இந்தியர்களுக்கு விசாயின்றி நுழைவு சலுகையை நிறுத்திய ஈரான்; காரணம் என்ன?

இந்திய சுற்றுலா பயணிகள் விசா இல்லாமல் நாட்டிற்குள் நுழையும் அனுமதியை நவ. 22 முதல் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஈரான் அறிவித்துள்ளது.

தற்காலிகமாக நிறுத்தி வைப்பு:

 சாதாரண இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கான விசா இல்லாமல் ஈரானுக்கு செல்லும் வசதியை ஈரான் அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்த நடவடிக்கை நவம்பர் 22, 2025 முதல் நடைமுறைக்கு வருகிறது என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) தெரிவித்துள்ளது.

தவறான பயன்பாடு காரணமாக நடவடிக்கை

இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் கவனத்திற்கு பல முக்கியமான சம்பவங்கள் வந்துள்ளன. வேலைவாய்ப்பு என்ற பொய்யான வாக்குறுதிகள் அளித்து, அல்லது ஈரான் வழியாக மற்ற நாடுகளுக்கு அழைத்துச் செல்வதாக கூறி, சில முகவர்கள் இந்தியர்களை ஈரானுக்கு ஏமாற்றி அழைத்துச் சென்றுள்ளனர்.

சாதாரண இந்தியப் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு விசா விலக்கு வசதியைப் பயன்படுத்திக் கொண்டு, இந்தியர்களை ஈரானுக்குள் நுழைய வைத்துள்ளனர். அங்கு சென்ற பல இந்தியர்களை பணம் பறிப்பதற்காக  கடத்தப்படுகின்றனர் என இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வசதியை குற்றவாளிகள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, ஈரான் அரசாங்கம் விசா விலக்கை நிறுத்தியுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 22-க்கு பிறகு விசா கட்டாயம்:

நவம்பர் 22, 2025 முதல், சாதாரண பாஸ்போர்ட் வைத்திருக்கும் இந்தியக் குடிமக்கள் ஈரானுக்குள் நுழையவோ அல்லது ஈரான் வழியாக வேறு நாடுகளுக்குச் செல்லவோ கட்டாயம் விசா பெற வேண்டும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்தியர்களுக்கான முக்கிய அறிவுரை

ஈரானுக்கு செல்லத் திட்டமிடும் இந்தியக் குடிமக்களை இந்திய வெளியுறவு அமைச்சகம் கடுமையாக எச்சரித்துள்ளது. 

விசா இல்லாமல் ஈரானுக்குச் செல்லலாம் என்றோ, அல்லது ஈரான் வழியாக மூன்றாம் நாடுகளுக்கு அழைத்துச் செல்வதாகவோ உறுதியளிக்கும் முகவர்களை நம்பிச் செல்லவோ வேண்டாம் என்று அனைத்து இந்தியர்களும் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு இந்தியக் குடிமக்களை இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.