அடுத்த ஆண்டு ரமலான் மாதம் எந்த தேதியில் தொடங்கும் என்பதை அமீரக வானியல் சங்க தலைவரும் வானியலாளருமான இப்ராஹிம் அல் ஜர்வான் தெரிவித்துள்ளார்.
2026 ரமலான் மாதம்
உலகம் முழுவதும் உள்ள பல கோடி இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாக திகழும் ரமலான் பண்டிகை, நோன்பு மாதமான ரமலானின் நிறைவைக் குறிக்கும் புனித நாளாகும். இஸ்லாமிய நாட்காட்டியின் படி, ஆங்கில நாட்காட்டியில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு தேதியில் தொடங்கும் ரமலான் மாதம் 2026ஆம் ஆண்டில் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கும் என அமீரக வானியல் சங்கத் தலைவர் இப்ராஹிம் அல் ஜர்வான் தெரிவித்துள்ளார்.
ரமலான் மாதத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் பிறை நிலவு பிப்ரவரி 17, செவ்வாய்க்கிழமை அமீரக நேரப்படி மாலை 4:01 மணிக்கு பிறக்கும் என்று இப்ராஹிம் அல் ஜர்வான் கூறினார். இருப்பினும், சூரிய அஸ்தமனத்திற்கு ஒரு நிமிடம் கழித்து பிறை மறைந்துவிடும் என்பதால் ரமலான் மாதத்தின் முதல் நாள் பிப்ரவரி 19, வியாழக்கிழமை வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
அதிகரிக்கும் நோன்பு நேரம் மற்றும் வெப்பநிலை
நோன்பு நேரம் ரமலான் மாத தொடக்கத்தில் தோராயமாக 12 மணி நேரம் 46 நிமிடங்களில் தொடங்கி, மாத இறுதிக்குள் படிப்படியாக 13 மணி நேரம் 25 நிமிடங்களாக அதிகரிக்கும் என்று அல் ஜர்வான் தெரிவித்தார். ரமலான் மாத தொடக்கத்தில் வெப்பநிலை 16°C முதல் 28°C வரை இருக்கும். அதுவே, ரமலான் மாத இறுதிக்குள் 19°C முதல் 32°C வரை உயரும் என அவர் குறிப்பிட்டார்.
