துபாய் போக்குவரத்து தினம்; சிறப்பு நிகழ்வுகள், AED 10,000 ரொக்கப்பரிசு, தங்கக் கட்டி பரிசு என பொதுமக்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியங்கள்

துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) 15-வது போக்குவரத்து தினத்தை கொண்டாடுகிறது, இதனை முன்னிட்டு பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துவோருக்கு AED 10,000 பரிசுத்தொகை, 50 கிராம் தங்கக் கட்டி போன்றவை வழங்கவும், சிறப்பு நிகழ்ச்சிகளையும் அக்டோபர் 28 முதல் நவம்பர் 01 வரை நடத்த RTA திட்டமிட்டுள்ளது.

போக்குவரத்து தினம் என்றால் என்ன?

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 01 ஆம் தேதி பொதுமக்கள் மெட்ரோ, பேருந்து, டிராம், நீர் வழிப் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து பொது போக்குவரத்து சேவைகளையும் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் பொருட்டு, பொது போக்குவரத்து தினம் கொண்டாடப்படுகிறது.

அனைவரிடமும் பொது போக்குவரத்து பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம், நகரத்தின் வாழக்கை தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இது கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாண்டு  “உங்கள் சிறந்த பாதை துபாயை சிறந்த எதிர்காலத்தை நோக்கி அழைத்துச் செல்கிறது.” என்ற கருவை அடிப்படையாக கொண்டு கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு கொண்டாட்டங்கள் என்ன?

இந்த ஆண்டு போட்டிகள், நிகழ்வுகள், அதிக முறை போக்குவரத்தை பயன்படுத்தியோருக்கு பரிசுகள் என பலவற்றை ஆணையம் திட்டமிட்டுள்ளது.

ஆறு பிரிவுகளின் கீழ் பரிசை பிரித்து பரிசு வழங்க முடிவு

  • 2009 முதல் நவம்பர் 01, 2024 வரை பயன்படுத்தியோர்,
  • அக்டோபர் 28 முதல் நவம்பர் 01 வரை பயன்படுத்துபவர்கள்,
  • அதிக முறை பயன்படுத்திய RTA ஊழியர் பிரிவு,  
  • அதிக முறை பயன்படுத்திய மாற்றுத்திறனாளி பிரிவு,
  • அதிக முறை பயன்படுத்திய மூத்த குடிமக்கள் பிரிவு,
  • அதிக முறை பயன்படுத்திய மாணவர் பிரிவு.

எனும் ஆறு பிரிவுகளில், 1 மில்லியன் வரை நோல் புள்ளிகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

மர்ம மனிதனை கண்டுபிடியுங்கள்

வருகின்ற அக்டோபர் 30 முதல் நவம்பர் 1 வரை துபாய் மெட்ரோ நிலையங்களில் மர்ம மனிதனை (Mysterious Man Challenge) கண்டறியும், கலகலப்பான நிகழ்வு ஒன்று நடத்தப்படுகிறது.

இதில் வெல்லும் ஒவ்வொரு நபருக்கும் AED 10,000 வரை பரிசுத்தொகையும் வழங்கப்படுகிறது. நவம்பர் 01 அன்று, வெற்றிபெற்றவர்களுள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நபருக்கு 50 கிராம் தங்கக் கட்டி பரிசாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இவ்வாண்டின் போக்குவரத்து தினத்துக்கு சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் திட்டமிட்டுள்ளது.