மனித படைப்பாற்றல் & செயற்கை நுண்ணறிவு வேறுபடுத்தும் முயற்சி!
கல்வித் துறை, கலை, அறிவியல் ஆராய்ச்சி கட்டுரைகள் மற்றும் தகவல்களில் மனித படைப்பாற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் பயன்பாடு ஆகியவற்றை வேறுபடுத்தி காட்டுவதற்கு சிறப்பு குறியீடுகளை துபாய் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
துபாய் ஃபியூச்சர் ஃபவுண்டேஷன் (Dubai Future Foundation) இதை உருவாக்கியுள்ளது. இதில், ஒரு தகவல், செய்தி அல்லது படைப்பு, எவ்வளவு மனிதர் செயலாற்றலால் உருவானது மற்றும் எவ்வளவு செயற்கை நுண்ணறிவால் உருவானது என்பதைக் காட்டும் ஐந்து முக்கிய அடையாளங்கள் உள்ளன.
5 முக்கிய அடையாளங்கள்:
- முழுமையாக மனிதர் – AI உதவி இல்லாமல் மனிதர்களால் உருவாக்கப்பட்டது.
- மனிதர் தலைமையிலானது– மனிதர்கள் உருவாக்கி, AI மூலம் மேம்படுத்தப்பட்டது.
- AI உதவி – மனிதர்களும் AI-யும் இணைந்து உருவாக்கியது.
- AI தலைமையிலானது – AI உருவாக்கி மனிதர்கள் மூலம் சரிபார்க்கப்பட்டது.
- முழுமையாக AI – மனிதனின் பங்களிப்பின்றி முழுவதும் AI-யால் உருவாக்கப்பட்டது.
விஸ் ஏர் நிறுவனம் விமான சேவை அபுதாபிக்கு நிறுத்தம்!
குறைந்த கட்டண விமான நிறுவனங்களில் ஒன்றான விஸ் ஏர் நிறுவனம் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அபுதாபிக்கான விமான சேவைகளை முழுவதும் நிறுத்துவதாக தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் அரசியல் பதற்றம் மற்றும் நிலையற்ற சந்தை மதிப்பு காரணமாக அபுதாபிக்கு தங்கள் விமான சேவையை நிறுத்துவதாகவும், அதற்கு பதிலாக மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய சந்தைகளிலும், ஆஸ்திரியா, இத்தாலி மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் கவனம் செலுத்தப்போவதாக விஸ் ஏர் நிறுவனம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஆகஸ்ட் 31-க்கு பிறகு பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ள பயணிகள் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான விருப்பம் அல்லது மாற்று பயண ஏற்பாடு குறித்து தங்களை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளுமாறு விஸ் ஏர் கேட்டுக் கொண்டுள்ளது.
ஷார்ஜா தீ விபத்தில் இந்தியர் பலி!
ஷார்ஜா அல் மஜாஸ் 2 பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஜூலை 10 அன்று இரவு 10.45 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 46 வயதுடைய இந்தியப் பெண் பலியானார்.
11 மாடி குடியிருப்பு கட்டிடத்தின் எட்டாவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாதுகாப்பு குழுக்கள் விரைவாக தீயை கட்டுப்படுத்தினர்.
இதனால் கட்டிடத்தின் மற்ற பகுதிகளுக்கு தீ பரவுவது தடுக்கப்பட்டது. இறந்தவரின் உடலை கைப்பற்றிய அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்காக தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
உலகின் விலையுயர்ந்த நகரம்!
ஜூலியஸ் பேர் வங்கி வெளியிட்டுள்ள, 2025-இல் பணக்காரர்கள் விரும்பும் உலகின் மிகவும் விலையுயர்ந்த நகரங்களில் துபாய் 7-வது இடத்தை பிடித்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சிங்கப்பூர் முதலிடத்தை பிடித்துள்ளது.
கடந்த ஆண்டு தரவரிசையில், துபாய் 12வது இடத்தில் இருந்த நிலையில் இந்த ஆண்டு 5 இடங்கள் முன்னேறியுள்ளது. துபாயின் குடியிருப்பு திட்டங்கள், குறைவான வரி விதிப்பு, நகரின் தொலைநோக்கு திட்டங்கள், பகட்டான வாழ்க்கை முறை போன்றவை பல வெளிநாட்டு பணக்காரர்கள் துபாயை நோக்கி ஈர்க்கும் அம்சங்களாக இருப்பதாக ஜூலியஸ் பேர் தெரிவித்துள்ளது.
ஏர் அரேபியாவின் இரண்டு புதிய விமானங்கள்!
அபுதாபியில் இருந்து விஸ் ஏர் நிறுவனம் வெளியேறவுள்ள நிலையில், குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்கும் நிறுவனமான ஏர் அரேபியா அபுதாபி, இரண்டு புதிய ஏர்பஸ் A320 விமானங்களை தனது சேவையில் இணைத்துள்ளது.
இதன் மூலம் அதன் மொத்த ஏர் அரேபியா அபுதாபி நிறுவனத்தின் மொத்த விமான எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் இரண்டு ஏர்பஸ் A320 விமானங்களை சேர்க்கவும் இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் தங்கள் செயல்திறன் 2025 ஆம் ஆண்டில் 40% அதிகரிக்கும் என ஏர் அரேபியா அபுதாபி தெரிவித்துள்ளது.
