தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வெளியிட்டுள்ள தகவலின்படி, அமீரகத்தில் வரவிருக்கும் நாட்களில் லேசான மழை மற்றும் குளிர்ச்சியான வானிலை நிலவ வாய்ப்புள்ளது.
இந்த வாரத்திற்கான வானிலை:
டிசம்பர் 24 (புதன்): இரவு மற்றும் வியாழக்கிழமை காலை நேரங்களில் உள்நாட்டுப் பகுதிகளில் காற்றின் ஈரப்பதம் அதிகரிக்கக்கூடும். இதன் காரணமாக அடர் மூடுபனி ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
காற்றானது வடகிழக்கு அல்லது வடமேற்கு திசையிலிருந்து லேசானது முதல் மிதமான வேகத்தில் வீசும். சில நேரங்களில் காற்றின் வேகம் மணிக்கு 35 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும். அரபிக்கடல், ஓமன் கடலில் அலைகள் மிதமாக இருக்கும்.
டிசம்பர் 25 (வியாழன்): தீவுகள், கடலோரப் பகுதிகள் மற்றும் வடக்கு பகுதிகளில் அவ்வப்போது மேகமூட்டம் அதிகரிக்கக்கூடும். இதன் காரணமாக இப்பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இரவு நேரத்திலும், வெள்ளிக்கிழமை அதிகாலையிலும் ஈரப்பதம் நீடிக்கும்.
இதனால் உள்நாட்டுப் பகுதிகளில் மீண்டும் மூடுபனி அல்லது பனிமூட்டம் உருவாகக்கூடும். வடமேற்கு திசையிலிருந்து வீசும் காற்றானது அவ்வப்போது பலமடைந்து, மணிக்கு 40 கி.மீ வேகம் வரை வீச வாய்ப்புள்ளது. அரபிக்கடல் சில நேரங்களில் கொந்தளிப்பாக காணப்படும். ஓமன் கடலில் அலைகள் மிதமாக இருக்கும்.
டிசம்பர் 26 (வெள்ளி): வானம் பொதுவாகத் தெளிவாகவோ அல்லது அவ்வப்போது மேகமூட்டத்துடனோ காணப்படும். தீவுகள் மற்றும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் அவ்வப்போது மேகங்கள் உருவாகி ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு மற்றும் சனிக்கிழமை அதிகாலை நேரங்களில் காற்றின் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். இதனால் உள்நாட்டுப் பகுதிகளில் மூடுபனி அல்லது பனிமூட்டம் உருவாக வாய்ப்புள்ளது. காற்றானது லேசானது முதல் மிதமான வேகத்தில் வீசும். சில நேரங்களில் காற்றின் வேகம் அதிகரித்து சற்று பலமாக வீசக்கூடும். அரபிக்கடல் மற்றும் ஓமன் கடல் அமைதியாக இருக்கும்.
டிசம்பர் 27 (சனி): பகல் பொழுதில் வானம் தெளிவாகவோ அல்லது மேகமூட்டத்துடனோ காணப்படும். இரவு நேரத்தில் தீவுகள் மற்றும் மேற்கு கடல் பகுதிகளில் மேகமூட்டம் அதிகரிக்கக்கூடும். சனிக்கிழமை இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேரங்களில், கடலோர மற்றும் உள்நாட்டுப் பகுதிகளில் ஈரப்பதம் அதிகரிக்கும்.
இதன் காரணமாக லேசான பனிமூட்டம் உருவாக வாய்ப்புள்ளது. காற்றானது லேசானது முதல் மிதமான வேகத்தில் வீசும். அரபிக்கடல், ஓமன் கடல் லேசான அலைகளுடன் காணப்படும். ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த வாரம் முழுக்க மழை பெய்யும் என தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
