அமீரக குடியிருப்பாளர்களுக்கு 2025ஆம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ பொது விடுமுறை பட்டியல் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. சில முக்கிய விடுமுறை தேதிகள் நிலவு தெரிவதன் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என்பதால், அவை அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்கு உட்பட்டதாக இருக்கும். இந்த ஆண்டிற்கான பொது விடுமுறைகளை விரிவாக பார்க்கலாம்.
ஈத் அல் பித்ர் (Eid Al Fitr):
தனியார் துறை ஊழியர்களுக்கு:
மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MOHRE) தனியார் துறை ஊழியர்களுக்கான ஈத் அல் பித்ர் விடுமுறை தினங்களை அறிவித்துள்ளது. அதன் படி, மார்ச் 30 முதல் ஏப்ரல் 1 வரை சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ரமலான் 30 நாட்கள் நாட்கள் நீடித்தால், விடுமுறை ஏப்ரல் 2 வரை நீடிக்கப்படும்.
அரசு ஊழியர்களுக்கு:
அரசு ஊழியர்களுக்கு அரசு மனிதவள அலுவலகம் (FAHR) ஈத் அல் பித்ர் விடுமுறை தினங்களை அறிவித்துள்ளது. ஷவ்வால் மாதம் 1 முதல் 3 வரை ஈத் அல் பித்ர் விடுமுறைகள் இருக்கும் என்றும், ஷவ்வால் 4 ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. ரமலான் 30 நாட்கள் நீடித்தால், ரமலான் 30 ஆம் தேதியும் பொது விடுமுறையாக இருக்கும் என்றும் கூறியுள்ளது.
அரஃபா நாள் (Arafat Day):
து அல் ஹிஜ்ஜா 9ஆம் தேதி அரஃபாத் தினத்திற்காக ஒருநாள் விடுமுறை வழங்கப்படும். இந்த விடுமுறை நிலவு தெரிவதன் அடிப்படையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
ஈத்-உல்-அதா (Eid Al Adha):
அரஃபாத் நாளுக்குப் பிறகு, து அல் ஹிஜ்ஜா 10, 11 மற்றும் 12 ஆகிய மூன்று நாட்கள் ஈத் அல் அத்ஹா கொண்டாட்டத்திற்காக விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இஸ்லாமிய புத்தாண்டு (Islamic New Year):
மொகரம் மாதத்தின் முதல் நாளில் இஸ்லாமிய புத்தாண்டு கொண்டாடப்படுவதால், அந்நாள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த நாள்:
ரபீஉல் அவ்வல் மாதத்தின் 12ஆம் தேதி முகமது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த நாளாக கருதப்படுகிறது.
மேலும் இந்நாளில் ஒருநாள் விடுமுறை வழங்கப்படும். நிலவு தெரிவதன் அடிப்படையில், இதன் சரியான தேதி உறுதி செய்யப்படும்.
ஈத் அல் எதிஹாத் (Eid Al Etihad):
2025ம் ஆண்டின் இறுதியில் டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய நாட்கள் ஈத் அல் எதிஹாத் விடுமுறை வழங்கப்படும்.
