ஐக்கிய அரபு அமீரகம் 2026-ம் ஆண்டில் ஒரு புதிய சகாப்தத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. உள்கட்டமைப்பு வசதிகள், டிஜிட்டல் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக நலன் சார்ந்த பல அதிரடி மாற்றங்கள் வந்துள்ளன.
வெள்ளிக்கிழமை தொழுகை மற்றும் பள்ளி நேர மாற்றம்:
ஜனவரி 2, 2026 முதல், ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் வெள்ளிக்கிழமை ஜூமா தொழுகை மற்றும் சொற்பொழிவுகள் மதியம் 12:45 மணிக்கு நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, மாணவர்கள் தொழுகைக்குச் செல்ல வசதியாக பள்ளிகள் வெள்ளிக்கிழமை காலை 11:30 மணிக்கே நிறைவடையும்.
எத்திஹாட் ரயில் (Etihad Rail) சேவை
இந்த ஆண்டு முதல் எத்திஹாட் ரயில் சேவை தொடங்குகிறது. இது அபுதாபி முதல் துபாய் வரை வெறும் 57 நிமிடங்களிலும், அபுதாபியில் இருந்து புஜைராவுக்கு 105 நிமிடங்களிலும் செல்ல வழிவகை செய்யும். இதன் மூலம் சாலை போக்குவரத்து நெரிசல் குறையும்.
துபாயில் பறக்கும் டாக்சிகள்
துபாயில் மின்சாரத்தில் இயங்கும் பறக்கும் டாக்சிகள் இந்த ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வருகின்றன. இது மணிக்கு 300 கி.மீ வேகத்தில் செல்லும். இதன் மூலம் ஒரு எமிரேட்டில் இருந்து மற்றொரு எமிரேட்டுக்கு 30 நிமிடங்களுக்குள் சென்றுவிடலாம். இதன் முதல் நிலையம் துபாய் விமான நிலையத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.
வங்கிகளில் OTP முறையில் மாற்றம்
ஆன்லைன் பணப் பரிமாற்றங்களுக்கு இனி மொபைலுக்கு வரும் SMS OTP வசதி இருக்காது. அதற்கு பதிலாக, வங்கியின் அதிகாரப்பூர்வ மொபைல் ஆப் மூலமாகவே பரிமாற்றங்களை உறுதி செய்ய வேண்டும். இது பண மோசடிகளைத் தடுக்க கொண்டுவரப்பட்டுள்ளது
பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை
ஜனவரி 1 முதல் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் கப்புகள், ஸ்பூன்கள், ஸ்ட்ராக்கள் (Straws) மற்றும் ஸ்டைரோஃபோம் (Styrofoam) உணவுக் கொள்கலன்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 50 மைக்ரானுக்கும் குறைவான தடிமன் கொண்ட காகிதப் பைகளுக்கும் இந்தத் தடை பொருந்தும்.
புதிய வரி மாற்றங்கள் (VAT & Sugar Tax)
VAT: தொழில் செய்பவர்களுக்கு வசதியாக வாட் (VAT) வரி நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன.
சர்க்கரை வரி: குளிர்பானங்களில் உள்ள சர்க்கரையின் அளவைப் பொறுத்து வரி விதிக்கப்படும். அதிக சர்க்கரை இருந்தால் அதிக வரி செலுத்த வேண்டும். இது மக்கள் ஆரோக்கியமான பானங்களைத் தேர்ந்தெடுக்க ஊக்குவிக்கும்.
ஒருங்கிணைந்த GCC சுற்றுலா விசா
ஒரே ஒரு விசாவை வைத்து சவூதி அரேபியா, ஓமன், கத்தார், குவைத், பஹ்ரைன் மற்றும் அமீரகம் ஆகிய ஆறு நாடுகளுக்கும் பயணம் செய்யும் புதிய வசதி இந்த ஆண்டு அறிமுகமாகிறது.
குடும்பங்களுக்கான ஆண்டு (Year of Family)
அமீரக அதிபர் 2026-ம் ஆண்டை ‘குடும்பங்களின் ஆண்டு’ என அறிவித்துள்ளார். குடும்ப உறவுகளை வலுப்படுத்தவும், கலாச்சாரத்தைப் பாதுகாக்கவும் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
சோஷியல் மீடியா விளம்பரதாரர்களுக்கு லைசென்ஸ்:
இன்ஸ்டாகிராம், டிக்டாக் போன்ற சமூக வலைதளங்களில் பொருட்களை விளம்பரம் செய்பவர்கள் அல்லது விமர்சனம் (Review) செய்பவர்கள் ஜனவரி 31, 2026-க்குள் விளம்பரதாரர் அனுமதி (Advertiser Permit) பெற வேண்டும். இது முதல் மூன்று ஆண்டுகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
முக்கிய சட்ட மாற்றங்கள்
வயது வரம்பு: சுயமாக முடிவெடுக்கும் மற்றும் நிதி விவகாரங்களைக் கையாளும் சட்டப்பூர்வ வயது 21-லிருந்து 18 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் பாதுகாப்பு: ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் இணையதளங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யக் கடுமையான விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
வளர்ப்பு குழந்தை (Foster Care): வெளிநாட்டவர்கள் மற்றும் தனியாக இருக்கும் பெண்கள், ஆதரவற்ற குழந்தைகளை வளர்க்க அனுமதிக்கும் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது
புதிய இடங்களில் பார்க்கிங் கட்டணம்:
துபாயில் உள்ள இன்டர்நேஷனல் சிட்டி பகுதியில் பிப்ரவரி 1 முதலும், டிஸ்கவரி கார்டன்ஸ் பகுதியில் ஜனவரி 15 முதலும் கட்டண பார்க்கிங் முறை அமலுக்கு வருகிறது.
