இந்தியா – அமீரகம் இடையேயான கூட்டாண்மையை வலுப்படுத்த அரசு முறைப் பயணமாக டெல்லி சென்றுள்ள அமீரக வெளியுறவுத்துறை அமைச்சர்

அமீரக வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான், 15வது இந்தியா – அமீரக கூட்டு ஆணையக் கூட்டம் மற்றும் நான்காவது India-UAE Strategic Dialogue  ஆகிய நிகழ்வுகளில் பங்கேற்க நேற்று புது டெல்லி சென்றடைந்தார். இந்த கூட்டங்கள் மூலம் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா இடையேயான பன்முக விரிவான மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த நடைபெறவுள்ளது. சென்ற முறை 2022 ஆம் ஆண்டு இந்திய வெளியுறவுத்துறை திரு ஜெய் ஷங்கர் பங்கேற்று அபுதாபியில் நடைபெற்றது.

இந்தியப் பிரதமர் மோடியுடன் சந்திப்பு:

அமீரக வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான், அவர்கள் தான் பங்கேற்க திட்டமிட்டிருந்த கூட்டங்களுக்கு முன் மரியாதை நிமித்தமாக இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களை சந்தித்தார். அப்போது அமீரக பிரதமர் மற்றும் துபாய் மன்னர் மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் சார்பாக “இந்தியாவிற்கு வருகை புரிவதில் மகிழ்ச்சியடைவதோடு, இந்திய மக்களின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கும், செழிப்பான வாழ்க்கைக்கும் தனது வாழ்த்துக்களை அவர் பகிர்ந்து கொண்டார்.

மோடியுடன் ஆலோசனை:

இருவரின் சந்திப்பின் போது இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் அமீரக அதிபருக்கு தனது வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார். மேலும் செப்டம்பர் 2024 இல் அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் கலீத் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இந்தியாவிற்கு வருகை தந்தது குறித்தும், இருதரப்பு உறவுகளிலும் தலைமுறை தாண்டி உறவுகள் தொடர்வது குறித்தான மகிழ்ச்சியையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

தொழில்நுட்பம், ஆற்றல் மற்றும் மக்களிடையேயான உறவுகள் உள்ளிட்ட விவகாரங்களில் விரிவான மூலோபாய கூட்டாண்மையை வலுப்படுத்துவதை வெளியுறவுத்துறை அமைச்சரும், பிரதமரும் வலியுறுத்தினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இரு நாடுகளுக்குமான தொடர்பு மற்றும் செழிப்பை வளர்ப்பதற்கான வரலாற்று முயற்சியாக இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா வழித்தடத்தை (IMEEC) செயல்படுத்துவதில் பிரதமர் சிறப்பு கவனம் செலுத்தி பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமீரகத்தில் உள்ள மிகப் பெரிய மற்றும் துடிப்பான இந்திய சமூகத்தின் நலனை உறுதி செய்து வருவதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமைக்கு பிரதமர் நன்றியையும் இறுதியில் பகிர்ந்து கொண்டார்.

கூட்டங்களில் இடப்பட்ட ஒப்பந்தங்கள்:

15வது இந்தியா – அமீரக கூட்டு ஆணையக் கூட்டத்தில் இடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து அமைச்சர் ஜெய்ஷங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார் அதில் “பொருளாதார வர்த்தக உறவுகள், எரிசக்தி பாதுகாப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பு, மக்களிடையேயான உறவுகள், கலாச்சார பாரம்பரிய இணைப்புகள், நமது இரு பிராந்தியங்களின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்துதல் உள்ளிட்ட நமது விரிவான மூலோபாய கூட்டாண்மையின் பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினோம் எனவும், துருவ ஆராய்ச்சி கூட்டுறவில் (Polar Research Collaboration ) புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறப்பட்டது. மேலும் மேற்கு ஆசியாவின் வளர்ச்சிகள், IMEC, I2U2 இல் உள்ள எங்கள் கூட்டாண்மை மற்றும் பல்வேறு உலகளாவிய பிரச்சினைகளில் எங்கள் ஒருங்கிணைப்பு பற்றிய முன்னோக்குகளைப் பகிர்ந்து கொள்கிறோம் என்று அவர் பதிவிட்டுள்ளார்.