பிரான்ஸ் விண்வெளி ஏஜென்சி ஒத்துழைப்புடன், துபாய் முகம்மது பின் ராஷித் விண்வெளி மையத்தின் சார்பில், மீண்டும் நிலவை நோக்கிப் பயணிக்க ஐக்கிய அரபு அமீரகம் திட்டமிட்டுள்ளது.
நிலவை ஆய்வு செய்ய, அமீரகம் சார்பில், புதிதாக ராஷித் ரோவர்-2 என்ற வாகனம் (moon rover) உருவாக்கப்பட்டு, வரும் 2026-ல் விண்ணில் ஏவத் திட்டமிடப்பட்டுள்ளது.
துபாய் முகம்மது பின் ராஷித் விண்வெளி மையத்தில், முற்றிலும் அமீரக விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களால் உருவாக்கப்பட்ட ராஷித் ரோவர், அமெரிக்காவில் இருந்து ஜப்பான் நாட்டில் ஐ-ஸ்பேஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஹக்குட்டோ-ஆர் என்ற லேண்டர் விண்கலத்தில் வைத்து, கடந்த 2022-ல் விண்ணில் செலுத்தப்பட்டது.
எதற்காக ராஷித் ரோவர் அனுப்பப்பட்டது?
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் 10 கிலோ எடை கொண்ட ராஷித் ரோவர், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலமாக விண்ணில் செலுத்தப்பட் டது. 14 நாட்கள் அங்கு ஆராய்ச்சி செய்த ராஷித் ரோவர் நிலவின் மண் மற்றும் மேற்பரப்பை முப்பரிமாண கேமரா மூலமாக உயர்தரத்தில் துல்லியமாக படம் பிடித்து அனுப்பும் வகையில் திட்டமிடப்பட்டு இருந்தது.
நிலவில் நொறுங்கிய ராஷித் ரோவர்!
அப்படி அனுப்பப்பட்ட ராஷித் ரோவர், கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26-ஆம் தேதி, நிலவில் தரையிறங்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக தரையைத் தொடுவதற்கு முன்னதாகவே அதன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாலும், என்ஜின்கள் செயலிழந்ததாலும், லேண்டர் விண்கலம் நிலவின் மேற்பரப்பில் விழுந்து நொறுங்கியது. இதனால் நிலவின் மேற்பரப்பில் சிறு பள்ளம் ஏற்பட்டுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், முதல் முதலாக அனுப்பப்பட்ட ராஷித் ரோவரின் பயணம் தோல்வியில் முடிந்தது.
ராஷித் ரோவர் 2
சமீபத்தில் பாரிஸ்-ல் நடந்த விண்வெளி சார்ந்த கருத்தரங்கு ஒன்றில், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுதாக்கியுள்ளது. அதன்படி ராஷித் ரோவர் 2 நிலவின் மேற்பரப்பில் இருந்து விரிவான புகைப்படங்களை எடுக்க உதவும் வகையில் பல்வேறு முக்கிய அமைப்புகளை பிரான்ஸ் விண்வெளி ஏஜென்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அமீரகத்தின் தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் அரசு ஒழுங்கு முறை ஆணையத்தின் சார்பில் நிதி வழங்கப்படவுள்ளது. இந்த ராஷித் ரோவர்-2 அடுத்த ஆண்டு (2026) விண்ணில் ஏவத் திட்டமிடப்பட்டுள்ளது.
