அமீரகத்தில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது.
கடந்த மூன்று மாதங்களாக வாட்டி வதைத்து வந்த கோடை வெப்பம் படிப்படியாக குறையத் தொடங்கி மழை பெய்யத் துவங்கியுள்ளதால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் இதமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் மக்களின் மனதை மேலும் குளிர்விக்கும் வகையில் அமீரக வானிலை மையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வானிலை மையம் தகவல்
அமீரகத்தின் தெற்கு பகுதியில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்தம் காரணமாக நாளை முதல் 5 நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தகவல். இந்த குறைந்த காற்றழுத்தம் காரணமாக அக்டோபர் 10 முதல் 14 வரை நாட்டின் வடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும் உட்பகுதிகளில் மழை பெய்யக்கூடும். சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழையால் வெப்பநிலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. காற்றின் வேகம் தென்கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் மிதமாக வீசக்கூடும். கடல் வழக்கத்தை விட சீற்றமாக காணப்படும் என தேசிய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
