மனிதர்களுக்கு எப்போதுமே திகில், மர்மம் குறித்து தெரிந்து கொள்வதும், அது குறித்து படிக்கவும் மிகவும் பிடிக்கும். அந்த வகையில் அமீரகத்தில் அமானுஷ்ய கதைகள் உள்ள 5 இடங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
மக்கள் எப்பொழுதுமே கண்ணுக்கு தெரிந்த விஷயங்களை விட கண்களுக்கு புலப்படதா விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ள தான் ஆர்வம் காட்டுகிறார்கள். அந்த வகையில் பேய் கதைகள் மற்றும் அமானுஷ்ய விஷயங்களைப் பற்றி பேசுவது என்பது எப்போதும் மிகவும் சுவாரஸ்யமான ஒரு விஷயமாகும். அப்படி நாம் இந்த பதிவில் அமீரகத்தில் அமானுஷ்யம் நிறைந்த 5 திகில் நிறைந்த இடங்கள் பற்றி பார்க்க போகிறோம்.
அல் காசிமி அரண்மனை – ராஸ் அல் கைமா
பொதுவாக பேய், அமானுஷ்யங்கள் இருக்கும் இடம் என்றாலே முதலில் அனைவரின் நினைவுக்கும் சட்டென்று வருவது அரண்மனை போன்ற மாட மாளிகை தான். ஏனெனில் ஹாலிவுட் சினிமா முதல் தமிழ் சினிமா வரையிலும் பேய் படம் என்றாலே முதல் காட்சி ஏதேனும் ஒரு பாழடைந்த அரண்மனையில் இருந்து தான் தொடங்கும். அதேபோல் நாமும் இந்த பட்டியலை ராஸ் அல் கைமாவில் உள்ள அல் காசிமி அரண்மனையில் இருந்து தொடங்குவோம்.
ராஸ் அல் கைமா அரச குடும்பத்தை சேர்ந்த மறைந்த ஷேக் அப்துல்அஜிஸ் பின் ஹுமைத் அல் காசிமி 1985ஆம் ஆண்டு அல் காசிமி அரண்மனையைக் கட்டினார். இந்த பிரம்மாண்டமான அரண்மனை ஒரு மலையின் மேல் கட்டப்பட்டுள்ளது. இதை கட்டி முடிக்க AED 500 மில்லியனுக்கும் மேல் செலவானதாக கூறப்படுகிறது. இந்த அரண்மனை கட்டி முடிக்கப்பட்ட நிலையில் இங்கே தங்கிய ஷேக்கும் அவரது மனைவியும் அன்று இரவு மர்மமான அமானுஷ்ய நிகழ்வுகள் ஏற்பட்டதை தொடர்ந்து அரண்மனையை விட்டு வெளியேறிவிட்டனர். அதன் பின் நான்கு தசாப்தங்களாக மூடப்பட்டிருந்த இந்த அரண்மனை தற்போது மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளது.
நான்கு தளங்களைக் கொண்ட இந்த அரண்மனையில் 35 அறைகள் உள்ளன. இஸ்லாமிய, இந்திய, மொராக்கோ மற்றும் பாரசீக பாரம்பரியத்தின் சரவிளக்குகள், கலைப்பொருட்கள் மற்றும் ஓவியங்கள் போன்ற கண்கவர் உட்புறங்களை இந்த அரண்மனை கொண்டுள்ளது. தினமும் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை இந்த அரண்மனை திறந்திருக்கும். டிக்கெட்டுகள் ஒரு நபருக்கு AED 75 அல்லது குழுக்களாக இருந்தால் ஒரு நபருக்கு AED 50 ஆகும். உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என்பதை நினைவில் கொள்ளவும்.
அல் ஜசீரா அல் ஹம்ரா கிராமம் – ராஸ் அல் கைமா
பல நூற்றாண்டுகளாக செழிப்பான முத்து குளித்தல் தொழில், மீன்பிடி தொழில் என கடல்சார் வணிக கிராமமாக இருந்த அல் ஜசீரா அல் ஹம்ராவில் வீடுகள், கடைகள், பள்ளிக்கூடங்கள், மசூதிகள் என 450-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இருந்தன. 1960களின் பிற்பகுதியில் இங்கு வசித்து வந்த அல் ஜாபி பழங்குடியின குடும்பங்கள் வேலை வாய்ப்புகளை தேடி கொஞ்சம் கொஞ்சமாக நகரத்துக்கு குடிபெயர்ந்ததால் 1968ஆம் ஆண்டில் இந்த கிராமம் முழுவதுமாக கைவிடப்பட்டது.
இந்த நிலையில் அங்கிருந்த மக்கள் ஜின்களின் நடமாட்டம் காரணமாக வெளியேறியதாக மக்களிடையே பேச்சுகள் அடிபட தொடங்கின. தற்போது இங்கு கட்டிடங்களின் சிதிலங்கள் மட்டுமே மிஞ்சியுள்ளது. தற்போது இங்கே செல்பவர்கள் பழமையான கட்டிடக்கலையை பார்வையிடலாம். இருப்பினும் அப்பகுதியை சுற்றியுள்ள அமைதி ஒரு விதமான அமானுஷ்ய உணர்வை ஏற்படுத்துவது ஆச்சரியம் இல்லை.
அல் மடம் கிராமம் – ஷார்ஜா
பாலைவன மணலில் புதைந்து காணப்படும் அல் மடம் கிராமம் ஷார்ஜா எமிரேட்டில் ஓமன் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. மக்களால் கைவிடப்பட்ட இந்த கிராமம் ‘பேய் கிராமம்’ என அழைக்கப்படுகிறது. அரசாங்கத்தின் நவீனமயமாக்களின் முயற்சியின் ஒரு பகுதியாக 1970களில் அங்கிருந்த பழங்குடியின மக்ளுக்காக இந்த கிராமம் உருவாக்கப்பட்டது.
அந்த பகுதியில் வீசும் கடுமையான மணல் புயல் காரணமாக அங்கு வசிக்க முடியாத சூழல் ஏற்பட்டு மக்கள் வெளியேறியதாக கூறப்படுகிறது. 90களில் ஏற்பட்ட நவீனமயமாக்கல் காரணமாக அங்கிருந்த மக்கள் நரகங்களுக்கு இடம்பெயர்ந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த பகுதி மக்கள் வெளியேறியதற்கு பின்னால் பல காரணங்கள் இருந்தாலும் அதற்கான சரியான காரணங்கள் நிச்சயமற்றதாகவே உள்ளன.
அல் மடம் கிராமத்தை மக்கள் எப்போது வேண்டுமானாலும் பார்வையிடலாம். இருப்பினும் இங்கு நிலவும் சவாலான காலநிலையில் காரணமாக கோடை காலத்தில் இங்கு வருவதை தவிர்ப்பது நல்லது. குளிர் காலத்தில் குறிப்பாக நவம்பர் மாதத்தில் இங்கு செல்வது கடுமையான வெப்பத்தின் அசௌகரியம் இல்லாமல் அப்பகுதியை ரம்மியமாக பார்வையிட முடியும்.
ஜுமைரா வில்லா – துபாய்
துபாயின் முக்கியமான குடியிருப்பு பகுதியில் ஒன்று ஜூமைரா. எந்நேரமும் கடலலையின் ஓசை மக்களின் காதுகளில் அலையாய் அடிக்க அங்குள்ள ஒரு வீட்டில் மட்டும் அமானுஷியா சத்தங்கள் இதயத்துடிப்பை படபடக்க செய்துள்ளது. 2017ஆம் ஆண்டு ஜூமைரா 1 பகுதியில் உள்ள 7 படுக்கையறை வில்லாவில் ஒரு பிலிப்பைன்ஸ் குடும்பத்தினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென்று ஒருநாள் நிழலில் உருவம் தெரிவது, அருகில் யாரோ முணகுவது போன்ற அமானுஷ்ய நிகழ்வுகள் தொடர்ந்து ஏற்பட தொடங்கியுள்ளது. இதனால் அங்கு வசித்தவர்கள் வீட்டை காலி செய்து வெளியேறிவிட்டனர். தற்போது பூட்டியுள்ள அந்த வீட்டில் மக்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அல் கைல் கேட் – துபாய்
துபாயின் அல் குவோஸில் பகுதியில் உள்ள அல் கைல் கேட்டில் உள்ள 33ஆம் நம்பர் கட்டிடத்தை வெளியே இருந்து பார்த்தால் சாதாரணமாக தெரியும். ஆனால் அதற்கு உள்ளே பல அமானுஷ்ய நிகழ்வுகள் மறைந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த கட்டிடத்தில் கடைசியாக வசித்து வந்த மெக்டொனால்ட்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு மர்மமான அமானுஷ்ய நிகழ்வுகள் ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் வேறு கட்டிடத்திற்கு மாற்றப்பட்டனர். கட்டிடத்தின் உள்ளே சிதறிக்கிடக்கும் பொருட்கள் இங்கு எதோ நடந்துள்ளது என்று தான் பார்ப்பவர்களை நினைக்க வைக்கிறது.
பேய்கள் மீது சிலருக்கு நம்பிக்கை இருக்கலாம். சிலருக்கு பேய்கள் என்ற ஒன்றே உலகத்தில் கிடையாது என்று நம்பலாம். இது அவரது எண்ணங்களை பொருத்து அமைகிறது. ஆனால் காலம் காலமாக பேய்கள் இருப்பதாக கதைகளும் சொல்லப்பட்டு வருகின்றன. அதன்படி இத்தகைய சம்பவங்கள் நடந்ததற்கு அதிகாரபூர்வமாக எந்த தரவுகளும் இல்லை. வெறும் கட்டுக்கதைகளாகவே மக்களிடையே பேசப்படுகிறது.
