அபுதாபியில் வசிக்கும் இந்தியரான அனில்குமார் அமீரகத்தில் முதல் முறையாக AED 100 மில்லியன் லாட்டரியை வென்ற அதிர்ஷ்டசாலியாக மாறியுள்ளார்.
அதிர்ஷ்டசாலியான இந்தியர்:
துபாயில் இதுவரை வழங்கப்பட்ட லாட்டரி பரிசுகளில் மிகப்பெரிய தொகையான AED 100 மில்லியன் வென்ற அதிர்ஷ்டசாலியின் அடையாளம் தற்போது தெரியவந்துள்ளது. இந்த மெகா பரிசு வென்றவர் வேறு யாருமல்ல, நீண்ட காலமாக அபுதாபியில் வசித்து வரும் 29 வயது இந்தியப் பிரவாசி அனில்குமார் போலா ஆவார்.
அவர் வென்ற பரிசுத் தொகையான AED 100 மில்லியன் யாருடனும் பகிரப்படாமல், முழுவதுமாக அனில்குமாருக்கே செல்கிறது. கடந்த அக்.18-ல் நடைபெற்ற 23வது லக்கி டே ட்ராவில் அனில்குமார் இந்த ஜாக்பாட்டை வென்றார்.
வெற்றியாளரின் மாஸ்டர் பிளான்
பரிசு அறிவிக்கப்பட்ட நேரத்தில், அனில்குமார் தன் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, UAE லாட்டரி குழுவிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்தது. இந்தச் செய்தியைக் கேட்டவுடன் அவர் முழுவதுமாக அதிர்ச்சியடைந்து, அளவில்லா மகிழ்ச்சி அடைந்ததாகக் கூறியுள்ளார்.
மேலும் அவர், “இந்த வெற்றி என் கற்பனைகளுக்கும் அப்பாற்பட்டது. அழைப்பு வந்தபோது, அது கனவா என்று நினைத்தேன். செய்தியை மீண்டும் மீண்டும் சொல்லச் சொன்னேன். இப்போதும் கூட, நான் ஒரு கோடீஸ்வரன் என்பதை நம்ப முடியவில்லை” என்று கூறியுள்ளார்.
இந்த பணத்தில் ஒரு கார் வாங்கி, 7 நட்சத்திர ஹோட்டலில் ஒரு மாதம் தங்கி மகிழப்போவதாகவும், மீதமுள்ள பணத்தை எவ்வாறு புத்திசாலித்தனமாக முதலீடு செய்வது என்பதை திட்டமிட போவதாகவும், பணத்தை எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் செலவழிக்காமல், அறிவுபூர்வமாக எப்படி முதலீடு செய்வது என்று நிதானமாக முடிவெடுக்கப் போவதாகக் கூறியுள்ளார்.
வாழ்த்து தெரிவித்த லாட்டரி இயக்குநர்:
அனில்குமார் வரலாறு படைத்த அதே இரவில், மேலும் 10 பங்கேற்பாளர்கள் தலா AED 100,000 வென்றனர். UAE லாட்டரியின் வணிக விளையாட்டுகளின் இயக்குநர் ஸ்காட் பர்டன் பேசுகையில், “அனில்குமாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்த AED 100,000,000 பரிசு அவரது வாழ்க்கையை மட்டுமல்ல, பலரது வாழ்க்கையை மேம்படுத்தும் எங்கள் லாட்டரியின் இலக்கையும் வலுப்படுத்துகிறது” என்று தெரிவித்தார்.
லாட்டரி தொடங்கப்பட்டதிலிருந்து, 200-க்கும் மேற்பட்டோர் AED 100,000 அல்லது அதற்கு மேற்பட்ட பரிசுகளை வென்றுள்ளனர். மேலும், 100,000-க்கும் அதிகமானோர் மொத்தமாக AED 147 மில்லியனுக்கும் அதிகமான பரிசுகளைப் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
