ஜூன் 15 முதல் மதிய நேர வெளிப்புற வேலைக்கு தடை! – அமீரகம் அறிவிப்பு!

ஐக்கிய அரபு அமீரகம் வரும் ஜூன் 15 முதல் செப்டம்பர் 15 வரை, வெளிப்புற வேலைகளுக்கு மதிய நேரத்தில் தடை விதிக்கிறது. இந்த “மதிய நேர இடைவெளி” (Midday Break) என்ற திட்டம், கடுமையான வெயிலில் வேலை செய்யும் தொழிலாளர்களை பாதுகாக்கும் நோக்கில் 21வது ஆண்டாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.

தடை செய்யப்பட்ட நேரமும் (MoHRE) அமைச்சகத்தின் கண்காணிப்பும் :

ஜூன் 15 முதல் செப்டம்பர் 15 வரை, தினமும் பிற்பகல் 12:30 மணி முதல் 3:00 மணி வரை நேரடி சூரிய ஒளியின் கீழ் அல்லது திறந்தவெளிப் பகுதிகளில் வேலை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் மனிதவள அமைச்சகம் (Mohre), மதிய இடைவேளை (Midday Break) விதிகளை சரியாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்து கண்காணிக்கிறது. இதன் மூலம், எந்த ஒரு தொழிலாளியும் தடை செய்யப்பட்ட நேரத்தில் வேலை செய்யவில்லை என்பதை உறுதி செய்கிறார்கள். மேலும் இந்த விதிமுறையை மீறினால் அபராதமும் விதிக்கப்படும்.

தடைமீறல்களுக்கு விதிக்கப்படும் அபராதம்:

  • நிறுவனங்கள் இந்த விதிமுறையை  மீறினால், ஒவ்வொரு தொழிலாளிக்கும் AED 5,000 வீதம் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்படும்.
  • பல தொழிலாளர்கள் இந்த விதிமீறலில் ஈடுபட்டால், AED 50,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

நிறுவனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டிய வசதிகள்:

கோடைக்கால மதிய இடைவேளை (Midday Break) விதியின்படி, தனியார் மற்றும் அரசுத் துறை நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தர வேண்டும்.

  • நிழலான ஓய்வுப் பகுதிகள்
  • குளிரூட்டும் உபகரணங்கள்
  • குடிநீர் வசதி
  • மினரல் சத்துகள் கொண்ட பானங்கள் (Electrolytes)
  • முதலுதவிப் பெட்டிகள்

இந்த விதிமுறை தொழிலாளர்களின் பாதுகாப்பையும், நலனையும் உறுதி செய்வதற்காகவே கொண்டுவரப்பட்டுள்ளது.

இருப்பினும் தொழில்நுட்ப காரணங்களுக்காக இடையூறு இல்லாமல் முடிக்கப்பட வேண்டிய பணிகள் அதாவது, நீர் மற்றும் மின்சார பழுதுபார்ப்பு போக்குவரத்து மேலாண்மை, முக்கியமான உள் கட்டமைப்பு பராமரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு இந்த தடையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. பொது வாழ்வை நேரடியாக பாதிக்கும் சில வேலைகளை செய்ய அரசிடம் இருந்து அனுமதி பெற வேண்டும்.

குடியிருப்பாளர்கள் தீங்கு விளைவிக்கும் நடைமுறைகள் அல்லது மீறல்களைப் பற்றி அமைச்சகத்தின் 600590000 என்ற அழைப்பு மையம், வலைத்தளம் அல்லது ஸ்மார்ட் செயலி மூலம் புகார் தெரிவிக்கலாம்.

கடந்த சில ஆண்டுகளாக இந்த மதிய நேர இடைவேளை விதி அமலாக்கத்தில் பெரிய வெற்றி அடைந்துள்ளது. மனிதவள அமைச்சகத்தின் தகவல்படி, 99%-க்கும் அதிகமான நிறுவனங்கள் இந்த விதியைக் கடைப்பிடித்து வருவதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொழிலாளர்களின் நலன் காப்பதில் கிடைத்த ஒரு முக்கிய வெற்றியாகும்.

TAGGED: