துபாயில் ஆசிரியராகப் பணியாற்றுவதற்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
துபாயின் தனியார் கல்வித் துறையில், ஆசிரியர்கள் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர்களைப் பணிநியமனம் செய்வது, அவர்களின் நடத்தை மற்றும் அவர்களுக்கு இருக்கும் பொறுப்புகள் குறித்து வரையறுக்கும் வகையில் இரண்டு புதிய வழிகாட்டுதல்களை அறிவு மற்றும் மனித மேம்பாட்டு ஆணையம் (KHDA) வெளியிட்டுள்ளது.
இந்த புதிய வழிகாட்டுதல்களின் படி, ஆசிரியர்களின் தகுதி, அனுபவம், நடத்தை ஆகியவற்றில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதோடு, notice period எனப்படும் அறிவிப்புக் காலம் மற்றும் ராஜினாமா தொடர்பான புதிய விதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அவை பின்வருமாறு;
- Appointment Notice என்றால் என்ன? ஏன் அது மிக முக்கியம்?
இந்த புதிய வழிகாட்டுதலின் படி, ஆசிரியர்களுக்கு “Appointment Notice” வழங்கப்பட வேண்டும். இது KHDA வழங்கும் அதிகாரப்பூர்வ அனுமதியாகும். ஆனால் இது ஒரே ஒரு தனியார் பள்ளியில் மட்டுமே செல்லுபடியாகும். மாற்றுப் பள்ளிக்கு சென்றால் பழைய அனுமதி ரத்து செய்யப்பட்டு, புதிய பள்ளியில் பணியைத் தொடங்குவதற்கு புதிய அனுமதியைப் பெற வேண்டியது அவசியம்.
- ஒரு ஆசிரியரை நியமிக்கும் முன் பள்ளிகள் செய்ய வேண்டியவை?
குறைந்தது இரண்டு பேர் அவர்களைப் பரிந்துரைத்திருக்க வேண்டும். அதில் ஒன்று அவர்கள் சமீபத்தில் பணி செய்த இடத்திலிருந்து வந்த பரிந்துரையாக இருக்க வேண்டும்.
அவர்கள் வசித்த அனைத்து நாடுகளிலிருந்தும், குற்றச்செயல் மற்றும் அவர்களின் பின்னணி சரிபார்ப்பு
ஆன்லைன் மற்றும் ஊடகங்களை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்ற சோதனை
CV மற்றும் கல்வித் தகுதிகள் சரிபார்ப்பு
முறையாக பயிற்சி பெற்றவர்களுடனான நேர்காணல்
- KHDA -ஆல் ஏற்றுக்கொள்ளப்படும், துபாய் தனியார் பள்ளிகளில் அங்கீகரிக்கப்படும் தகுதிகள்?
UAE உயர்கல்வி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக பட்டங்கள்
துபாய் மற்றும் KHDA அங்கீகரித்த வெளிநாட்டு பல்கலைக்கழக கிளைகள்
சொந்த நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழக பட்டங்கள்
- ஏற்கனவே பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கும் இந்த புதிய வழிகாட்டுதல்கள் பொருந்துமா?
ஆம். ஆனால் குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே. ஏனெனில், ஏற்கனவே துபாயில் பணியாற்றும் ஆசிரியர்கள், வேறு பள்ளிக்கு மாற விரும்பாதவர்களாக இருந்தாலும், செப்டம்பர் 1, 2028-க்கு (அல்லது ஏப்ரல் 1, 2029 – ஏப்ரலில் தொடங்கும் பள்ளிகளுக்காக) முன் புதிய வழிகாட்டுதல்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
- 90 நாள் விதி என்றால் என்ன?
ஒரு ஆசிரியர் ராஜினாமா செய்யும்போது, KHDA விதிகளை முழுமையாகப் பின்பற்றாவிட்டால், அதாவது notice period முடியும் முன்பே விலகுதல், Exit Survey சமர்ப்பித்தல் போன்றவற்றைச் செய்யாவிட்டால், KHDA-விடமிருந்து புதிய Appointment Notice பெறுவதற்கு 90 நாள்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.
- KHDA Exit Survey ஏன் முக்கியம்?
ராஜினாமா செய்யும் ஒவ்வொரு ஆசிரியரும் இந்த Exit survey-வைப் பூர்த்தி செய்ய வேண்டும். இது ஆசிரியர் ஏன் ராஜினாமா செய்கிறார் என்பதற்கான காரணங்களை KHDA பதிவு செய்ய உதவுகிறது. இதன்மூலம் ஏதேனும் சிக்கல் இருப்பின் அதற்கான தீர்வுகளை உருவாக்க இயலும்.
- “Deregistration” என்றால் என்ன?
Deregistration என்பது KHDA அதிகாரப்பூர்வமாக அந்த நபரை துபாயின் எந்த தனியார் பள்ளியிலும், கல்வி நிறுவனங்களிலும் பணிபுரியத் தடை செய்வது. அவரின் “Appointment Notice” ரத்து செய்யப்பட்டு, பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், தொழில்பயிற்சி மையங்கள் என எங்கும் பணிக்குச் செல்ல முடியாது.
- எதனால் Deregistration செய்யப்படும்?
முக்கியக் காரணங்களாக குற்றவியல் தீர்ப்பு, குழந்தைகள் பாதுகாப்பு மீறல், ஒழுங்கீனம் போன்றவை இருந்தாலும், தொடர்ந்து பொய் பேசுதல், கலாச்சார மரியாதையின்மை, சமூக ஊடகங்களில் ஒழுக்கமற்ற நடத்தை இருந்தாலும், அவர்கள் Deregistration செய்யப்படுவார்கள்
- Deregistration வேறு Dismissal (பணி நீக்கம்)வேறு
Dismissal – ஒரு பள்ளி ஒருவரின் ஒப்பந்தத்தை ரத்து செய்வது.
Deregistration – KHDA ஒருவரை முழு கல்வித் துறையிலும் பணிசெய்ய முடியாத படி தடைவிதிப்பது.
பொதுவாக, பணி நீக்கம் செய்த பின்பு Deregistration நடக்கும். ஆனால் சில நேரங்களில் குற்றசாட்டுகள் இருந்தாலும் KHDA சான்றுகளை ஆய்வு செய்து Deregistration செய்யலாம். சில சமயங்களில், பணி நீக்கம் நடந்தாலும் Deregistration ஆகாது. அப்போது ஆசிரியர் வேறு இடத்தில் மீண்டும் பணியாற்றலாம்.
- பெற்றோருக்குப் பெருகும் நம்பிக்கை
இந்த புதிய விதிமுறைகள் மூலம் ஆசிரியர்கள் முறையாகச் சோதிக்கப்பட்டு மட்டுமே வகுப்பறைக்கு வருவார்கள். பணி விலகல்கள் கண்காணிக்கப்பட்டு, மாணவர்கள் கற்றலில் இடையூறு ஏற்படாமல் தடுக்கப்படும். இது பாதுகாப்பான பள்ளிகள், மாணவர்களுக்கு நிலைத்தன்மை, பெற்றோருக்கு நம்பிக்கை ஆகியவற்றை உறுதிசெய்கிறது.
