ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியத் தொழிலாளர்களுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. வருடத்திற்கு AED 32 பிரீமியத்தில் AED 35,000 இழப்பீடு வழங்கும் இந்தத் திட்டம், அமீரகத்தில் இறந்த தொழிலாளர்களின் உடல்களை தாய்நாட்டுக்கு அனுப்பும் செலவையும் உள்ளடக்குகிறது.
புதிய காப்பீட்டுத் திட்டம்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புதிய காப்பீட்டுத் திட்டம், இந்திய நீல நிற கழுத்துப்பட்டை தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவியை வழங்குகிறது. இயற்கை அல்லது விபத்து மூலம் மரணம் ஏற்பட்டால், AED 35,000 இழப்பீட்டுத் தொகையை வருடத்திற்கு AED 32 என்ற குறைந்த பிரீமியத்தில் வழங்குகிறது.
இதற்காக, துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம், இந்தியத் தொழிலாளர்களைப் பணியமர்த்தும் முக்கிய நிறுவனங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களான நெக்ஸஸ் இன்ஸூரன்ஸ் ப்ரோகர்ஸ் (Nexus Insurance Brokers), துபாய் நேஷனல் இன்ஸூரன்ஸ் Dubai National Insurance) ஆகியவற்றுக்கு இடையே ஒருங்கிணைப்பு செய்து இத்திட்டத்தை உருவாக்கியுள்ளது.
இத்திட்டத்தில், இறந்தவர்களின் உடல், உலகின் எந்தப் பகுதிக்கும் அனுப்ப AED 12,000 வரை செலவு ஈடுசெய்யப்படும். இதற்கு முன் இந்தத் தொகை AED 10,000- ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இந்திய துணைத் தூதர் சதீஷ் குமார் சிவன், “தொழிலாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தை முன்வைக்க, ஓரியண்ட் மற்றும் கார்காஷ் இன்ஸூரன்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டோம். இது மிகக் குறைந்த பிரீமியத்தில், தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு முக்கியமான உதவியை வழங்குகிறது.
இயற்கை மரணம், பணியிடத்தில் நடந்த விபத்து மரணம், பகுதி அல்லது முழு ஊனமுற்ற நிலை போன்றவற்றை இது உள்ளடக்குகிறது. மேலும், இறந்தவர்களின் உடல் தாய்நாட்டுக்கு அனுப்பும் செலவையும் இது ஈடுசெய்கிறது” என்றார்.
திட்டத்தின் பின்னணி:
2023ல் தொழிலாளர்களுக்கான காப்பீட்டுத் தேவை குறித்து ஆய்வு செய்யப்பட்டபோது, பெரும்பாலான நிறுவனங்கள் ஆரோக்கிய காப்பீடு மற்றும் தொழிலாளர் இழப்பீடு ஆகியவற்றை மட்டுமே வழங்குவது கண்டறியப்பட்டது. இவை பணியிடத்தில் ஏற்படும் காயங்கள் அல்லது மரணங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
இயற்கை மரணத்திற்கான கட்டாயக் காப்பீடு எதுவும் இல்லாததால், இத்திட்டம் 2024 மார்ச் 1ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம், தொழிலாளர்களின் மரணம் அல்லது ஊனமுற்ற நிலைக்கு AED 75,000 வரை இழப்பீடு வழங்கப்படுகிறது.
