சுத்தமான நகரமாக துபாய் முதலிடம் முதல் ஈரானுக்கு எச்சரிக்கை வரை;     அமீரகத்தின் இந்த வார முக்கிய செய்திகள்!

ஈரானுக்கு அமீரகம் எச்சரிக்கை!

ஈரான் 1,400-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைக் கொண்டு தாக்கியதில், மக்கள்  உயிரிழந்தும், காயமடைந்தும் உள்ளனர்.  நாங்கள் போரை விரும்பவில்லை. இருப்பினும்  நாட்டையும், மக்களையும் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க முழு உரிமை உண்டு என அமீரக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. 

போர் பதற்ற சூழலில் அமீரக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “ஈரான் 1,400-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைக் கொண்டு அமீரகத்தின் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் பொதுமக்கள் உயிரிழந்தனர். 

இது சர்வதேச சட்டதிட்டங்களை மீறிய செயல் மற்றும் நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது.

அமீரகம் போரை விரும்பவில்லை; இருப்பினும், தனது நாட்டையும் மக்களையும் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க தங்களுக்கு முழு உரிமை உண்டு” என எச்சரித்துள்ளது.

மிராக்கிள் கார்டனில் இலவச அனுமதி

துபாய் மிராக்கிள் கார்டனில் மார்ச் 15 முதல் 31 வரை குடியிருப்பாளர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படுகிறது. நுழைவாயிலில் எமிரேட்ஸ் ஐடியை காண்பித்து உள்ளே செல்லலாம். 

துபாய் மிராக்கிள் கார்டனில் குடியிருப்பாளர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படுகிறது. மார்ச் 15 முதல் 31 வரை இந்த சலுகை வழங்கப்படும். இதற்கு முன்பதிவு தேவையில்லை, நுழைவாயிலில் எமிரேட்ஸ் ஐடியை காண்பித்து உள்ளே செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த வீரரின் இறுதி வார்த்தைகள்

மார்ச் 9 அன்று நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் இரண்டு அமீரக ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 

அந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவரான அலி அல் துணைஜி, பணிக்கு செல்லும் முன் அனுப்பிய வாய்ஸ் மெசேஜ் தற்போது வெளியாகியுள்ளது.

அதில், “மிகப் பெரிய பலன் இறைவனிடமிருந்து கிடைக்கும். நாம் தியாகிகளாக ஆக வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தால், நாங்கள் தியாகிகளாகிவிடுவோம். நீங்கள் நலமாகவும் அமைதியாகவும் இருப்பது எங்களுக்கு போதும்” என்று குறிப்பிட்டுள்ளார். 

மிகச் சுத்தமான நகரமாக 6வது ஆண்டாக முதலிடம் பிடித்த துபாய் 

ஜப்பானிய நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகின் மிகச் சுத்தமான நகரமாக தொடர்ந்து 6வது ஆண்டாக துபாய் முதலிடத்தை தக்கவைத்துள்ளது. பல்வேறு பிரிவுகளில் செய்யப்பட்ட மதிப்பீட்டில், ‘நகர தூய்மை’ பிரிவில் துபாய் 100% திருப்தி மதிப்பெண் பெற்றுள்ளது. 

ஜப்பானை சேர்ந்த Mori Memorial Foundation என்ற நிறுவனம் Global Power City Index (GPCI) என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ‘நகர தூய்மை’ என்ற பிரிவில் துபாய் 6வது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்துள்ளது.  நகரத்தின் தூய்மை குறித்த மதிப்பீட்டில் துபாய் 100 சதவீத திருப்தி மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.

அமீரகம் அதிரடி நடவடிக்கை

அமீரகத்தில் பதற்றமான சூழ்நிலையை பயன்படுத்தி அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்திய 449 வர்த்தக நிறுவனங்களுக்கு பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்ததுடன், மொத்தம் AED 176,000 அபராதமும் விதித்துள்ளது.

அமீரகத்தில் விலை உயர்வை கட்டுப்படுத்த பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சகம் வணிக நிறுவனங்களில் சோதனை நடத்தி வருகிறது. 

இதற்காக மேற்கொள்ளப்பட்ட 4,468 ஆய்வுகளில் மொத்தம் 554 விதிமுறை மீறல்கள் கண்டறியப்பட்டன. இதில் 449 வர்த்தக நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், மொத்தம் AED 176,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.