அமீரகத்தில் உள்ள சில நிறுவனங்கள் இந்தியா உள்பட வெளிநாட்டு ஊழியர்களது குழந்தைகளின் கல்விச் செலவையும் ஏற்றுக்கொள்ளும். அது போல மேலும் சில நிறுவனங்கள் 120 நாட்கள் மகப்பேறு விடுப்பு, ஊழியர்களுக்கு நெகிழ்வான வேலை நேரம் உள்ளிட்ட சலுகைகளை வழங்கி வருகின்றன.
ஊழியர்களுக்கு உதவிகளை வழங்கும் அமீரக நிறுவனங்கள்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சில நிறுவனங்கள், ஊழியர்களுக்கு வேலை தொடர்பான சலுகைகளைத் தாண்டி பல உதவிகளைச் செய்து வருகின்றன. குறிப்பாக, குடும்ப நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல புதிய திட்டங்களை அறிவித்துள்ளன. இது, வேலை நேரம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை சமநிலைப்படுத்த ஊழியர்களுக்கு உதவுகிறது.
ஊழியர்களது குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கும் நிறுவனங்கள்:
அமீரகத்தில் உள்ள சில நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களது குழந்தைகளின் முழு கல்விச் செலவையும் ஏற்றுக்கொள்கின்றன. அந்த ஊழியருக்கு எத்தனை குழந்தைகள் இருப்பினும், அத்தனை குழந்தைகளின் கல்விச் செலவையும் ஏற்றுக்கொள்கின்றன.
நெகிழ்வான வேலை நேரம் வழங்கும் நிறுவனம்:
TAQA Transmission என்ற நிறுவனம் ஊழியர்கள் வேலை நேரத்தை தேவைக்கேற்ப மாற்றிக்கொள்வது, வீட்டிலிருந்து வேலை செய்வது ஆகிய வசதியை வழங்குகிறது. இத்திட்டத்தில் பெற்றோருக்கு ஆதரவளிக்கும் வகையில் பல வசதிகள் உள்ளன.
The Developing Child Centre (TDCC) என்ற நிறுவனம், 2016 முதல் நெகிழ்வான வேலை (Flexible Work) நேரங்களைக் கடைப்பிடித்து வருகிறது. 2023-ல் இதை ஒரு கொள்கையாகவே மாற்றியுள்ளது. இதன்மூலம் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வது, பகுதிநேர வேலை மற்றும் விடுப்பு போன்ற சலுகைகளை பெறலாம்.
இந்தக் கொள்கை, ஊழியர்களுக்கு தங்கள் வேலை நேரத்தைத் திட்டமிடும் சுதந்திரத்தை அளிக்கிறது. இதன்மூலம், பெற்றோர் தங்கள் குடும்பத்தைக் கவனித்துக்கொள்வதோடு, பணியிலும் முழுமையாக ஈடுபட முடியும்.
மகப்பேறு விடுப்பு:
Sobha Realty என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம், ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் முறையாக, 120 நாட்கள் மகப்பேறு விடுப்பை அறிவித்துள்ளது. இந்த நிறுவனம், பணிபுரியும் பெற்றோர்களுக்காக அங்கன்வாடிகள் மற்றும் மழலையர் பள்ளிகளுடன் இணைந்து யோகா, உடல்நலம், மனநல ஆலோசனை, ஊட்டச்சத்து குறித்த ஆலோசனை போன்ற பல திட்டங்களையும் வழங்குகிறது.
மொத்தத்தில், இந்த நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களுக்கு வேலைக்கு அப்பாற்பட்ட ஆதரவை வழங்கி, அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்தி வருகின்றன. இது, ஊழியர்களின் மனநிறைவையும், நிறுவனத்தின் வளர்ச்சியையும் உறுதி செய்கிறது.
