இந்திய விமானங்களில் பவர் பேங்க் பயன்படுத்த தடை; பாதுகாப்பு வழிமுறைகள் வெளியீடு

இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் விமானங்களில் பவர் பேங்க்கை பயன்படுத்த  இந்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) தடை விதித்துள்ளது. 

பவர் பேங்க் பயன்படுத்த தடை:

போக்குவரத்து முறைகளிலேயே விமான போக்குவரத்து தான் உலகிலேயே பாதுகாப்பான போக்குவரத்து முறையாகும். இருப்பினும் விமானத்தில் விபத்து ஏற்பட்டால் அது பெரும் உயிர் சேதத்தை உண்டாக்கும். அதனால் விபத்து ஏற்படாமல் தடுக்க உலக நாடுகளில் உள்ள விமான போக்குவரத்து ஆணையங்கள் பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகளை அறிவித்துள்ளது.

அந்த வகையில் இந்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் விமானங்களில் பவர் பேங்க்கை பயன்படுத்த தடை விதித்துள்ளது.

எதனால் பவர் பேங்க் பயன்படுத்த தடை?

மொபைல், லேப்டாப் உள்ளிட்டவற்றை சார்ஜ் செய்ய பயன்படுத்தும் பவர் பேங்க்கில் உள்ள லித்தியம் அயான் பேட்டரிகள் அதிக வெப்பத்தால் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருளாகும்.

இதனால் விமானத்தில் பவர் பேங்க்கை பயன்படுத்தும் போது அல்லது சார்ஜ் செய்யும் போது ஏற்படும் அதிக வெப்பத்தால் அவை தீப்பிடிக்கிறது. சில சமயங்களில் மேல்நிலை சேமிப்பு பகுதியில் (Overhead Bins) வைக்கும் பைகளில் பவர் பேங்க்கை வைக்கும் போதும் தீ விபத்துகள் ஏற்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு சர்வதேச விமானப் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் (ICAO) விதிமுறைகளுக்கு இணங்க DGCA சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. 

பயணிகள் என்ன செய்யலாம்?

  • கேபின் லக்கேஜில் பவர் பேங்க்கை எடுத்து செல்லலாம். 
  • பவர் பேங்க்கை பயன்படுத்தாமல் வைத்திருக்க வேண்டும். 

பயணிகள் என்ன செய்யக்கூடாது?

  • விமானத்தில் பவர் பேங்க்கை பயன்படுத்தவோ அல்லது சார்ஜ் செய்யவோ கூடாது. 
  • செக்-இன் லக்கேஜில் பவர் பேங்க்கை வைக்க கூடாது. 
  • மேல்நிலை சேமிப்பு பகுதியில் (Overhead Bins) பவர் பேங்க்கை வைக்க கூடாது.

விமானத்தில் ஏதேனும் மின்சார சாதனம் சூடாக உணர்ந்தாலோ, அவற்றில் இருந்து புகை அல்லது அசாதாரண வாசனை வந்தாலோ பயணிகள் உடனடியாக விமான பணியாளர்களிடம் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அமீரகம் விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள்

விமானத்தில் பவர் பேங்க்கை கொண்டு செல்வதற்கு அமீரக அரசு கடந்த ஆண்டே வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி எமிரேட்ஸ் ஃப்ளைடுபாய் உள்ளிட்ட அமீரக விமான நிறுவனங்களில் பயணிகள் தலா 100 வாட்-மணிநேரத்திற்கும்(Wh) குறைவான ஒரு பவர் பேங்கை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

அப்படி கொண்டு செல்லும் பவர் பேங்க்கை பயணிகள் தங்களிடமே வைத்திருக்க வேண்டும். செக்-இன் லக்கேஜ் அல்லது மேல்நிலை சேமிப்பு பகுதியில் (Overhead Bins) பவர் பேங்க்கை வைக்க கூடாது.

TAGGED: