சிறந்த தோட்டத்துக்கு பரிசு முதல் நண்பனுக்கு மசூதி கட்டும் தோழி வரை; அமீரகத்தின் இந்த வார செய்திகள்!

தீவை ஒருநாள் சொந்தமாக்கிக்கொள்ள வாய்ப்பு!

துபாயின் வேர்ல்ட் தீவுகளில் உள்ள Cape Morris என்ற தீவு நவ.10 முதல் திறக்கப்படுகிறது. AED 75,000 கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்பவர்களுக்கு ஒரு நாள் முழுவதும் இந்த தீவு ஒதுக்கப்படும். 

கேப் மோரிஸ் தீவுக்கு முன்பதிவு செய்தவர்கள் காலை 11 மணிக்கு சொகுசு படகு மூலம் அழைத்து செல்லப்படுவார்கள். விருந்தோம்பல், பொழுதுபோக்கு, ஓய்வு வசதி என இந்த தீவில் ஒரு நாளை அனுபவிப்பதற்கு கட்டணம் AED 75,000 ஆகும். இந்த தீவில்  மதிய உணவு அருந்த மற்றும் சூரிய அஸ்தமனத்தை பார்வையிட, இதற்கான கட்டணம்  AED 30,000-இல் இருந்து தொடங்குகிறது. 

மிச்செலின் நட்சத்திர சமையல் கலைஞர் சவேரியோ ஸ்பரக்லி வழங்கும் மூன்று வகை உணவுகள் அடங்கிய மதிய விருந்து விலை இரண்டு பேருக்கு (மது இல்லாத பானங்களுடன்) AED 30,000. இரண்டு பேருக்கு (பிரீமியம் பானங்களுடன்) AED 35,000. இதில் நீர் விளையாட்டுகள் மற்றும் சூரிய குளியல் ஆகியவற்றை அனுபவிக்கலாம்.

சிறந்த வீட்டு தோட்டத்துக்கு AED 300, 000 பரிசு

துபாயில் வீட்டு தோட்டத்தை பராமரிப்பவர்களுக்கு மாநகராட்சி சார்பில் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதலிடம் பிடிப்பவர்களுக்கு AED 100,000 பரிசு வழங்கப்படும். 2024ஆம் ஆண்டை போல இந்த ஆண்டும் துபாய் மாநகராட்சி சிறந்த வீட்டுத் தோட்டங்களை தேர்ந்தெடுத்து முதல் 5 இடங்களை பெறுபவர்களுக்கு பரிசுகளை வழங்குகிறது. 

நீர் திறன், மண் ஆரோக்கியம், பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் புதுமையான யோசனைகள் போன்ற 10 அளவுகோல்களின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். முதலிடம் பிடிப்பவர்களுக்கு AED 100,000, இரண்டாவது இடம் பிடிப்பவர்களுக்கு AED 70,000 மற்றும் மூன்றாவது இடம் பிடிப்பவர்களுக்கு AED 40,000, நான்காவது இடம் பிடிப்பவர்களுக்கு AED 20,000, 

ஐந்தாவது இடம் பிடிப்பவர்களுக்கு AED 20,000 வழங்கப்படும்.

மேலும் இந்த முதல் ஐந்து வெற்றியாளர்கள் AED 10,000 மதிப்புள்ள ரேஃபிள் டிராவில் சேர்க்கப்பட்டு ஒரு அதிர்ஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். 

பதிவு மற்றும் முழு விவரம்: https://www.dm.gov.ae/the-most-beautiful-sustainable-home-garden/  

பிக் டிக்கெட் லாட்டரியில் மில்லியனரான தமிழர்!

சென்னையைச் சேர்ந்த, அபுதாபியில் பணிபுரியும் சரவணன் வெங்கடாசலம் என்பவர் பிக் டிக்கெட்டில் AED 25 மில்லியன் , (ரூபாய் மதிப்பில் 60 கோடி) வென்றுள்ளார். 

வெற்றி பெற்றது குறித்து பலமுறை வந்த தொலைபேசி அழைப்புகளை தொடக்கத்தில் துண்டித்த அவர், ஏதோ முக்கியமான விஷயம் என உணர்ந்து அழைப்பை  உணர்ந்து எடுத்த பின்னரே தனது அதிர்ஷ்டத்தை அறிந்தார். 

சென்னையைச் சேர்ந்த 44 வயதான சரவணன், அபுதாபியில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். வெற்றி பெற்ற AED 25 மில்லியன் பணத்தில் ஒரு பகுதியை குழந்தையின் கல்வி செலவுக்கும், மீதமுள்ள தொகை எதிர்காலத்திற்காகவும் பயன்படுத்தப்போவதாக கூறியுள்ளார்.

விபத்தில் மரணமடைந்த நண்பனுக்கு மசூதி கட்டும் தோழி 

துபாயில் கார் விபத்தில் உயிரிழந்த நபரின் நினைவாகவும், தூக்கமின்மையாலும், வேகமாகவும் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அவரது தோழி மசூதி ஒன்றை கட்ட திட்டமிட்டுள்ளார் . 

துபாயில் வசிக்கும் 29 வயதான எகிப்தியரான அம்ர் ஹேஷாம் என்பவர், கார் விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் அவரின் நினைவாக தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் திரட்டப்பட்ட தொகையில் அவரின் தோழி ரன்யா மக்கி என்பவர் மசூதியை கட்ட திட்டமிட்டுள்ளார்.

சூடானில் போர் நிறுத்தம் தேவை; அமீரகம் வலியுறுத்தல்!

உள்நாட்டு போரினால் சூடானில் நிலவும் உணவுப் பற்றாக்குறையால் 30 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு போரை நிறுத்த அமீரகம் வலியுறுத்தியுள்ளது. 

நாட்டை கைப்பற்ற சூடானில் ராணுவத்தினர் மற்றும் துணை ராணுவ படையினரிடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இந்த போரினால் பல அப்பாவி மக்கள் தங்களது குடும்பத்தினரை இழந்தும், வீடுகளை இழந்தும் பசியால் வாடிவருகின்றனர். 

இதனால் அங்குள்ளவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு போரை நிறுத்த அமீரக வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. மேலும், “எல் ஃபாஷர் உட்பட சூடான் முழுவதும் பொதுமக்களுக்கு எதிராக இழைக்கப்படும் பயங்கரமான மனிதாபிமான மீறல்களையும் குற்றங்களையும் அமீரகம் வன்மையாகக் கண்டிக்கிறது. இது மனித குலத்திற்கு எதிரான குற்றம் எனக் கருதுகிறது.

சண்டையிடும் தரப்புகள் பொதுமக்களைப் பாதுகாப்பதையும், உதவிகள் பாதுகாப்பாகச் சென்றடைவதையும் உறுதி செய்ய வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளது. 

TAGGED: