சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்ய இனி விளம்பரதாரர் அனுமதி கட்டாயம்!

இன்ஸ்டாகிராம், பேஸ்புக் அல்லது வாட்ஸ்அப் ஆகிய சமூக ஊடகங்களில்  விளம்பரங்களை ஒழுங்குபடுத்தும் வகையில், ஐக்கிய அரபு அமீரக ஊடக கவுன்சில் ‘விளம்பரதாரர் அனுமதி’ (Advertiser Permit) என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

யாருக்கு அனுமதி தேவை?

பணம் பெற்றுக்கொண்டு அல்லது இலவசமாக சமூக ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிடும் தனிநபர்கள் அனைவரும் இந்த அனுமதியை பெற வேண்டும்.

எப்போது நடைமுறைக்கு வரும்?

இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ள நிலையில், மூன்று மாதங்களுக்குப் பிறகு, இந்த விதிமுறை அமலுக்கு வரும். இந்த அனுமதி முதல் மூன்று ஆண்டுகளுக்கு கட்டணமில்லாமல் வழங்கப்படும். டிஜிட்டல் விளம்பரத் துறையில் பணிபுரியும் அனைவருக்கும் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதியின் முக்கிய நோக்கங்கள்:

  • விளம்பர உள்ளடக்கத்தின் தரத்தை மேம்படுத்துதல்.
  • டிஜிட்டல் விளம்பரத் துறையின் வளர்ச்சியை அதிகரித்தல்.
  • தவறான அல்லது உண்மைக்குப் புறம்பான விளம்பரங்களிலிருந்து பொதுமக்களைப் பாதுகாத்தல்.
  •  உள்ளூர் மற்றும் வெளிநாட்டு உள்ளடக்கப் படைப்பாளர்களை ஈர்க்குதல்.

விளம்பரதாரர் அனுமதி பெறுவதற்கான நிபந்தனைகள்:

  • சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்ய இது கட்டாயம்.
  • விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 ஆக இருக்க வேண்டும்.
  • ஐக்கிய அரபு அமீரக குடியுரிமை பெற்றவர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து மின்னணு ஊடகங்களுக்கான வர்த்தக உரிமத்தைப் பெற்றிருக்க வேண்டும்.
  • 18 வயதுக்குட்பட்டவர்கள் என்றால், சட்டப்பூர்வ பாதுகாவலர் பெயரில் வர்த்தக உரிமம் எடுக்க வேண்டும்.
  •  ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருபவர்கள், இங்குள்ள அங்கீகாரம் பெற்ற முகவர் நிறுவனம் மூலம் இந்த அனுமதியைப் பெறலாம்.

யார் யார் விதிவிலக்கு பெறுவார்கள்?

  • ஒரு நிறுவனம் அல்லது தனிப்பட்ட தயாரிப்பை தங்கள் கணக்கில் விளம்பரம் செய்வோர்.
  • * கல்வி, விளையாட்டு, கலாச்சாரம் அல்லது விழிப்புணர்வு சார்ந்த விளம்பரங்களைச் செய்யும் 18 வயதுக்குட்பட்டவர்கள்.

கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிகள்:

  • சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்யும்போது, ஊடக உள்ளடக்கத் தரத்தை மீறக் கூடாது.
  • அனுமதி சீட்டு எண், சமூக வலைதள பக்கத்தில் தெளிவாகக் காட்டப்பட வேண்டும்.
  •  ஒரு கணக்கின் அனுமதி சீட்டை வேறு எவரும் பயன்படுத்தக் கூடாது.
  • குறிப்பிட்ட விளம்பரங்களுக்கு அனுமதி தேவைப்படும்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற்ற பிறகே வெளியிட வேண்டும்.

எங்கு விண்ணப்பிப்பது?

இந்த அனுமதியைப் பெற  இன்ஃப்ளூயன்ஸர்கள் www.uaemc.gov.ae என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வர்த்தக உரிமம் குறித்த முக்கிய தகவல்கள்:

  • சமூக ஊடகங்கள் மூலம் பொருட்களை அல்லது சேவைகளை விற்பனை செய்ய, வர்த்தக உரிமம் கட்டாயம் தேவை.
  • இந்த உரிமம் இல்லாமல் வியாபாரம் செய்தால், AED 500,000 வரை அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படலாம்.

புதிய ஊடகச் சட்டம் மே 29, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டம், மத நம்பிக்கைகளை இழிவுபடுத்துதல் அல்லது உரிமம் இல்லாமல் செயல்படுதல் போன்ற மீறல்களுக்கு, AED 1 மில்லியன் வரை அபராதம் விதிக்க வழிவகை செய்கிறது.

TAGGED: