வெளிநாட்டு பயணிகளுக்கு டேட்டாவுடன் இலவச சிம் கார்டு!
அபுதாபி சயீத் சர்வதேச விமான நிலையம், e& நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் 10GB டேட்டாவுடன் கூடிய சிம் கார்டை இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து அபுதாபியின் சயீத் சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் 10GB டேட்டாவுடன் கூடிய சிம் கார்டை இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
தலைநகரில் தரையிறங்கும் ஒவ்வொரு பயணிக்கும் உடனடி தடையற்ற இணைய சேவை கிடைப்பதை நோக்கமாக கொண்டு, அபுதாபி விமான நிலையம் மற்றும் e& நிறுவனம் இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளன. இதனால், மேப்ஸ், டாக்ஸி, பணம் செலுத்துதல், மெசேஜிங் ஆப்கள் மற்றும் அபுதாபி பாஸ் போன்றவற்றை உடனடியாகப் பயன்படுத்தலாம்.
கடும் குளிருக்கான எச்சரிக்கை!
அமீரகத்தில் குறிப்பாக துபாய் மற்றும் அபுதாபியில் நவ.20 முதல் நவ. 23 வரை அதிகாலையில் பனிமூட்டமும், கடும் குளிரும் நிலவும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) எச்சரித்துள்ளது.
நவ. 23 வரை அமீரகத்தில் அதிகாலையில் பனிமூட்டம் நிலவும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக துபாய் மற்றும் அபுதாபியில் வெப்பநிலை இயல்பைவிட குறைவாகவே இருக்கும். மேலும் நகரில் மூடுபனி காணப்படுவது போன்ற வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக் டிக்கெட்டில் AED 130K வென்ற தமிழர்!
அபுதாபியில் பொறியாளராக பணியாற்றி வரும் தமிழகத்தை சேர்ந்த தியாகராஜன் பெரியசாமி என்பவர் பிக் டிக்கெட்டில் AED 130K பரிசுத்தொகையை வென்றுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளாக அபுதாபியில் பைப்பிங் பொறியாளராக பணியாற்றி வரும் தமிழகத்தை சேர்ந்த தியாகராஜன் பெரியசாமி என்பவர் 2019ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து டிக்கெட்டுகளை வாங்கி, தனது அதிர்ஷ்டத்தை சோதித்து பார்த்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் வாங்கிய பிக் டிக்கெட்டில் தியாகராஜனுக்கு AED 130K பரிசுத்தொகை கிடைத்துள்ளது. பிக் டிக்கெட் நடத்திய The Big Win Contest என்ற போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த 3 பேரும், வங்க தேசத்தைச் சேர்ந்த ஒருவரும் AED 540,000 வென்றுள்ளனர்.
இந்த தொகையை நால்வரும் பகிர்ந்து கொள்ளவுள்ளனர். அதில் தமிழகத்தை சேர்ந்த தியாகராஜன் பெரியசாமிக்கு AED 130K வழங்கப்படுகிறது.
துபாய் விமான கண்காட்சி!
துபாய் விமான கண்காட்சி நவ.17 முதல் வான் சாகசங்களுடன் கோலாகலமாக தொடங்கியது. துபாய் வேர்ல்ட் சென்டரில் நடந்த இந்த கண்காட்சியை அமீரக அதிபர், துபாய் ஆட்சியாளர், அபுதாபி இளவரசர் மற்றும் துபாய் இளவரசர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
துபாய் விமான கண்காட்சி நவ. 21 வரை நடைபெற்றது. இந்த கண்காட்சியில் இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 115 நாடுகளை சேர்ந்த சுமார் 1,500-க்கும் மேற்பட்ட விமான தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்கேற்றன.
இந்நிலையில், கடைசி நாளான நவ. 21 அன்று இந்திய விமானப்படையின் தேஜஸ் போர் விமானம் சாகத்தின் போது அமீரக நேரப்படி பிற்பகல் 2:15 மணிக்கு விழுந்து நொறுங்கியது. இதில் விமானி உயிரிழந்தார்.
எமிரேட்ஸ் விமானங்களில் இலவச ஸ்டார்லிங்க் WiFi!
தங்களது அனைத்து போயிங் 777, A380 ரக விமானங்களிலும், செயற்கைக்கோள் மூலம் கிடைக்கும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார்லிங்க் Wifi-ஐ பயணிகளுக்கு இலவசமாக வழங்கவுள்ளதாக எமிரேட்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தச் சேவை, வரும் நவம்பர் 23-ஆம் தேதி அன்று போயிங் 777 வணிக விமானப் பயணத்தின் மூலம் தொடங்கப்பட உள்ளது. ஸ்டார்லிங்க் Wifi பொருத்தப்பட்டுள்ள போயிங் 777 ரக விமானத்தை துபாயில் நடைபெறும் விமான கண்காட்சியில் எமிரேட்ஸ் காட்சிப்படுத்தியுள்ளது.
2027ஆம் ஆண்டுக்குள் தங்களது 232 போயிங் 777 ரக விமானங்களிலும் ஸ்டார்லிங்க் Wifi வசதியை கொண்டு வர எமிரேட்ஸ் திட்டமிட்டுள்ளது. இந்த சேவை அனைத்துப் பயணிகளுக்கும், அனைத்து வகுப்புகளிலும் இலவசமாகக் கிடைக்கும்.
