தங்க நகைகளைக் கொண்டு செல்வதில் சிக்கல் இருப்பதாகவும், பழைய சுங்க விதிகளை மாற்றவும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், தற்போது இந்திய நிதி அமைச்சர் சுங்கத் துறையில் சீரமைப்பு கொண்டு வரப்படும் என உறுதியளித்துள்ளார்.
இந்திய சுங்க விதிகளில் மாற்றம்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்கள் உள்பட பல வெளிநாடு வாழ் இந்தியர்கள் தனிப்பட்ட நகைகளை இந்தியாவுக்குக் கொண்டு செல்லும்போது சந்திக்கும் சிரமங்களைப் போக்க, இந்திய சுங்க விதிகளில் முழுமையான மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது.
குறிப்பாக, அமீரக வாழ் இந்தியர்கள், 2016-ஆம் ஆண்டில் வரி இல்லாமல் தங்க நகை வரம்புகள், தற்போதைய விலையுடன் பொருந்தாததால், சுங்க விதிகளை மாற்றியமைக்க வேண்டும் என இந்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
தற்போதைய விதிகளால் சிக்கல்:
தற்போதைய விதிகளின் படி ஆண்கள் 20 கிராம் அதாவது ரூ. 50,000 மதிப்புள்ள தங்க நகைகளை எடுத்து வரலாம். பெண்கள் 40 கிராம் அதாவது ரூ. 1 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை எடுத்து வரலாம்.
தற்போதைய விதிகளின் படி ஆண்கள் ரூ. 50,000 மதிப்புள்ள நகைகளை எடுத்து வரலாம் எனும் பட்சத்தில், இந்தியாவில் ஒரு கிராம் தங்க விலை ரூ. 13,000 என்பதால், சுமார் 3.84 கிராம் மட்டுமே எடுத்து வர முடியும்.
அதாவது, அதிகாரப்பூர்வமாக 20 கிராம் என்று கூறப்பட்டாலும், அதன் அதிகபட்ச மதிப்பு ரூ. 50,000 என்பதால், அவர் சுங்க வரி இல்லாமல் கொண்டுவரக்கூடிய தங்கத்தின் எடை சுமார் 4 கிராம் மட்டுமே.
இது ஒரு சாதாரணச் சங்கிலி அல்லது ஒரு ஜோடி வளையலுக்கு மட்டுமே போதுமானது. ஆனால் திருமணங்களுக்கு தேவையான நகைகளை இந்த வரம்பின் மூலம் கொண்டு வர முடியாது.
துபாய் போன்ற இடங்களிலிருந்து இந்தியா வரும் பயணிகள், தாங்கள் அணிந்திருக்கும் நகைகளுக்காகவும் சுங்க அதிகாரிகளால் நீண்ட நேரம் விசாரிக்கப்படுகிறார்கள். இது பலருக்கு மிகுந்த அச்சத்தையும் சங்கடத்தையும் ஏற்படுத்துகிறது.
இது போன்ற நிலையில் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்த குஷ்பு ஜெயின் என்ற பயணி, “மும்பை விமான நிலையத்தில், நான் அணிந்திருந்த வளையல்களுக்காக அதிகாரிகள் என்னை நிறுத்தி, அவை என்னுடையதுதான் என்பதை நிரூபிக்க பழைய புகைப்படங்களைக் கேட்டனர்” என்று கூறினார்.
மற்றொரு பயணி மானசி பஜார் கூறுகையில், தான் அணிந்திருந்த கவரிங் நகையைத் தங்கம் என்று தவறாகக் கருதி அதிகாரிகள் 45 நிமிடங்கள் விசாரணை நடத்தியதாகக் குறிப்பிட்டார். இத்தகைய சம்பவங்கள், குடும்ப விசேஷங்களுக்காகத் தாயகம் திரும்பும் இந்தியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிதியமைச்சரின் அறிவிப்பு:
சமீபத்தில் நடைபெற்ற ‘HT Leadership Summit’ நிகழ்ச்சியில் பேசிய இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுங்க வரியில் முழுமையான சீரமைப்பு மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளார்.
பயணிகள் விதிகளுக்குக் கட்டுப்படுவதைச் சுமையாகவும், கடினமாகவும் கருதக்கூடாது என்றும், நடைமுறைகள் மிகவும் எளிமையாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு ஒரு பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது.
NRI அமைப்புகளின் கோரிக்கைகள்:
துபாயைத் தளமாகக் கொண்ட வெளிநாடு வாழ் இந்தியர் அமைப்புகள் அரசுக்குச் சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளன:
- விலைக்கேற்ற வரம்பு: தற்போதைய தங்கத்தின் சந்தை விலைக்கு ஏற்ப வரி விலக்கு வரம்பை அதிகரிக்க வேண்டும்.
- தெளிவான விதிமுறைகள்: தனிப்பட்ட பயன்பாட்டிற்காக அணியும் நகைகளுக்கும், விற்பனைக்காகக் கொண்டு வரும் தங்கத்திற்கும் இடையிலான வேறுபாட்டைச் சுங்க அதிகாரிகள் எளிதாகக் கண்டறிய தெளிவான விதிகள் வேண்டும்.
- மரியாதையான அணுகுமுறை: சோதனைகளின் போது பயணிகளிடம் கண்ணியமாக நடத்த வேண்டும்.
