துபாயில் இருந்து இந்தியாவிற்கு எவ்வளவு தங்கம் எடுத்து வரலாம்?

இந்தியாவில் தங்கம் என்பது பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது. இதனாலேயே இந்தியர்கள் தங்கத்தை சேமிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். உலக தங்க கவுன்சிலின் (World Gold Council) அறிக்கையின் மூலம் இந்திய பெண்கள் உலகில் உள்ள மொத்த தங்கத்தில் 11 சதவீதத்தை வைத்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. இது சுமார் 25,537 டன் தங்கமாகும். இந்த அளவு, மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட  நாடுகளின் தங்க கையிருப்புகளை விட அதிகமாகும். 

இந்த நிலையில் தங்கம் விலை உயர்வு, GST வரி, இறக்குமதி வரி, செய்கூலி, சேதாரம் உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தினருக்கு தங்கம்  எட்டாக் கனியாகி உள்ளது.  

இந்தியாவுடன் ஒப்பிடும் போது மலிவு விலையில் துபாயில் தங்கம் வாங்கலாம். துபாயில் தங்க நகைகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரி (GST), செய்கூலி, சேதாரம் ஆகியவை இல்லாததால், தங்கத்தின் விலை இந்தியாவை விட  மலிவாக இருக்கும்.

சிலர், துபாயில் இருக்கும் தங்கள் உறவினர்களை, அங்கிருந்து தங்கம் மற்றும் தங்க நகைகளை வாங்கி வர சொல்கின்றனர். மேலும் சிலர், இந்திய விதிகளை மீறி அதிகப்படியான தங்கத்தை எடுத்து வந்து அதிகாரிகளிடம் சிக்கிக்கொள்கின்றனர்.

குறிப்பாக சென்னை, பெங்களூரு, கொல்கத்தா உள்ளிட்ட இந்திய சர்வதேச விமான நிலையங்களுக்கு வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் சட்ட விரோதமாக தங்கம் கொண்டு வருவதும் அதை, சுங்கத்துறை அதிகாரிகள் பிடிப்பதும் தொடர் கதையாகி வருகிறது. 

இந்த நேரத்தில், துபாயில் இருந்து எவ்வளவு தங்கத்தை வரி இல்லாமல் எடுத்து வரலாம்?, யார், யாருக்கு எவ்வளவு அனுமதி என இக்கட்டுரையில் பார்க்கலாம். 

இந்திய சுங்க விதிகளின்படி, வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருகை தரும் பயணிகள், தங்கம் கொண்டு வருவதற்கு குறிப்பிட்ட வரம்புகள் மற்றும் விதிமுறைகள் உள்ளன. இந்த விதிமுறைகள் பயணியின் பாலினம், வெளிநாட்டில் தங்கியிருந்த காலம் மற்றும் தங்கத்தின் வகை ஆகியவற்றை பொருத்து மாறுபடும்.

வரி இல்லாமல் எவ்வளவு தங்கம் கொண்டு வரலாம்?

இந்திய சுங்க விதிகளின் படி, ஒரு பயணி தனது பயணத்தின் போது துபாயில் இருந்து இந்தியாவிற்கு சில வரம்புகளுக்குள் மட்டுமே தங்கத்தை வரி இல்லாமல் கொண்டு வர முடியும்.

பாலின அடிப்படையில் விதிக்கப்படும் வரி: ஆண்கள்:  அதிகபட்சம் 20 கிராம் (₹50,000) வரையிலான தங்க நகைகள் கொண்டு வர அனுமதி உள்ளது. இதற்கு வரி செலுத்த தேவையில்லை. அதற்கு மேல் எடுத்து வந்தால், வரி செலுத்துவது கட்டாயம்.

ஆண்களுக்கான வரி: 20 – 50 கிராம் – 3% சுங்க வரி

50 – 100 கிராம் – 6% சுங்க வரி

100 கிராம் மேல் – 10% சுங்க வரி

பெண்கள்: அதிகபட்சம் 40 கிராம் (₹1 லட்சம்) வரையிலான தங்க நகைகள் கொண்டு வர அனுமதி உள்ளது. இதற்கு வரி செலுத்த தேவையில்லை. அதற்கு மேல் எடுத்து வந்தால், வரி செலுத்துவது கட்டாயம்.

பெண்களுக்கான வரி:  40 – 100 கிராம் – 3% சுங்க வரி

100 – 200 கிராம் – 6% சுங்க வரி

200 கிராம் மேல் – 10% சுங்க வரி

15 வயதிற்கு குறைவான குழந்தைகள்: 40 கிராம் வரை நகைகளுக்கு வரி செலுத்த தேவையில்லை. 

குழந்தைகளுக்கான வரி:  40 – 100 கிராம் – 3% சுங்க வரி

100 – 200 கிராம் – 6% சுங்க வரி

200 கிராம் மேல் – 10% சுங்க வரி

மேற்கூறிய தங்கத்தை தனிப்பயன்பாட்டிற்கு  மட்டுமே கொண்டு வர முடியும். வணிக நோக்கத்திற்காக தங்கம் கொண்டு வர அனுமதி கிடையாது. 

1 கிலோவுக்கு மேல் தங்கம் எடுத்து வந்தால், ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் (RBI) அனுமதி தேவை. இல்லையெனில், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, கைது செய்யப்படுவார்கள்.

துபாயில் தங்கியிருக்கும் காலத்தைப்பொருத்து விதிக்கப்படும் வரி:

  • 6 மாதங்களுக்கு குறைவாக வெளிநாட்டில் தங்கியிருந்தால் 38.5% சுங்க வரி விதிக்கப்படும். 
  • 6 மாதங்கள் முதல் 1 வருடம் வரை வெளிநாட்டில் தங்கியிருந்தால் 13.75% சுங்க வரி விதிக்கப்படும். ஆண்கள், பெண்கள் 1 கிலோ வரை தங்கம் கொண்டு வரமுடியும். 
  • 1 வருடத்திற்கு மேல் வெளிநாட்டில் தங்கியிருந்தால், ஆண்களுக்கு ₹50,000, பெண்களுக்கு ₹1,00,000 மதிப்பிலான தங்கத்தை எடுத்து வரலாம். கூடுதல் தங்கத்திற்கு 13.75% சுங்க வரி விதிக்கப்படும்.

தங்கக்கட்டிகள் மற்றும் நாணயங்கள் மீதான சுங்க வரி:

தங்க நகைகள் இல்லாமல், தங்கக் கட்டிகள் மற்றும் நாணயங்கள் எடுத்துச் செல்லும், எடையைப் பொறுத்து சுங்க வரி நிர்ணயிக்கப்படுகிறது. 

  • 20 கிராமுக்கு குறைவான அளவு தங்கக்கட்டிகளுக்கு வரியில்லை. 20 கிராம் முதல் 100 கிராமுக்கு வரையிலான தங்கக்கட்டிகளுக்கு 3 சதவீதம் வரி விதிக்கப்படும். 1 கிலோவிற்கு குறைவான தங்கக்கட்டிகளுக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும். 
  • 20 கிராமுக்கு குறைவான அளவு தங்க நாணயங்களுக்கு வரியில்லை. 20 கிராம் முதல் 100 கிராமுக்கு வரையிலான தங்க நாணயங்களுக்கு  10 சதவீதம் வரி விதிக்கப்படும். 100 கிராமுக்கு வரையிலான  தங்க  நாணயங்களுக்கு  10 சதவீதம் வரி விதிக்கப்படும்.

தங்கத்தை இந்தியாவிற்கு கொண்டு வரும்போது, அதற்கான சரியான ஆவணங்கள், வாங்கிய ரசீது, தூய்மைச் சான்றுகள் போன்றவற்றை கொண்டுவருவது அவசியம். 

சுங்க வரி சலுகையை மீறி தங்கம் கொண்டு வரும்போது, அதை சுங்க அதிகாரிகளிடம் அறிவிக்க வேண்டும். அறிவிக்காமல் கொண்டு வந்தால், தங்கம் பறிமுதல் செய்யப்படலாம் மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். இந்த விதிமுறைகளை பின்பற்றுவதன் மூலம், தங்கத்தை இந்தியாவிற்கு பாதுகாப்பாக மற்றும் சட்டப்படி கொண்டு வரலாம்.

TAGGED: