Walk to Mars சவால் தொடக்கம்!
அபுதாபி ஓபன் மாஸ்டர்ஸ் போட்டியின் ஒரு பகுதியாக ‘Walk to Mars’ சவால் நவ.11 அன்று தொடங்கியுள்ளது. அமீரகத்தின் 54வது ஆண்டையும், பூமி மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு இடையிலான 54 மில்லியன் கி.மீ தூரத்தையும் குறிக்கும் இந்த முயற்சியில் பங்கேற்பாளர்களின் ஒவ்வொரு அடியும் கணக்கிடப்படும்.
அபுதாபி ஓபன் மாஸ்டர்ஸ் விளையாட்டுப் போட்டிகள் பிப்ரவரி 6 முதல் 15 வரை நடைபெறவுள்ளது. ஓட்டப்பந்தயம், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் என 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகளை கொண்ட இந்த போட்டியில் 30 வயதுக்கு மேற்பட்டோர் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.
நாட்டின் மக்களை தினமும் உடற்பயிற்சி செய்ய ஊக்குவிக்கவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இந்தச் சவால் தொடங்கப்பட்டுள்ளது. 2026-ல் விளையாட்டுப் போட்டிகள் தொடங்குவதற்குள் இந்த இலக்கை எட்ட வேண்டும். Walk to Mars சவாலில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் Open Masters Games Abu Dhabi என்ற செயலியில் பதிவு செய்யவும்.
அபுதாபி சாக்லேட் அறிமுகம்!
வைரலான துபாய் சாக்லேட்டை உருவாக்கிய Chef நௌயல் கேட்டிஸ், தற்போது புதிதாக இனிப்பு மற்றும் காரம் கலந்த சுவையில் அபுதாபி சாக்லேட்டை உருவாக்கியுள்ளார். ஏலக்காய், கேரமல், உப்பு, குங்குமப்பூ, பேரீச்சம்பழ சிரப் உள்ளிட்ட பொருட்களை கொண்டு புதிய அபுதாபி சாக்லேட் உருவாக்கப்பட்டுள்ளதாக சமையல் கலைஞர் நௌயல் கேட்டிஸ் தெரிவித்தார்.
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த நௌயல் கேட்டிஸ் எதிஹாட் ஏர்வேஸில் சமையல்காரராக பல ஆண்டுகள் பணியாற்றிய பிறகு 2018ஆம் ஆண்டு முதல் துபாயில் சமையல் ஆலோசனை நிறுவனத்தை நடத்தி வருகிறார். 200 கிராம் அபுதாபி சாக்லேட்டின் விலை AED 100. ஆரம்பத்தில் இது உள்ளூர் உணவகமான ரெயின் கஃபே (Rain Cafe)-வில் மட்டுமே விற்கப்படும்.
துபாய் ஆட்சியாளருக்கு சுல்தான் பின் அலி அல் ஓவைஸ் கலாச்சார விருது
பல தசாப்தங்களாக துபாய் ஆட்சியளார் மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் கலாச்சாரம் மற்றும் அறிவியல் துறைக்கு ஆற்றிய அசாதாரண பங்களிப்புகளை கௌரவித்து, அவருக்கு சுல்தான் பின் அலி அல் ஓவைஸ் கலாச்சார விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சுல்தான் பின் அலி அல் ஓவைஸ் கலாச்சார விருது குழு வெளியிட்ட அறிக்கையில், “இந்த விருது பட்டங்களை விட சிந்தனையையும், பெயர்களை விட பயணங்களையும் கௌரவிக்கிறது. அதனால் தாராள மனப்பான்மையை வாழ்க்கை முறையாகவும், வளர்ச்சியை ஒரு பணியாகவும், எதிர்காலத்தை ஒரு உன்னத இலக்காகவும் மாற்றிய துபாய் ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களுக்கு இந்த விருதை வழங்க தீர்மானிக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
MrBeast உடன் கைகோர்க்கும் வாய்ப்பு!
துபாயில் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறும் 1 Billion Followers மாநாட்டில் “1 Billion Acts of Kindness” என்ற கன்டென்ட் கிரியேசன் போட்டி நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு MrBeast உடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு அமையும். இந்த போட்டியில் பங்கேற்பவர்கள் நீங்கள் தொண்டு செய்யும் நடவடிக்கைகளை வீடியோவாக உருவாக்கி சமர்ப்பிக்க வேண்டும்.
இதில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த 10 கன்டென்ட் கிரியேட்டர்களை 1 Billion Followers மாநாட்டில் MrBeast அறிவிப்பார். துபாயில் ஜனவரி 9 முதல் 11 வரை 1 Billion Followers மாநாடு நடைபெறவுள்ளது. இதில் “1 Billion Acts of Kindness” என்ற பிரச்சாரத்தின் கீழ் தொண்டு செய்யும் வீடியோவை உருவாக்குவதற்கான போட்டி நடைபெறுகிறது.
இதில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த 10 கன்டென்ட் கிரியேட்டர்களை MrBeast அறிவிப்பார். இந்த பிரச்சாரத்திற்கு முகமது பின் ரஷித் அல் மக்தூம் குளோபல் இநிஷியேட்டிவ்ஸ் (MBRGI) மற்றும் வார்க்கி அறக்கட்டளை (Varkey Foundation) ஆதரவு அளிக்கின்றன.
இந்த இயக்கத்தில் முதியவர்கள், வீடற்றவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுதல், சமூக சேவைகள் வழங்குதல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், நன்கொடை திரட்டுதல் மற்றும் மரம் நடுதல் போன்ற பல்வேறு வகையான உதவிகள் அடங்கும்.
சமர்ப்பிக்கப்படும் வீடியோக்கள் நம்பகத்தன்மை, கதை சொல்லும் விதம், படைப்பாற்றல் மற்றும் நேர்மறையான தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பாய்வு செய்யப்படும்.
வீடியோ சமர்ப்பிப்பு & முழு விவரம்: https://www.1billionsummit.com/mrbeast
சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள்: டிசம்பர் 1, 2025.
சமர்ப்பிக்கும்போது #1BKindness மற்றும் #1BillionSummit ஆகிய ஹேஷ்டேக்குகளை பயன்படுத்த வேண்டும்.
வரியில்லாமல் வங்கி கணக்கிற்கு செல்லும் லாட்டரி பணம்!
கடந்த மாதம் அமீரக லாட்டரியில் வரலாற்று சிறப்புமிக்க AED 100 மில்லியன் வென்ற அபுதாபியை சேர்ந்த இந்தியர் அனில்குமாரின் வங்கி கணக்கிற்கு AED 100 மில்லியன் தொகை வரி பிடித்தம் இல்லாமல், முழு தொகையும் செலுத்தப்படும் என்று அமீரக லாட்டரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அமீரக லாட்டரியில் AED 100 மில்லியன் வென்ற அபுதாபியை சேர்ந்த இந்தியர் அனில்குமாரின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, அனைத்து ஆவணங்களும் வங்கி ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும். அதன் பின்னர் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நிதி மாற்றப்படும் என்று அமீரக லாட்டரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
