அடுத்த ஆண்டு, அமீரகத்தில் ஒரு மில்லியன் மரக்கன்றுகளை நடும் திட்டம்; முழு விவரம்

அமீரகத்தின் மிகப் பெரிய மரம் நடுதல் திட்டமான “ஒரு மில்லியன் மரக்கன்று நடுதல்” எனும் திட்டம் அபுதாபியில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம், அடுத்த ஆண்டு நாடு முழுவதும் ஒரு மில்லியன் மரக்கன்றுகளை நடுதல் மற்றும் பொது மக்களுக்கு இலவசமாக வழங்கி இதன் நன்மைகளையும், மரக்கன்று நடுதலை ஊக்குவிக்கும் விதமாகவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலவச மரக்கன்று வழங்கல்:

ஜனவரி 1 முதல், அபுதாபியில் உள்ள கிரேசியா (Gracia Group) என்ற பண்ணை ஒரு மில்லியன் மரக்கன்றுகளை மக்களுக்கு இலவசமாக வழங்க முன்வந்துள்ளது. இதன் மூலம் வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள், விளையாட்டுக் கழகங்கள் இருந்து யார் மரக்கன்று நடுதல் மீது ஆர்வம் உள்ளோர் எங்களிடம் இருந்து இலவசமாக மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம் என்று Gracia குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகி ஹமத் அல் ஹமத் கூறியுள்ளார்.

பாதுகாப்பாக வளரக் கூடிய மரங்கள்:

இத்திட்டத்திற்கு கைக்கொடுக்கும் வகையில் மிகவும் வலிமையான அனைத்து சூழலையும் தாங்கும் திறனுள்ள, குறைவான பராமரிப்பு தேவையான மரக்கன்றுகள் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படுகின்றன. மேலும், ஒவ்வொரு மரக்கன்றுக்கும் அதை எவ்வாறு வளர்க்க வேண்டும், எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை விளக்கும் விதமாக வழிகாட்டல் புத்தகமும் வழங்கப்படுகிறது.

பங்கேற்பதற்கான விதிமுறைகள்:

மரக்கன்றை எடுத்துச் சென்று , அதனை நட்டவுடன் வீடியோ எடுத்து மரக்கன்று நடப்பட்ட இடத்தை பகிர வேண்டும் என்று ஒப்புதல் கொடுக்க வேண்டும். இதன் மூலம் சமூகத்தில் ஒற்றுமையை ஏற்படுத்துவதே நோக்கம் என்று விளக்கப்பட்டுள்ளது.ஒரு மில்லியன் மரக்கன்று நடும் இத்திட்டத்தின் இறுதி மரக்கன்றை யார் நடுவார்கள் என்பதை சரியாக யூகிப்பவர்களுக்கு பரிசும் வழங்கி சிறப்பிக்கப்படவுள்ளது.

திட்டத்தின் இலக்குகள்:

இந்த முயற்சி, அமீரகத்தின் முன்னாள் நிறுவனர் ஷேக் ஜாயத் அவர்களால் ஊக்கமளிக்கப்பட்டது. அமீரகவிவசாயத்தை முன்னேற்றும் அவரது கனவினை நிறைவேற்றும் விதமாக இத்திட்டம் அமைந்துள்ளது. மேலும் இத்திட்டத்தில் நடப்பட்ட மரங்கள் எவ்வளவு, அவை எங்கே என்கின்ற விவரங்களைத் தொடர்ந்து இணையத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.