அமீரகத்தில் விதிக்கப்படும் வாட் வரியில் திருத்தம் செய்து புதிய விதியை அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு கொண்டு வருவதாக நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
அமீரகத்தில் எண்ணெய் அல்லாத வர்த்தகத்தை மேம்படுத்தும் முயற்சியாக கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு 5% வாட் வரி எனப்படும் மதிப்பு கூட்டல் வரி கொண்டு வரப்பட்டது. வாட் வரி மீதான 2017 ஆம் ஆண்டின் சட்டம் எண் (8) திருத்தம் செய்யப்பட்டு மத்திய ஆணை சட்டம் 2025 ஆம் ஆண்டின் எண் (16) வெளியிடப்பட்டுள்ளது.
தலைகீழ் கட்டண முறை
அமீரகத்தில் வாட் வரி நடைமுறையில் முன்னதாக விற்பனையாளர்கள் வரி செலுத்துவார்கள். தற்போது வாட் வரியில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தத்தின் கீழ் பொருட்களை வாங்குபவர் அல்லது சேவைகளை பெறுபவர் வரி செலுத்த வேண்டும்.
இந்த நடைமுறை தலைகீழ் கட்டண முறை என்று அழைக்கப்படுகிறது. பொருட்களை வாங்குபவர் அல்லது சேவைகளை பெறுபவர் அதற்கான ரசீதுகளை சேமித்து வைத்து அதன்படி மொத்தமாக வரிப்பட்டியலை உருவாக்கி வரி செலுத்த வேண்டும்.
“இந்த திருத்தங்கள் வரி செலுத்துவோருக்கு வரி நடைமுறைகளை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன, அதே நேரத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் சர்வதேச தரநிலைகளுக்கு இணங்குவதை உறுதி செய்கின்றன” என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 1 முதல் அமல்
அமீரகத்தில் வாட் வரியில் கொண்டுவரப்பட்டுள்ள தலைகீழ் கட்டண முறை 2026ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது. அன்று முதல் அதிகப்படியான வரியை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் 5 ஆண்டுகள் வரை வழங்கப்படுகிறது. அதற்குள் வாடிக்கையாளர்கள் கோரிக்கையை சமர்ப்பித்து வரியை திரும்ப பெறலாம் என்று நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
