அமீரகத்தின் மாபெரும் இஃப்தார் விருந்து; எங்கு எப்படி தயாராகிறது தெரியுமா?

ரமலானை முன்னிட்டு அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிராண்ட் மசூதியின் சமையல் கூடத்தில் தினமும் 95,000 இஃப்தார் உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.

இஸ்லாமியர்கள் பெரும்பாலானோர் வசிக்கும் அமீரகத்தில் பல மசூதிகள் உள்ளன. அவற்றில் முக்கியமானதாக பார்க்கப்படுவது அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிராண்ட் மசூதி. இங்கு ரமலான் மாதத்தில் தினமும் ஆயிரக்கணக்கானோர் ஒன்றாக கூடி நோன்பு திறக்கின்றனர். 

இவர்களுக்கு வழங்குவதற்காக இஃப்தார் உணவுகள் தயாரிக்க மசூதியின் வளாகத்திலேயே மிக பெரிய சமையல் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தினமும் 95,000 இஃப்தார் உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.

ஷேக் சயீத் அவர்களின் முயற்சி 

அமீரகத்தின் முன்னாள் அதிபரான மறைந்த மாண்புமிகு ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்களின் உத்தரவின்படி, 2004ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ரமலான் மாதத்திலும் அபுதாபியில் பிரமாண்டமான சமையல் கூடத்தில் இஃப்தார் உணவுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அமீரகத்தின் ஆழமான வேரூன்றிய தாராள மனப்பான்மை மற்றும் சமூக சேவையின் மதிப்புகளைப் பிரதிபலிக்கும் முயற்சியாக தொடர்ந்து 22 ஆண்டுகளாக ரமலான் மாதத்தில் இந்த சேவை செய்யப்படுகிறது.

எப்படி தயாரிக்கப்படுகிறது?

இஃப்தார் உணவு தயாரிப்பு அதிகாலை 5 மணி முதல் காய்கறிகள், கனிகள் மற்றும் இறைச்சிகளை சுத்தம் செய்வது மற்றும் நறுக்குவதிலிருந்து தொடங்குகிறது. அதன் பின்னர் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை சமையல் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன.

தொடர்ந்து நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை சமைத்த உணவுகளை பேக்கிங் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. இறுதியாக மாலை 5 மணி முதல் பேக் செய்யப்பட்ட உணவுகள், இஃப்தார் நடைபெறும் பகுதிக்கு அனுப்பிவைக்கப்படும். 

95,000 இஃப்தார் உணவுகள்

ரமலான் மாதத்தில் இந்த சமையல் கூடத்தில் தினமும் கிட்டத்தட்ட 95,000 உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. இதற்காக தினமும் 30,000 கிலோ கோழிக்கறி, 15,000 கிலோ ஆட்டுக்கறி, 15,000 கிலோ அரிசி,  2,500 கிலோ பருப்பு, 15,000 கிலோ காய்கறிகள், 750 கிலோ மசாலாப் பொருட்கள், 130 லிட்டர் எண்ணெய் என தினமும் மொத்தமாக ஆயிரக்கணக்கான கிலோ இறைச்சிகள் மற்றும் காய்கறிகள் பயன்படுத்தப்படுகின்றன. இப்பணியில் தினமும் 2,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுகின்றனர்.

ஒரு உணவுப்பெட்டி; பலரின் உழைப்பு; அமீரகத்தின் அடையாளம் 

ரமலானில் ஒவ்வொரு நாளும் மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு இஃப்தார் நடைபெறும் இடத்தில் உணவு பெட்டிகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். இந்த தருணத்திற்கு பின்னால் பலரின் உழைப்பும், அமீரகத்தின் சேவை மனப்பான்மையும் அடங்கியுள்ளது. 

அமீரகத்தின் சேவை மனப்பான்மை

ரமலான் மாதத்தில் ஒவ்வொரு நாளும் மாலை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு நடைபெறும் இஃப்தார் நிகழ்வுக்காக, உணவுப் பெட்டிகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை காணலாம். இந்த எளிய காட்சியின் பின்னால், பலரின் கடின உழைப்பும், அமீரகத்தின் சேவை மனப்பான்மையும், மனிதாபிமானமும் மறைந்துள்ளது. அதுமட்டுமின்றி ஒரு உணவுப்பெட்டி பலரின் அர்ப்பணிப்பையும், ஒற்றுமையையும், அமீரகத்தின் சேவை மனப்பான்மையையும் பிரதிபலிக்கிறது.

TAGGED: