மிராக்கிள் கார்டனில் சலுகை முதல் தேவாலயங்கள் தற்காலிகமாக மூடல் வரை; அமீரகத்தின் இந்த வார முக்கிய செய்திகள்!

துபாயில் தேவாலயங்கள் தற்காலிகமாக  மூடல்

துபாயில் உள்ள ஊத் மேத்தா புனித மேரி தேவாலயம் மற்றும் ஜெபல் அலி புனித பிரான்சிஸ் அசிசி தேவாலயம் ஆகிய 2  முக்கிய கத்தோலிக்க தேவாலயங்கள் ஏப்ரல் 3 முதல் மறுஅறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அரசாங்க ஒழுங்குமுறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி, சமூக நலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புனித மேரி தேவாலயத்தில் நடைபெறும் புனித வெள்ளி வழிபாடுகள் ஆன்லைனில் நேரலையில் ஒளிபரப்பப்படும் என்று அறிவித்துள்ளது.

வழிபாட்டு தலங்கள் மூடல் 

பாதுகாப்பு காரணங்களுக்காக துபாயில் உள்ள குருநானக் தர்பார் குருத்வாரா மற்றும் இந்து கோவில் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 சமூக நலன் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக துபாயில் உள்ள ஊத் மேத்தா புனித மேரி தேவாலயம் மற்றும் ஜெபல் அலி புனித பிரான்சிஸ் அசிசி தேவாலயம் தற்காலிகமாக மூடப்பட்டதைத் தொடர்ந்து, குருநானக் தர்பார் குருத்வாரா மற்றும் இந்து கோவில் ஆகியவையும் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் நிலையங்களில் அலைமோதிய கூட்டம்

அமீரகத்தில் ஏப்ரல் 1 முதல் எரிபொருள் விலை உயர்வு அமலுக்கு வந்ததால், மார்ச் 31 அன்று இரவு பெட்ரோல் நிலையங்களில் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

நீண்ட வரிசையில் 30 நிமிடம் முதல் 1 மணிநேரம் வரை காத்திருந்து மக்கள் தங்களது வாகனங்களில் எரிபொருளை நிரப்பினர். இரவு 8 மணிக்கு மேல் துபாய், ஷார்ஜா, அஜ்மான் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் வாகனங்கள் குவியத் தொடங்கின.

வழக்கமாக சில நிமிடங்களில் முடிந்துவிடும் எரிபொருள் நிரப்பும் பணி, நேற்று இரவு 30 நிமிடங்கள் முதல் 1 மணிநேரம் வரை நீடித்தது.

புதிய பொருளாதார ஆதரவு திட்டத்தை அறிவித்துள்ள துபாய் இளவரசர்  

வணிகங்கள், தொழிலாளர்கள் மற்றும் பொருளாதாரத்திற்கு உதவும் வகையில் AED 1 பில்லியன் மதிப்புள்ள புதிய பொருளாதார ஆதரவு திட்டத்தை துபாய் இளவரசர்  அறிவித்துள்ளார்.

முக்கிய அம்சங்கள்:

  • பல அரசு கட்டணங்களைச் செலுத்த 3 மாத கால அவகாசம் நீட்டிப்பு.
  • ஹோட்டல்கள் சுற்றுலா கட்டணங்களை உடனடியாகச் செலுத்தத் தேவையில்லை.
  • சுங்கக் கட்டணங்களைச் செலுத்த 90 நாட்கள் வரை கூடுதல் அவகாசம் 
  • குடியிருப்பு அனுமதி பெறுவது விரைவாக்கப்பட்டு எளிதாக்கப்பட்டுள்ளது.
  • குடியிருப்பாளர்கள் துபாயில் தங்குவதற்கும் வேலை செய்வதற்கும் இது வசதியாக இருக்கும்.
  • தொழிலாளர் குடியிருப்புகளில் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பில் கூடுதல் கவனம்.
  •  2033-க்குள் 100% தரமான தங்குமிட வசதிகளை உறுதி செய்தல்.

துபாயின் பொருளாதாரம் மிக வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 2025-ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் மட்டும் துபாயின் பொருளாதாரம் 6.4% என்ற குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது. அதேபோல், 2025 முழு ஆண்டிற்கான ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் 5.4% ஆக உயர்ந்துள்ளது. 

இதன் மூலம் துபாயின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மதிப்பு AED 937 பில்லியன் என்ற பிரம்மாண்ட அளவை அடைந்துள்ளது. பொருளாதார நடவடிக்கைகளை இன்னும் துல்லியமாகக் கண்காணிக்கவும், அனைத்து துறைகளின் செயல்பாடுகளைத் தெளிவாகப் பிரதிபலிக்கவும் ஏதுவாக, தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கணக்கிடும் முறையில் புதிய மேம்படுத்தப்பட்ட நடைமுறைகளை துபாய் அரசு அமல்படுத்தியுள்ளது.

மிராக்கிள் கார்டனில் சலுகை

குடியிருப்பாளர்களுக்கான நுழைவுக் கட்டணம் வெறும் AED 30 என அறிவித்துள்ளது  துபாய் மிராக்கிள் கார்டன். 12 வயது மற்றும் அதற்குக் குறைவான குழந்தைகளுக்கான இலவச அனுமதி தொடர்கிறது. 

 இந்தத் தள்ளுபடி விலையில் டிக்கெட்டுகளைப் பெற, நுழைவு வாயிலில் உங்கள் அசல் எமிரேட்ஸ் ஐடி அட்டையைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்தச் சலுகை ஏப்ரல் 1 முதல் மே 31 வரை நடைமுறையில் இருக்கும்.

பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடரும்

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு, அரசு மற்றும் தனியார் பள்ளிகள், மழலையர் பள்ளிகள் என நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஆன்லைன் வழி கல்வி ஏப்ரல் 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் பள்ளிகள், மழலையர் பள்ளிகள் என நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும். ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகப் பணியாளர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. வாரந்தோறும் ஆய்வு செய்யப்படும் என்றும், தேவைக்கேற்ப அடுத்தகட்ட அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

TAGGED: