தீபாவளி வாழ்த்து தெரிவித்த துபாய் ஆட்சியாளர்!
அமீரகத்தில் நான்கு மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் வசிக்கும் நிலையில் தீபாவளி ஒரு முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்தியர்கள் இனிப்புகளையும் வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்டு தீபத் திருநாளைக் கொண்டாடும் வேளையில், துபாய் ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் இந்திய சமுதாயத்திற்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“அமீரகத்திலும் உலகெங்கிலும் தீபாவளியைக் கொண்டாடுபவர்களுக்கு அன்பான வாழ்த்துக்கள். இந்த தீப ஒளித் திருவிழா உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் அமைதி, பாதுகாப்பு மற்றும் செழிப்பைக் கொண்டுவரட்டும். இனிய தீபாவளி வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
விபத்தை தடுத்த துபாய் காவல்துறை!
துபாய் எமிரேட்ஸ் சாலையில் அபுதாபி நோக்கிச் சென்று கொண்டிருந்த cruise control செயலிழந்ததால் கட்டுப்பாடின்றி சென்ற பெண்ணின் காரை, துபாய் காவல்துறை பாதுகாப்பு வளையம் அமைத்து, போக்குவரத்தை விலக்கி, வழிகாட்டுதல்களை வழங்கி காரை பாதுகாப்பாக நிறுத்தச் செய்தனர்.
துபாய் எமிரேட்ஸ் சாலையில் அபுதாபி நோக்கிச் சென்ற ஒரு பெண் ஓட்டுநரது காரில் க்ரூஸ் கன்ட்ரோல் (Cruise Control) செயலிழந்ததால் கார் கட்டுப்பாடின்றி அதிவேகத்தில் சென்றது. உடனடியாகக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, ரோந்துப் படையினர் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டனர்.
துபாய் காவல்துறை, கட்டுப்பாடற்ற காருக்கு முன்னும் பின்னும் ஒரு பாதுகாப்பு வளையத்தை (Safety Corridor) ஏற்படுத்தி, போக்குவரத்தை விலக்கி விபத்தைத் தடுத்தனர். காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து தொலைபேசியில் வழிகாட்டியதன் மூலம், அந்தப் பெண் ஓட்டுநர் காரைப் பாதுகாப்பாக சாலையின் ஓரத்தில் நிறுத்தினார்.
இதுபோன்ற நிலையில் சிக்கினால், உடனடியாக 999க்கு அழைத்துத் தகவல் சொல்லவும், அபாய விளக்குகளைப் போடவும், காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
விற்பனைக்கு வந்த ராஸ் அல் கைமாவின் பேய் அரண்மனை!
ராஸ் அல் கைமாவில் நீண்ட காலமாக கைவிடப்பட்ட நிலையில் உள்ள, அல் காசிமி அரண்மனை AED 25 மில்லியனுக்கு விற்பனைக்கு வந்துள்ளது. இந்த அரண்மனையை சுற்றி பல அமானுஷ்யமான கதைகள் உள்ளதால் இது “பேய்களின் அரண்மனை” எனவும் அழைக்கப்படுகிறது.
ஷார்ஜா அரச குடும்பத்தைச் சேர்ந்த ஷேக்அப்துல் அஜீஸ் பின் ஹுமாயித் அல் காசிமி அவர்கள், 1985ஆம் ஆண்டு AED 500 மில்லியன் செலவில் 20,000 சதுர மீட்டர் பரப்பளவில் 4 தளங்களில் கட்டிய அல் காசிமி அரண்மனையில் 35 அறைகள் உள்ளன.
தற்போதைய உரிமையாளர் தாரெக் அஹ்மத்அல் ஷர்ஹான் இதை புதுப்பித்து, காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை மக்களின் பார்வைக்கு திறந்துள்ளார். இந்த அரண்மனையை வாங்குவதற்கு வாங்குபவர் எமிராத்தியாக (Emirati) இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது. விற்பனை பற்றி விசாரிக்க: WhatsApp 052 828 2222 என்ற எண்ணை தொடர்புகொள்ளவும்.
கின்னஸ் உலக சாதனை படைத்த துபாய் சிவில் பாதுகாப்பு படை!
துபாய் சிவில் பாதுகாப்பு படைக்கு கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் புதிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபாவில், 15 கிலோகிராம் எடையுள்ள ஆக்சிஜன் சிலிண்டருடன் துபாய் தீயணைப்பு வீரர்கள் குழு 52 நிமிடங்கள் 30 வினாடிகளில் ஏறி, கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.
துபாய் சிவில் பாதுகாப்பு துறையின்யின் கீழ் செயல்படும் தீயணைப்பு துறை வீரர்கள் ஆக்சிஜன் சிலிண்டருடன், 52 நிமிடங்கள் 30 வினாடிகளில் புர்ஜ் கலீஃபாவில் ஏறி உலக சாதனை படைத்துள்ளனர். இது சிவில் பாதுகாப்பு படைவீரர்களின் உடல் வலிமையையும், அர்ப்பணிப்பையும் காட்டுகிறது.
இந்திய மாணவர் திடீர் மரணம்
துபாயில் தனியார் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு பயின்று வந்த வைஷ்ணவ் கிருஷ்ணகுமார் (18) என்ற இந்திய மாணவர் தீபாவளிக்கு மறுநாள் அக்.21, 2025 அன்று மாரடைப்பால் காலமானார்.
கோல்டன் விசா வைத்திருப்பவரான கேரளாவை சேர்ந்த வைஷ்ணவ் கிருஷ்ணகுமார் துபாயில் அக்டோபர் 21 அன்று மாலை வீட்டின் வெளியே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மரணத்திற்குக் காரணம் மாரடைப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரின் பிரிவுக்கு நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
