வரையிலான பயணிகள் ரயில் பயணத்தை மேற்கொண்டு, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்திற்கு தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.

இந்த ரயில் சேவை 2026-ல் வணிக ரீதியாகத் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு புதிய பாதை

இந்தப் பயணம் குறித்து  துபாய் ஆட்சியாளர் கூறுகையில், “எதிஹாட் ரயில் திட்டம் என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத்திற்கு ஒரு முக்கிய உயிர் நாடியாக உள்ளது. இது நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.

ஒரு ஒருங்கிணைந்த போக்குவரத்து வலையமைப்பை உருவாக்குவதன் மூலம், அமீரகத்தை உலகின் முன்னணி தளவாட மையமாக மாற்றுவதே எங்கள் நோக்கம்” என்று குறிப்பிட்டார்.

தேசத்தின் ஒற்றுமைக்கான ஒரு அடையாளம்:

எதிஹாட் ரயில் நிறுவனத்தின் தலைவர் மாண்புமிகு ஷேக் தியாப் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் கூறுகையில், “ஷேக் முகமது அவர்களின் இந்த பயணம் எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். 2021-ல் ‘Projects of the 50’ திட்டத்தின் அறிவிப்பு முதல், சரக்கு ரயில் சேவையின் துவக்கம் வரை அவர் இந்த திட்டத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளார். இப்போது பயணிகள் ரயில் சேவையும் தொடங்கப்பட உள்ளது. இது ஐக்கிய அரபு அமீரகத்தின் போக்குவரத்துத் துறையில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும்” என்று  கூறினார்.

சிறப்பம்சங்கள்

வேகம் மற்றும் வசதி:

மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் இயங்கும் இந்த ரயில்கள், நவீன வசதிகளுடன் பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும்.

பரந்த இணைப்பு: 

அல் சிலா முதல் ஃபுஜைரா வரை 11 நகரங்களை இந்த ரயில் சேவை இணைக்கும். அபுதாபி, துபாய், ஷார்ஜா, ஃபுஜைரா ஆகிய இடங்களில் முதல் நான்கு ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு:

இந்த ரயில் சேவை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், 2050-க்குள் ஐக்கிய அரபு அமீரகத்தின் கார்பன் வெளியேற்றத்தை பூஜ்ஜியமாக்கும் இலக்கிற்கு ஆதரவாகவும் இருக்கும்.

பயணிகளை கையாளும் திறன்: 

ஒவ்வொரு ரயிலும் 400 பயணிகளை ஏற்றிச் செல்லும். 2030-க்குள் ஆண்டுதோறும் 3.65 கோடி பயணிகள் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ரயில் சேவை பாதுகாப்பான, திறமையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒரு புதிய போக்குவரத்து அமைப்பை உருவாக்கி, பிராந்தியத்தில் ஒரு முன்மாதிரியாக அமையும்.

TAGGED: