புதிய விசிட் விசா முதல் துபாய் – RAK புதிய சாலை வரை; அமீரகத்தின் இந்த வார முக்கிய நிகழ்வுகள்!

துபாய் – RAK இடையே பயண நேரம் குறையும்

துபாய் – ராஸ் அல் கைமா இடையே AED 750 மில்லியன் மதிப்பில் சாலை விரிவாக்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சகம் (MoEI – Ministry of Energy and Infrastructure) அறிவித்துள்ளது.

பணிகள் நிறைவடையும் போது இந்தச் சாலையில் பயண நேரம் 45% வரை குறையும். மேலும், போக்குவரத்து நெரிசலும் குறையும். இந்த சாலை விரிவாக்க பணிகளில் அல் பதீ இன்டர்சேஞ்சிலிருந்து உம் அல் குவைன் வரை 25 கி.மீ தூரத்திற்கு இரு திசைகளிலும் லேன்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது.

மேலும் இந்த திட்டத்தில் 6 பாலங்களையும் கட்ட எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சகத்தால் (MoEI) திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிவடையும் போது துபாய் – ராஸ் அல் கைமா இடையே வாகனங்களின் எண்ணிக்கை மணிக்கு 9,000 ஆக அதிகரிக்கும்.

புதிய விசிட் விசாக்கள் அறிமுகம் 

அமீரகத்திற்கு வரும்  செயற்கை நுண்ணறிவு நிபுணர்கள், பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக வருபவர்கள், நிகழ்வுகளில் பங்கேற்க வருபவர்கள் மற்றும் படகில் சுற்றுலா வருபவர்களுக்கு 4 புதிய விசிட் விசாக்களை அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான கூட்டாட்சி ஆணையம் (Federal Authority for Identity, Citizenship, Customs and Port Security) அறிமுகம் செய்துள்ளது. 

AI நிபுணர்களுக்கான விசா 

இது ஒரே முறை அல்லது பல முறை நாட்டிற்குள் நுழையக்கூடிய விசா.

இந்த வகையான விசாவை பெறுவதற்குத் தொழில்நுட்பத் துறையில் நிபுணத்துவம் பெற்ற ஒரு ஸ்பான்சர் அல்லது ஹோஸ்டிங் நிறுவனத்திடமிருந்து ஒரு கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும். 

பொழுதுபோக்குக்கிற்கான விசா

பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்காக தற்காலிகமாக நாட்டிற்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு இது வழங்கப்படும்.

நிகழ்வுகளுக்கான விசா

விழாக்கள், கண்காட்சிகள், மாநாடுகள், விளையாட்டு அல்லது கலாச்சார நிகழ்வுகள் போன்றவற்றை தற்காலிகமாக பார்வையிட வருபவர்களுக்கு இந்த விசா வழங்கப்படும். நிகழ்ச்சியை நடத்தும் அரசு அல்லது தனியார் துறை அமைப்பின் ஸ்பான்சர் அல்லது ஹோஸ்டிங் நிறுவனத்திடமிருந்து ஒரு கடிதத்தை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

சுற்றுலாவிற்கான விசா 

பயணக் கப்பல்கள் மற்றும் சொகுசு படகுகள் (Luxury Yachts) மூலம் சுற்றுலா வரும் வெளிநாட்டவர்களுக்கு, பலமுறை நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கும் விசா இது. ஸ்பான்சர் அல்லது ஹோஸ்ட்டின் கடிதத்தை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

மேலும் வணிக ஆய்வு விசா, டிரக் ஓட்டுநர்கள் விசா ஆகியவற்றில் சில முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஸ்பான்சர்களுக்கான புதிய வருமான தகுதி

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் ஒருவர் தனது குடும்பத்தினர் அல்லது நண்பர்களை விசிட் விசாவில் அழைத்து வர, அவர்களின் குறைந்தபட்ச மாதச் சம்பளம் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதில் இப்போது புதிய விதிமுறைகளை அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான கூட்டாட்சி ஆணையம் கொண்டு வந்துள்ளது .

உறவு நிலை குறைந்தபட்ச மாதச் சம்பளம்
முதலாம் நிலை உறவினர்

(மனைவி, மகன், மகள், தாய், தந்தை)
  AED 4,000
இரண்டாம் நிலை உறவினர்

(சகோதரர், சகோதரி, தாத்தா, பாட்டி)
 AED 8,000
நண்பர்கள் AED 15,000


வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதல், பொருளாதார பன்முகத்தன்மையை ஆதரித்தல் மற்றும் திறமையான நபர்களை அமீரகத்திற்கு அழைத்து வருவதன் நோக்கமாக அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான கூட்டாட்சி (ICP) ஸ்பான்சர்களுக்கான இந்த புதிய வருமான தகுதியை வெளியிட்டுள்ளது. 

பிறந்தநாளில் மிராக்கிள் பூங்கா சென்றால் அனுமதி இலவசம்!

அடுத்த ஆண்டு மே 31 வரை திறந்திருக்கும் துபாய் மிராக்கிள் பூங்காவில் பிறந்தநாள் கொண்டாடும் நபர்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கு உங்கள் பிறந்தநாளன்று பாஸ்போர்ட் அல்லது எமிரேட்ஸ் ஐடியை காண்பிக்க வேண்டும். 

 இது குறித்த அறிவிப்பை நேற்று நடைபெற்ற திறப்பு விழாவின் போது துபாய் மிராக்கிள் பூங்காவின் தலைமை நிர்வாக அதிகாரி முகமது ஜாஹர் ஹம்மாதிஹ் தெரிவித்தார். 

உள்ளே நுழையும் பார்வையாளர்களை புகைப்படக் கலைஞர்கள் படம் பிடித்தது அந்த இடத்திலேயே போட்டோவை அச்சிட்டுத் தருவார்கள் என முகமது ஜாஹர் கூறினார்.

விமான பயணிக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!

விமானத்தில் இருக்கை தளர்வாக இருந்ததன் காரணமாக காயம் அடைந்த பெண் பயணியொருவருக்கு, AED 10,000 இழப்பீடு வழங்கும்படி அபுதாபி நீதிமன்றம் விமான நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

விமான பயணத்தின் போது இருக்கை தளர்வாக இருந்ததால், அந்த பயணிக்கு காயம் ஏற்பட்டது. அவர் விமானப் பணியாளர்களிடம் முறையிட்டும், அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், இதனால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், பொருளியல் ரீதியாகவும் தனக்குச் சேதம் ஏற்பட்டதாகவும் கூறி, விமான நிறுவனம் மீது AED 50,000 நஷ்டஈடு கேட்டு அபுதாபி சிவில் குடும்ப நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 

இதில் நீதிமன்றம் விமான இருக்கையின் குறைபாடு பயணியின் உடல் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது என்றும், அவருக்கு மன உளைச்சலையும், உணர்ச்சிப்பூர்வமான துயரத்தையும் கொடுத்தது என்றும் நீதிமன்றம் கூறியது. அவர் கேட்ட AED 50,000-ஐ குறைத்து AED 10,000 நியாயமான மற்றும் போதுமான” நஷ்ட ஈடாக இருக்கும் என்று கூறி நீதிமன்றம் உத்தரவிட்டது.

TAGGED: