அமீரக பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை முன்கூட்டியே அறிவிப்பு!

ஐக்கிய அரபு அமீரகத்தை சார்ந்த பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பெற்றோர்கள் தங்களது பயணத்தை திட்டமிட்டு வருகின்றனர்.

பள்ளிகளுக்கு விடுமுறை

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஏராளமான பள்ளிகள் இந்த ஆண்டிற்கான குளிர்கால விடுமுறை குறித்த அறிவிப்பை சில மாதங்களுக்கு முன்னதாகவே வெளியிட தொடங்கிவிட்டன. இதன் மூலம் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் கல்வி பாதிக்காமல் சுற்றுலா குறித்து திட்டமிட ஏதுவாக இருக்கும்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் கல்வி அமைச்சகமும், கல்வி நிறுவனங்களும் இணைந்து 2025 – 2026 கல்வி ஆண்டிற்கான நாள்காட்டியை முன்கூட்டியே அங்கீகரித்துள்ளன. அதன்படி ஏப்ரல் மாதத்தில் ஆசிய பாடத்திட்ட பள்ளிகளும், சர்வதேச பாடத்திட்ட பள்ளிகள் செப்டம்பரிலும் தங்களது கல்வியாண்டை தொடங்கின.

விடுமுறை தேதி அறிவிப்பு

இதையடுத்து முதல் பருவம் நான்கு வார குளிர்கால விடுமுறையுடன் முடிவடைகிறது. இந்த ஆண்டிற்கான விடுமுறை டிசம்பர் 8ஆம் தொடங்கி ஜனவரி 4, 2026 வரையும், ஜனவரி 5 முதல் வகுப்புகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை மாணவர்கள் ஓய்வெடுத்து தங்களை சமூக நிகழ்வுகளில் பங்கேற்க தயார்படுத்தி கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து ரீஜன்ட் இண்டர்நேஷனல் பள்ளியின் தலைமை ஆசிரியர் டேவிட் வில்லியம்ஸ் கூறுகையில், “குழப்பங்களை தவிர்ப்பதில் தகவல் தொடர்பு முக்கிய பங்கு வகிக்கிறது. பெற்றோர்கள் முக்கிய தேதிகள் குறித்து தெரிந்து கொள்வதில் நாங்கள் எப்போதும் கவனம் செலுத்துகிறோம். கல்வியாண்டிற்கான நாள்காட்டி ஆண்டின் தொடக்கத்திலேயே பகிரப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் விடுமுறைகள் நெருங்கும்போது சுற்றறிக்கைகள் மற்றும் பெற்றோர்களை தொடர்பு கொண்டு நினைவூட்டப்படுகிறது. இதன் மூலம் குளிர்கால விடுமுறை போன்ற பயண நெரிசல்  காலங்களில் குழப்பங்களை தவிர்க்க உதவுகிறது” என்றார்.

மேலும், “இந்த குளிர்கால விடுமுறை என்பது பயணம் செய்யவும், குடும்பத்துடன் நேரத்தை செலவிடவும், இனிய நினைவுகளை உருவாக்க சிறப்பான நேரமாகும். விடுமுறை தேதிகள் முன்னதாகவே உறுதிப்படுத்தப்படுவதால், பெற்றோர் தங்கள் விடுமுறையை திட்டமிட முடிகிறது, மற்றும் கடைசி நேர மாற்றங்களின் மனஅழுத்தத்திலிருந்து தப்பிக்க முடிகிறது”  எனக் கூறினார்.

சமீபத்தில் ராஸ் அல் கைமா இந்திய பள்ளி ஒரு சுற்றறிக்கை வெளியிட்டிருந்தது. அதில், டிசம்பர் 8 முதல் ஜனவரி 2, 2026 வரை குளிர்கால விடுமுறைக்காக பள்ளி மூடப்படும். மேலும் ஜனவரி 5ஆம் தேதி பள்ளி திறக்கப்படும். உங்கள் பயணத்தை திட்டமிட உங்களுக்கு உதவ நாங்கள் இதை முன்கூட்டியே தெரிவிக்கிறோம் என அறிவித்திருந்தது.

கூடுதல் வகுப்புகள்

இருப்பினும், அனைத்து பள்ளிகளும் முழுமையாக விடுமுறை கொடுப்பதில்லை. குறிப்பாக உயர்தர வகுப்புகள் கொண்ட சில பள்ளிகள் கூடுதல் வகுப்புகளை நடத்த வாய்ப்புள்ளது.

இதுகுறித்து கிரெடன்ஸ் பள்ளியின் முதல்வர் தீபிகா தாப்பர் சிங் கூறுகையில், “2ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான முதல் பருவத் தேர்வு அக்டோபரில் நடைபெறும். இதற்கான தேதிகளும், பாடத்திட்ட விவரங்களும் பெற்றோர்களுக்கு முன்னதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்விற்காக கூடுதல் வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவை குளிர்கால விடுமுறை நாட்களிலும் நடைபெறும். அதேபோல 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான முதல் முன் தேர்வுகள் நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் தொடக்கத்தில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளன” என்றார்.

பெற்றோர்கள் பாராட்டு

இதுகுறித்து துபாயில் வசிக்கும் ஒரு ஆவா தாம்சன் கூறுகையில், குளிர்கால விடுமுறை தேதிகளை முன்கூட்டியே அறிந்திருப்பது மிகவும் உதவியாக உள்ளது. கிறிஸ்துமஸ் காலத்தில் விமான டிக்கெட்டுகள் மிகவும் விலை உயர்ந்துவிடும். ஆனால் தற்போது நாங்கள் முன்பே பதிவு செய்வதால் எங்களால் பணத்தை சேமிக்க முடிகிறது, மேலும் எங்களது குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படாமல் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட முடிகிறது, என்றார்.

ஷார்ஜாவில் வசிக்கும் இந்திய பெற்றோரான ராஜ் நாயர் இது குறித்து கூறுகையில், பள்ளி நாள்காட்டியை முன்கூட்டியே பெறுவதன் மூலம் நாங்கள் எளிதாக இந்திய பயணத்தை திட்டமிட முடிகிறது. விடுமுறை தேதிகளை முன்கூட்டியே அறிந்து கொள்வதன் மூலம் விமான டிக்கெட்டுகளை எளிதாக பதிவு செய்ய முடிகிறது. இது கடைசி நேர பதற்றத்தை தவிர்க்க உதவுகிறது” என்றார்.

TAGGED: