பள்ளிகளில் ஆரோக்கியமற்ற உணவுகளை விற்பனை செய்ய தடை; அமீரக அரசு நடவடிக்கை!

அமீரக  பள்ளி உணவகங்களில் ஆரோக்கியமற்ற உணவுகளை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆரோக்கியமற்ற உணவுகளுக்கு தடை:

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பள்ளிகளின் உணவகங்களில் ஆரோக்கியமற்ற உணவுகளை விற்பனை செய்வதற்கும், உட்கொள்வதற்கும் நாடு தழுவிய தடையை அமீரக கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. 

மாணவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ‘எமராத் அல் யோம்’ செய்தி வெளியிட்டுள்ளது.

அனுமதி மறுக்கப்பட்ட உணவுகள்: 

புதிய விதிகளின்படி, பதப்படுத்தப்பட்ட இறைச்சி, நூடுல்ஸ், மென்பானங்கள், சாக்லேட் மற்றும்  பிஸ்கட்டுகள் போன்ற இனிப்புப் பண்டங்கள், சிப்ஸ்கள், கேக்குகள், கொழுப்பு மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள பேஸ்ட்ரிகள், சுவையேற்றப்பட்ட நட்ஸ் போன்றவற்றை பள்ளிகள் விற்கவோ அல்லது மாணவர்கள் கொண்டுவர அனுமதிக்கவோ கூடாது. ஒவ்வாமை உள்ள குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு இருப்பதால், வேர்க்கடலை மற்றும் வேர்க்கடலை சார்ந்த பொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏன் தடை:

குழந்தைகளுக்கு இத்தகைய உணவுகளால் ஏற்படும் உடல் பருமன் மற்றும் நீண்டகால நோய்கள் போன்ற அபாயங்கள் குறித்து சர்வதேச சுகாதார அமைப்புகளின் பரிந்துரைகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

மோசமான உணவுப் பழக்கம் மாணவர்களின் கவனம் மற்றும் கல்வி செயல்திறனை எதிர்மறையாகப் பாதிக்கும் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

“பள்ளிகள் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை ஆதரிக்கும் சூழலாக இருக்க வேண்டும்” என்று அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. சரியான ஊட்டச்சத்து என்பது நோய்களுக்கு எதிரான முதல் பாதுகாப்பு என்றும், குழந்தைகள் கவனம் செலுத்தவும், சிறந்து விளங்கவும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும்  வலியுறுத்தியுள்ளது.

வீட்டில் சமச்சீரான உணவைத் தயாரித்து கொடுக்கவும், கொழுப்பு அல்லது சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளைப் பள்ளிகளுக்குக் கொடுத்து அனுப்ப வேண்டாம் பெற்றோர்களுக்கு வலியுறுத்தியுள்ளது.

பள்ளி நாட்களில் காலை உணவு மிகவும் முக்கியமான உணவு என்றும், இது ஆற்றலை வழங்குவதுடன், நினைவாற்றலை அதிகரித்து, பின்னர் ஆரோக்கியமற்ற நொறுக்குத் தீனிகளைச் சாப்பிடும் ஆசையைக் குறைக்கவும் உதவுகிறது என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

சிறுவயதிலிருந்தே ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை ஏற்படுத்துவது பள்ளிகள் மற்றும் குடும்பங்களுக்கு இடையிலான கூட்டுப் பொறுப்பு என்றும், சிறந்த கல்வித் தரம் மற்றும் நீண்டகால நல்வாழ்வு கொண்ட ஒரு தலைமுறையை வளர்ப்பதற்கு இது அவசியம் என்றும் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

TAGGED: