உலக மக்களுக்கு உதவிடும் வகையில், ‘ரஷித்  வில்லேஜஸ்’ திட்டத்தை அறிமுகப்படுத்திய இளவரசர்!

துபாயின் இளவரசர் மாண்புமிகு ஷேக் ஹம்தான் அவர்கள், தனது மறைந்த சகோதரர் ஷேக் ரஷித் அவர்களின் நினைவாக, உலகம் முழுவதும் உள்ள ஏழை மக்களுக்காக ‘ரஷித்  வில்லேஜஸ்’’ என்ற திட்டத்தை அறிவித்துள்ளார்.

‘ரஷித் வில்லேஜஸ்’ திட்டம்:

மறைந்த தன் சகோதரர் ஷேக் ரஷித் அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவு நாளில், துபாய்  இளவரசர் மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள்,  ‘ரஷித் வில்லேஜஸ்’ (Rashid Villages) என்ற மனிதாபிமான திட்டத்தை அறிவித்துள்ளார்.  உலகம் முழுவதும் உள்ள ஏழை குடும்பங்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் நோக்கில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் ஏழை குடும்பங்களுக்கு வீட்டு வசதி, கல்வி, மருத்துவம் மற்றும் சமூக சேவைகளுடன் கூடிய முன்மாதிரி கிராமங்களை உருவாக்கி, ஒரு கண்ணியமான வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியத் தேவைகளை வழங்குகிறது.

கென்யாவில் ரஷித் வில்லேஜஸ்

இந்தத் திட்டத்தின் முதல் கட்டம், கென்யாவில் 7.2 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைக்கப்பட உள்ளது. இது 1,700 பேருக்கு தேவையான வீடுகள், கல்வி, மருத்துவம் மற்றும் பிற வசதிகளை வழங்கவுள்ளது.

நிலையான வடிவமைப்பு: இந்த கிராமம் சூரிய ஆற்றல் போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை கொண்டு, நீடித்த வளர்ச்சியை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்படும்.

சமூக வசதிகள்: இங்கு முழுமையாக வசதியுடன் கூடிய வீடுகள், ஒரு மசூதி, 500-க்கும் மேற்பட்டோர் அமரக்கூடிய பல்நோக்கு மண்டபம் மற்றும் வணிக மையங்கள் ஆகியவை அமைக்கப்படும்.

விளையாட்டு மற்றும் கல்வி: இளைஞர்களுக்காக கால்பந்து மைதானம் மற்றும் ஒரு விளையாட்டு அகாடமி ஆகியவை உருவாக்கப்படும். மேலும், ‘முகமது பின் ரஷித் அல் மக்தூம் குளோபல் இனிஷியேடிவ்ஸ்’ (MBRGI) அமைப்பின் கீழ் இயங்கும் டிஜிட்டல் பள்ளியின் உதவியுடன், 320 மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்படும்.

பொருளாதார மேம்பாடு: குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, தொழில் பயிற்சி மற்றும் சிறு வணிகங்களைத் தொடங்குவதற்கான ஆதரவும் வழங்கப்படும்.

சுகாதாரப் பாதுகாப்பு: கிராமத்தில் ஒரு சுகாதார மையம் அமைக்கப்பட்டு, மருத்துவ பராமரிப்பு, தடுப்பு சேவைகள் மற்றும் சுகாதார கல்வி ஆகியவை வழங்கப்படும். சுத்தமான தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய நீர் தேக்க தொட்டிகளும் நிறுவப்படும்.

மறைந்த சகோதரன் நினைவாக மனிதநேயப் பணி

தனது சகோதரரின் மனிதநேயப் பணிகளை நினைவு கூர்ந்த துபாய் இளவரசர் மாண்புமிகு ஷேக் ஹம்தான் அவர்கள்,  ”உலகிற்கு நம்பிக்கையையும், நன்மையையும் கொண்டு செல்லும் துபாயின் மனிதாபிமான திட்டங்கள் மற்றும் முயற்சிகள் மூலம் என் சகோதரனது நினைவு உயிர்ப்புடன் இருக்கும்” என்று அவர் கூறினார்.

ஒவ்வோர் ஆண்டும் ஒரு புதிய மாதிரி கிராமத்தை அமைத்து, மறைந்த ஷேக் ரஷித் அவர்களின் மனிதாபிமானப் பணியை முன்னெடுத்துச் செல்ல இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.