சாடியத் கலாச்சார மாவட்டத்தின் (Saadiyat Cultural District) மையமாக விளங்கும் சயீத் தேசிய அருங்காட்சியகம், ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) 300,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு, பாரம்பரியம் மற்றும் அடையாளத்தைக் கூறும் ஒரு அற்புதமான பயணத்தை வழங்குகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் தந்தை, மாண்புமிகு ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்களின் வாழ்க்கை மற்றும் பாரம்பரியத்தை மையமாகக் கொண்டு இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகம் டிசம்பர் 2, 2025 அன்று தேசிய தின விழாவின் போது திறந்து வைக்கப்பட்டது.
இந்த அருங்காட்சியகம், பாலைவனத்தில் மனிதர்கள் வாழ்ந்த ஆரம்ப கால ஆதாரம் முதல் நவீன தேசத்தின் உருவாக்கம் வரை, தொல்லியல், இயற்கை, தலைமைத்துவம் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை ஒன்றிணைத்து, அமீரகத்தின் வரலாற்றை விவரிக்கிறது. 1,500 க்கும் மேற்பட்ட அரிய மற்றும் முக்கியமான பொருட்கள் ஆறு நிரந்தரக் காட்சிக்கூடங்களில் (Galleries) காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அல் மஸார் தோட்டம் (Al Masar Garden)
இது அருங்காட்சியகத்தின் வெளிப்புறத்தில் உள்ள 600 மீட்டர் நீளமுள்ள தோட்டமாகும். உட்புறக் காட்சிக்கூடங்களுக்குச் செல்லும் முன், பார்வையாளர்களை இயற்கை சூழலுடன் இணைக்கும் பாதையாக இது செயல்படுகிறது.
நமது ஆரம்பம் (Our Beginning)
இந்தக் காட்சிக்கூடம் அமீரகம் உருவானது பற்றியும், ஷேக் சயீத் அவர்களின் தலைமை, பாரம்பரியம் மற்றும் நம்பிக்கைகள் பற்றியும் விளக்குகிறது. 1966 மாடலான, ஷேக் சயீத் ஓட்டிய ‘பார்மல் பிளாக்’ கிரிஸ்லர் நியூபோர்ட் காரின் (Chrysler Newport) பிரதியுருவம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
1960களில் அல் ஐனில் உள்ள கனட் மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்ட கருவின் இதயத் துடிப்பு கண்காணிப்புக் கருவி (foetal heart monitor). அமீரக பல்கலைக்கழகத்தின் முதல் மாணவர்களின் பட்டமளிப்பு அங்கவஸ்திரம் (Bisht) இடம்பெற்றுள்ளன.
மேலும் இங்கு அஸா எனப்படும் ஒட்டகக் குச்சி, ஷேக் ஸயீத் அவர்களின் அரிதாகக் காணப்படும் படங்கள், புதிதாக ஒருங்கிணைக்கப்பட்ட தேசத்தின் சாதாரண அன்றாட வாழ்க்கை ஆகியவற்றின் படங்கள் இடம்பெற்றுள்ளன.
நமது இயற்கை மூலம் (Through Our Nature)
மில்லியன் கணக்கான ஆண்டுகளாக, இந்த பிராந்தியத்தின் வியத்தகு நிலப்பரப்புகள், இயற்கை வளங்கள் மற்றும் மனிதர்களின் புத்திசாலித்தனம் ஆகியவை இங்குள்ள வாழ்க்கையை எவ்வாறு வடிவமைத்தன என்பதை இது விளக்குகிறது.
அமீரகத்தின் நிலவியல் பரிமாணத்தைக் காட்டும் முப்பரிமாண அலாபாஸ்டர் வரைபடம். 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டெத்திஸ் கடல் (Tethys Ocean) மற்றும் ஹஜார் மலைகளின் (Hajar Mountains) உருவாக்கம் பற்றிய காட்சிகள்.
1970களின் முற்பகுதியில் சாடியத் தீவில் (Sadiyat Island) ஷேக் சயீத் அவர்கள் மேற்கொண்ட முன்னோடி நீரின்றி செய்யும் விவசாய (Hydroponic Farming) சோதனைகளை சிறப்பித்துக் காட்டுகிறது.
நமது முன்னோர்களுக்கு (To Our Ancestors)
300,000 ஆண்டுகளுக்கு முந்தைய அமீரகத்தில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களையும், ஆரம்ப கால வர்த்தகத் தொடர்புகளையும் இந்தக் காட்சிக்கூடம் காட்டுகிறது.
சுமார் 8,000 ஆண்டுகள் பழமையான, இதுவரை கண்டெடுக்கப்பட்டதிலேயே மிகப் பழமையான இயற்கையான முத்துகளில் ஒன்றான அபுதாபி முத்து (Abu Dhabi Pearl), 300,000 ஆண்டுகளுக்கும் மேலான பழங்கற்காலக் கருவி (Palaeolithic stone tool), கற்காலக் குவளை (Neolithic vase) மற்றும் அரிய ஆபரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
நமது தொடர்புகள் மூலம் (Through Our Connections)
3,000 ஆண்டுகளுக்கு முந்தைய இரும்புக் காலம் முதல் கி.பி. 1100கள் வரை அமீரகத்தில் வர்த்தகம், அரபு மொழி வளர்ச்சி மற்றும் இஸ்லாமின் வருகை ஆகியவற்றை இது காட்டுகிறது.
அமீரகத்தில் பயன்படுத்தப்பட்ட ஆரம்ப கால நாணயங்களில் ஒன்றான அபீல் நாணயம் (Abiel Coin), ஃபலாஜ் (Falaj) நீர்ப்பாசனக் கால்வாய்களை பிரதிபலிக்கும் செராமிக் கோப்பை, ஸ்பெயினின் அல் அண்டலுஸிலிருந்து வந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட புகழ்பெற்ற நீல குர்ஆனின் (Blue Qur’an) பகுதிகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
நமது கடலோரங்கள் மூலம் (By Our Coasts)
14ஆம் நூற்றாண்டில் கப்பல் போக்குவரத்தின் முன்னேற்றங்கள் முதல் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் முத்து குளிக்கும் தொழிலின் வீழ்ச்சி வரையிலான ஐந்து நூற்றாண்டுகளுக்கும் மேலான கடலோர வாழ்க்கையைப் பற்றி விளக்குகிறது.
சீனாவில் இருந்து வந்த பச்சை நிற லாங்சுவான் போர்சலைன் பாத்திரம் (Longquan porcelain dish), ஜுல்ஃபாரில் (இன்றைய ராஸ் அல் கைமா) கண்டுபிடிக்கப்பட்ட இம்பீரியல் மிங் வம்சத்தின் மாதுளை பாத்திரத்தின் (Pomegranate dish) துண்டுகள், 1970களில் பாரம்பரியப் படகு கட்டும் கருவிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
நமது வேர்களுக்கு (To Our Roots)
இந்தக் காட்சிக்கூடம் பாலைவனங்கள், மலைகள் மற்றும் சோலைவனங்களில் வசித்த மக்கள் தங்கள் பாரம்பரிய அறிவு, அத்தியாவசிய திறன்கள் மற்றும் சுற்றுச்சூழல் மீதான மதிப்பின் மூலம் எவ்வாறு செழித்து வாழ்ந்தார்கள் என்பதைப் பற்றி சொல்கிறது.
1950களின் மஏனேகா (Maenega) – அல் தாஃப்ரா பகுதியில் குழந்தைகளுக்கு ஆறுதலுக்காக அணியப்படும் நறுமணமுள்ள நெக்லஸ், ரபாபா (Rababa) – நாபாடி கவிதைகளுக்குப் பயன்படுத்தப்படும் ஒற்றை சர இசைக்கருவி, அல் ஐனில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால செராமிக் தூபக் கிண்ணம் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகம், பாரம்பரியம் முதல் புதுமை வரை, அமீரகத்தின் பயணத்தை ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவமாகக் காட்டுகிறது.
