அமீரகத்திற்கு இந்தியா முழு ஆதரவு; அமீரக அதிபர் மற்றும் இந்திய பிரதமர் உரையாடல்!

அமீரக அதிபருடன் தொலைபேசியில் உரையாடிய இந்திய பிரதமர் மோடி,  ஈரானின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், அமீரகத்தின்  பாதுகாப்புக்காக அந்நாடு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு  இந்தியா முழு ஆதரவு வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

அமீரக & இந்திய தலைவர்கள் உரையாடல்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமீரக அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களுடன் தொலைபேசியில் உரையாடினார்.

இந்த உரையாடலின் போது, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் இராணுவ நடவடிக்கைகள் மற்றும் அதனால் சர்வதேச பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிற நாடுகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த இக்கட்டான சூழலில் இந்தியா ஐக்கிய அரபு அமீரகத்துடன் துணை நிற்கும் என்றும், அந்த நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை பாதுகாக்க எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பதாகவும் உறுதி அளித்தார்.

வன்முறையை உடனடியாகக் குறைத்து, பதற்றமான சூழலைத் தணிக்க வேண்டும் என்று இரு தலைவர்களும் வலியுறுத்தினர். அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என்றும் உறுதியளித்தனர்.

இந்திய பிரதமரின் X பதிவு:

இந்த உரையாடல் குறித்து இந்திய பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், ““அமீரக அதிபர்  எனது சகோதரர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் தொலைபேசியில் பேசி, முன்கூட்டிய ஈத் வாழ்த்துகளைத் தெரிவித்தேன். மேற்கு ஆசியாவின் தற்போதைய நிலைமை குறித்து நாங்கள் விவாதித்தோம். 

அமீரகம் மீதான தாக்குதல்களையும் இந்தியா வன்மையாகக் கண்டிப்பதை மீண்டும் உறுதிப்படுத்தினேன். ஹோர்முஸ் நீரிணை வழியாக பாதுகாப்பான மற்றும் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை நாங்கள் ஒப்புக்கொண்டோம். 

இப்பகுதியில் அமைதி, பாதுகாப்பை விரைவில் மீட்டெடுப்பதற்காக நாங்கள் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

TAGGED: