செப்டம்பர் 7ஆம் முழு சந்திர கிரகணம் நிகழ உள்ள நிலையில், அதனை காண்பதற்கு துபாய் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
சந்திர கிரகணம்:
சூரியன், பூமி, நிலா ஆகிய மூன்று கோள்களும் ஒரே நேர்கோட்டில் வரும் போது சந்திரகிரகணம் ஏற்படுகிறது. அப்போது பூமி, சூரிய ஒளியை நிலா மேல் விழாமல் தடுப்பதால் நிலா சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இதை ரத்த நிலவு (Blood Moon) என்றும் அழைக்கப்படுகிறது.
இந்தநிலையில், வரும் செப்டம்பர் 7ஆம் முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்த சந்திர கிரகணத்தை ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, அலாஸ்கா, தென் அமெரிக்காவின் கிழக்கு ஆகிய பகுதிகளில் காணலாம்.
முழு சந்திர கிரகணம்
இந்த கிரகணத்தின் முழுமை நிலையில் நீண்ட நேரம் நீடிப்பதாலும், அதன் நிறம் மிகவும் தெளிவாக இருப்பதாலும், உலகின் கிட்டத்தட்ட 87% மக்கள் இதை காண முடியும் என்பதாலும் இது மிகவும் சிறப்பான நிகழ்வாகும். அந்த வகையில் ஐக்கிய அரபு அமீரகத்திலும் காணலாம்.
அமீரகத்தில் தெரியுமா?
- செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கும் இந்த சந்திர கிரகணம், 8ஆம் தேதி அதிகாலை வரை வானில் தெரியும்.
- துபாய் வானியல் குழு (Dubai Astronomy Group – DAG) இந்த கிரகணத்தை, பத்தாண்டுகளில் நிகழும் படம் பிடிக்க சிறந்த சந்திர கிரகணம் என குறிப்பிட்டுள்ளது. இந்த கிரகணம் மொத்தம் 82 நிமிடங்கள் நீடிக்கும்.
- துபாயில் இதை காண்பதற்காக பொது மக்களுக்கு சிறப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், நேரடி ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- துபாய் வானியல் குழுவின் கூற்றுப்படி, ரத்த நிலாவின் சிவப்பு நிறம் பூமியின் வளிமண்டலம் வழியாக வரும் சூரிய ஒளியினால் ஏற்படுகிறது. வளிமண்டலம் நீல ஒளியை வடிகட்டி, சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிற ஒளியை மட்டும் நிலவை அடைய அனுமதிப்பதால் இந்த நிகழ்வு ஏற்படுகிறது.
எப்போது பார்க்கலாம்?
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருப்பவர்கள் கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் இந்த சந்திர கிரகண நிகழ்வைக் கண்டுகளிக்கலாம்.
- செப்.7 இரவு 7:28 – பெனும்ப்ரல் கிரகணம் தொடக்கம்
- இரவு 8:27 – பகுதி கிரகணம் தொடக்கம்
- இரவு 9:30 – முழு கிரகணம் தொடக்கம்
- இரவு 10:12 – உச்சகட்ட கிரகணம் (முழுமை)
- இரவு 10:53 – முழு கிரகணம் முடிவு
- இரவு 11:56 – பகுதி கிரகணம் முடிவு
- செப்.8 அதிகாலை 12:55 – பெனும்ப்ரல் கிரகணம் முடிவு
கிரகணத்தின் நிலைகள்:
- பெனும்பிரல் நிலை (Penumbral phase): சந்திரன் பூமியின் வெளி நிழல் பகுதிக்குள் நுழையும். இந்த நிலையில், நிலவின் ஒளி சற்று மங்கும். இதை வெறும் கண்ணால் பார்ப்பது கடினம்.
- பகுதி நிலை (Partial phase): சந்திரன் பூமியின் அடர்ந்த நிழல் பகுதிக்குள் நுழையும். அப்போது நிலவின் மேற்பரப்பில் ஒரு “கடிந்த” பகுதி போல் தெரியும்.
- முழுமை நிலை (Totality): சந்திரன் முழுவதுமாக பூமியின் நிழலுக்குள் இருக்கும். இந்த நிலையில்தான் நிலவு சிவப்பு, செம்பு, அல்லது ஆரஞ்சு நிறங்களில் தோன்றும்.
- முடிவு நிலைகள் (Ending phases): சந்திரன் படிப்படியாக நிழலில் இருந்து வெளியேறி, இந்த செயல்முறை தலைகீழாக நடக்கும்.
எப்படி பார்ப்பது?
இந்த கிரகணத்தை வெறும் கண்களாலே பார்க்க முடியும். இருப்பினும், தொலைநோக்கி பயன்படுத்தினால் நிலவின் மேற்பரப்பை இன்னும் தெளிவாகவும், சிவப்பு நிறத்தை ஆழமாகவும் காணலாம். மேலும், ஒரு ட்ரைபாட் கொண்ட கேமராவைப் பயன்படுத்தி சிறந்த புகைப்படங்களை எடுக்கலாம் என்று துபாய் வானியல் குழு தெரிவித்துள்ளது.
சிறப்பு ஏற்பாடு:
துபாய் வானியல் குழு இந்த சந்திர கிரகணத்தை துபாயில் இருந்து நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இந்த நேரடி ஒளிபரப்பில், புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் ராமி டிபோவுடன் இணைந்து, புர்ஜ் கலிஃபாவுடன் கிரகணத்தைப் படம்பிடிக்கும் ஒரு சிறப்பு முயற்சியும் நடைபெற உள்ளது.
அடுத்த கிரகணம் எப்போது?
அடுத்த சந்திர கிரகணத்தைக் காண ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள் ஜூலை 6, 2028 வரை காத்திருக்க வேண்டும். அது ஒரு பகுதி கிரகணமாக இருக்கும்.
அதற்குப் பிறகு, ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு முழு சந்திர கிரகணம் டிசம்பர் 31, 2028 அன்று நிகழும்.
