ஏவுகணை விழுந்ததில் இருவர் பலி
அபுதாபியில் உள்ள அல் பாஹியா பகுதியில் ஒரு வாகனத்தின் மீது ஏவுகணை விழுந்ததில், பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார் என்று அபுதாபி மீடியா அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே பொதுமக்கள் நம்ப வேண்டும் என்றும், உறுதிப்படுத்தப்படாத வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அபுதாபி மீடியா அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.
அபுதாபி உள்ள பனியாஸ் பகுதியில் வான் பாதுகாப்புப் படையினரால் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் முறியடிக்கப்பட்டது. அப்போது அதன் சிதறல்கள் விழுந்ததில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக அபுதாபி ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நீட்டிப்பு
அமீரகத்தில் வசந்தகால விடுமுறை முடிந்து வகுப்புகள் தொடங்கும் போது, முதல் இரண்டு வாரங்களுக்கு அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், மழலையர் பள்ளிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
அமீரகத்தில் நீடித்து வரும் நிலையற்ற சூழ்நிலை காரணமாக, கடந்த மார்ச் 2 முதல் மார்ச் 6 வரை மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து தற்போது வசந்தகால விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், விடுமுறை முடிந்து மூன்றாம் பருவம் தொடங்கும் முதல் இரண்டு வாரங்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என கல்வி, மனித மேம்பாடு மற்றும் சமூக மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.
துபாய் ஆட்சியாளர் நெகிழ்ச்சி
உலகம் முழுவதும் பசியால் தவிக்கும் குழந்தைகளை காப்பாற்றுவதற்காக ரமலானில் தொடங்கப்பட்ட “Had Al Hayat” திட்டத்திற்கு AED 2.8 பில்லியன் நிதி திரட்டப்பட்டுள்ளது. இதில் பங்களித்த 44 ஆயிரம் பேருக்கு துபாய் ஆட்சியாளர் நன்றி தெரிவித்துள்ளார்.
புனித ரமலான் மாதத்தையொட்டி, ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள 30 மில்லியன் குழந்தைகளுக்கு உதவும் நோக்கில், ‘Had Al Hayat’ எனும் நிதி திரட்டும் திட்டத்தைத் துபாய் ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் தற்போது AED 2.8 பில்லியன் நிதி திரட்டப்பட்டுள்ள நிலையில், இதில் பங்களித்த 44 ஆயிரம் கொடையாளர்களுக்கு துபாய் ஆட்சியாளர் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
உதவி செய்த அனைவருக்கும் எமது நன்றிகள். பங்களிப்புகளை நாங்கள் பெரிதும் பாராட்டுகிறோம். நற்செயல்கள் புரிந்த கரங்களை நாங்கள் வாழ்த்துகிறோம் என்று துபாய் ஆட்சியாளர் தெரிவித்தார்.
போலித் தகவல்களை நம்பாதீர்கள்; அரசு எச்சரிக்கை!
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறுவதை தடுக்க கடுமையான சட்டங்கள் கொண்டுவந்ததாக பரவும் தகவல்கள் வதந்தி என்றும், அமீரக பொருளாதாரம் வலிமையாகவும், துபாய் முக்கிய முதலீட்டு மையமாகவும் உள்ளது என துபாய் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறுவதைத் தடுக்க கடுமையான சட்டங்கள் கொண்டுவந்ததாகவும், முதலீட்டாளர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படுவதாகவும் போலியான செய்திகள் பரவி வருகிறது.
இதனைக் குறிப்பிட்டு துபாய் மீடியா அலுவலகம், அமீரகத்தின் பொருளாதாரம் மிகவும் வலிமையாகவும், நிலையானதாகவும் உள்ளது. துபாய் தொடர்ந்து உலகின் மிக முக்கியமான மற்றும் பாதுகாப்பான முதலீட்டு மையமாகத் திகழ்கிறது என தெரிவித்துள்ளது.
விமான பயணிகளுக்கு DXB-யின் அன்பு பரிசு!
சமீபத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையில் பொறுமையுடன் இருந்ததற்காக பயணிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வாழ்த்து அட்டை மற்றும் நினைவு பரிசுகளை துபாய் விமான நிலைய நிர்வாகம் (DXB) வழங்கி வருகிறது.
துபாய் சர்வதேச விமான நிலையம் பயணிகளுக்கு வழங்கிய வாழ்த்து அட்டையில், “நீங்கள் இங்கிருந்து புறப்படும் வேளையில், துபாயின் சார்பில் இந்தச் சிறிய அன்பளிப்பை (Token of appreciation) ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். கடந்த சில நாட்களாக நிலவிய இக்கட்டான சூழ்நிலையை நீங்கள் கையாண்ட விதம் எங்களுக்கு மிகுந்த நெகிழ்ச்சியை அளிக்கிறது. அதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
துபாய் எப்போதும் தனது குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு முதலிடம் அளிக்கிறது. அதை நீங்கள் நேரில் உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களது பயணம் பாதுகாப்பாக அமைய வாழ்த்துகிறோம். மீண்டும் உங்களை வரவேற்பதற்குக் காத்திருக்கிறோம் ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
