இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட சிப் பொருத்தப்பட்ட PSP 2.O எனப்படும் இ-பாஸ்போர்ட்டை பெற அமீரகத்தில் உள்ள இந்தியர்கள் அக்டோபர் 28 முதல் விண்ணப்பிக்கலாம் என துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்திய இ-பாஸ்போர்ட்
2024 இறுதியில் இந்திய வெளியுறவு அமைச்சகம் இ-பாஸ்போர்ட் திட்டத்தை அறிவித்ததை தொடர்ந்து 2025ஆம் ஆண்டு மே மாதம் இந்தியாவில் இ-பாஸ்போர்ட் பயன்பாட்டுக்கு வந்தது. இ-பாஸ்போர்ட் பார்ப்பதற்கு சாதாரண பாஸ்போர்ட் போலவே இருந்தாலும், இந்த பாஸ்போர்ட்டில் ஒரு மைக்ரோசிப் உள்ளது, இதில் பயணியின் பெயர், பிறந்த தேதி, பயோமெட்ரிக் தரவு (முக அமைப்பு, கைரேகை) உள்ளிட்ட பாதுகாப்பாக தரவுகள் சேமிக்கப்படுகின்றன. இதன் மூலம் விமான நிலையங்களில் குடியேற்றம் தொடர்பான பணிகளை விரைவாக முடித்து வெளியே செல்ல முடியும். மேலும் பாஸ்போர்ட் திருட்டு மற்றும் போலிப் பாஸ்போர்ட்கள் தடுக்கப்படுகின்றன.
அமீரகத்தில் அறிமுகமாகிய இந்திய இ-பாஸ்போர்ட்
PSP 2.O என்ற இ-பாஸ்போர்ட்டை பெற அமீரகத்தில் உள்ள இந்தியர்கள் அக்டோபர் 28 முதல் விண்ணப்பிக்கலாம் என அமீரகத்தில் உள்ள இந்திய துணை தூதரகம் தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) கூற்றுப்படி, இந்திய குடியிருப்பாளர்கள் இ-பாஸ்போர்ட்டை வாங்க வேண்டுமென்ற கட்டாயமில்லை. உங்கள் தற்போதைய பாஸ்போர்ட் காலாவதி தேதி வரை செல்லுபடியாகும். அதன்படி இந்த இ-பாஸ்போர்ட் புதிதாக விண்ணப்பிப்பவர்கள் மற்றும் காலாவதியான பாஸ்போர்ட்டை புதுப்பிக்க விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கப்படும்.
இ-பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
- புதிய இ-பாஸ்போர்ட்டை பெற https://mportal.passportindia.gov.in/gpsp/AuthNavigation/Login இந்த இணையதளத்தை அணுகவும்.
- அதன் பிறகு https://indiavisa.blsinternational.com/uae/appointment/bls_appmnt/login இந்த இணையதளத்தில் ஆவணங்களை சமர்ப்பித்து நேர்காணலுக்கு பதிவு செய்யலாம்.
PSP தளத்தில் உங்கள் புகைப்படம், கையெழுத்து மற்றும் இதர ஆவணங்களை பதிவேற்றம் செய்வதால் பாஸ்போர்ட் சேவை மையத்தில் அதற்காக காத்திருக்கும் நேரம் குறையும்.
நீங்கள் பதிவிடும் புகைப்படம் செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வந்த சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பு (ICOA) வழிகாட்டியுள்ள https://www.cgidubai.gov.in/content/ICAO-Photograph-guideline-for-e-Passport-1_2.pdf புகைப்பட அம்சங்களுக்கு இணங்க வேண்டும். ICAO என்பது உலகளாவிய பயண ஆவணங்களுக்கான பயோமெட்ரிக் மற்றும் அடையாள அளவுகோல்களை அமைக்கும் உலகளாவிய விமானப் போக்குவரத்து அமைப்பாகும்.
PSP 2.0 என்ற இ-பாஸ்போர்ட்டை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது, வெளிநாடுகளில் இந்தியாவின் பாஸ்போர்ட் சேவைகளை நவீனமயமாக்குவதற்கான ஒரு முக்கிய படியாகும் என்றும், அமீரகத்தில் உள்ள இந்திய மக்களுக்கு அதிக செயல்திறன் மற்றும் வசதியை உறுதி செய்யும் என்று துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
