உலக நாடுகளின் சரக்கு ஏற்றுமதியில் டாப் 10 பட்டியலில் அமீரகம்
உலக வர்த்தக அமைப்பின் சமீபத்திய அறிக்கையின்படி, உலக நாடுகளின் சரக்கு ஏற்றுமதி தரவரிசையில் அமீரகம் 17-வது இடத்திலிருந்து 9-வது இடத்திற்கு முன்னேறி, முதல் முறையாக டாப் 10 பட்டியலுக்குள் நுழைந்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில், ஏற்றுமதி தரவரிசையில் 17-வது இடத்திலிருந்து 9-வது இடத்திற்கு அமீரகம் முன்னேறியுள்ளது. கடந்த ஆண்டு அமீரகத்தின் மொத்த வெளிநாட்டு வர்த்தகம் AED 6 டிரில்லியனை எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 15% வளர்ச்சியாகும்.
2021-ல் 949 பில்லியன் டாலராக இருந்த அமீரகத்தின் வர்த்தகம், 2025-ல் 1.637 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. மேலும் பொருட்கள் இறக்குமதியில் உலகளவில் 13-வது இடத்தையும் பிடித்துள்ளது. அமீரகத்தின் இறக்குமதியை விட ஏற்றுமதியே அதிகமாக உள்ளது.
ஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பு இல்லை; தெளிவுபடுத்திய லுலு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக, ஊழியர்களின் ஊதியத்தில் எவ்விதப் பிடித்தமோ அல்லது ஊதியம் வழங்குவதில் தாமதமோ ஏற்படாது என்று லுலு குழுமத்தின் தலைவர் யூசுப் அலி தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற நிலைக்கு மத்தியிலும், தங்களது ஊழியர்களுக்கு முழுச் சம்பளமும் தடையின்றி வழங்கப்படும் என்று லுலு குழுமம் அறிவித்துள்ளது.
லுலு குழுமத்தின் தலைவர் யூசுப் அலி “எந்தக் காரணத்தைக் கொண்டும் ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படாது, சரியான தேதியில் வழங்கப்படும்” என்று உறுதியளித்துள்ளார். இதற்காகத் தேவைப்பட்டால் வங்கித் கடன் பெற்றாவது ஊழியர்களின் பொறுப்புகளை நிறுவனம் நிறைவேற்றும் என்று அவர் கூறியுள்ளார்.
ஒவ்வொரு ஊழியருக்கும் குடும்பப் பொறுப்புகளும், கனவுகளும் இருப்பதை உணர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கொரோனா காலத்திலும் இதே போன்ற இக்கட்டான சூழலில் ஊழியர்களின் நலனை லூலூ குழுமம் பாதுகாத்தது குறிப்பிடத்தக்கது.
சம்பளம் மட்டுமல்லாமல், சந்தையில் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்வதும், விலையை சீராக வைத்திருப்பதும் நிறுவனத்தின் முக்கிய நோக்கம் என்று அவர் கூறியுள்ளார்.
சேதங்களுக்கு ஈரானே பொறுப்பு – அமீரக வெளியுறவு அமைச்சகம்
ஈரானின் தாக்குதலால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்களுக்கு அந்நாடே முழுப்பொறுப்பேற்க வேண்டும், உரிய இழப்பீடுகளை வழங்க வேண்டும். மேலும், இந்த மோதலில் தங்களுக்கு எந்தவித பங்கும் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறோம் என அமீரக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமீரக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஈரான் அறிவித்துள்ள இரண்டு வார காலப் போர்நிறுத்தத்தை அமீரகம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. இந்த போர்நிறுத்தம் வெறும் பேச்சோடு நின்றுவிடாமல், ஈரான் தனது தாக்குதல்களை முழுமையாக நிறுத்த வேண்டும் என்பதையும், கடல்வழிப் போக்குவரத்தை மீண்டும் சீரமைக்க வேண்டும்
ஈரான் தனது தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும். குறிப்பாக, ஹார்முஸ் நீரிணை பகுதியில் கப்பல்கள் சுதந்திரமாகச் செல்வதை எந்த நிபந்தனையுமின்றி உறுதி செய்ய வேண்டும்.
கடந்த 40 நாட்களில் எரிசக்தி நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் வாழும் பகுதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் பெரும் உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது. இதற்கு ஈரானை பொறுப்பாக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்
பதற்றத்தைக் குறைக்க தூதரக ரீதியாக முயற்சிப்பதாகவும், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்திற்கு ஈரான் கட்டுப்பட வேண்டும் ” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வதந்தி பரப்பிய 375 பேர் கைது
தற்போதைய நிகழ்வுகள் குறித்து புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பிய பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 375 நபர்களை அபுதாபி காவல்துறை கைது செய்துள்ளது.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அமலில் உள்ள சட்டங்களை மீறிய 375 நபர்களை அபுதாபி காவல்துறை கைது செய்துள்ளது.
இவர்கள் தற்போதைய நிகழ்வுகள் குறித்து புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அபுதாபி காவல்துறை தெரிவித்துள்ளது.
நிம்மதி அளிக்கும் செய்தி
ஏப்.9 அன்று ஈரானின் எந்தவொரு பாலிஸ்டிக் ஏவுகணைகளும், குரூஸ் ஏவுகணைகளும் அல்லது டிரோன்களும் அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகளால் கண்டறியப்படவில்லை. கடந்த சில மணிநேரங்களில் எவரும் காயமடையவில்லை என அமீரக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமீரக வான்பரப்பில் இன்று எந்தவித வான்வழி அச்சுறுத்தல்களும் இல்லை என்றும், கடந்த சில மணிநேரங்களில் எவரும் காயமடையவில்லை என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
