இந்த வாரத்தில் நடைபெற்ற முக்கியமான செய்திகள்!

இந்த வாரம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் மற்றும் அறிவிப்புகளை இத்தொகுப்பில் காணலாம்.

உலகின் வலிமையான காவல்துறையாக துபாய் காவல்துறைக்கு அங்கீகாரம்:

பிராண்ட் ஃபைனான்ஸ் நடத்திய புதிய ஆய்வின்படி, துபாய் காவல்துறை AAA+ மதிப்பீட்டு பெற்று, உலகளவில் மிகவும் நற்பெயர் பெற்ற & வலிமையான காவல்துறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நெறிமுறைகள், செயல்பாட்டுத் திறன், வெளிப்படைத்தன்மை, நவீனத்துவம் போன்ற பதினோரு பிரிவுகளில் மதிப்பீடு செய்யப்பட்டு துபாய் காவல்துறைக்கு 10-க்கு 9.2 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. 

10 நாடுகளில் 8,000க்கும் மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வை தொடர்ந்து பிராண்ட் ஃபைனான்ஸ் இந்த முடிவுகளை வெளியிட்டுள்ளது. 

துபாய் காவல்துறையின் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அப்துல்லா கலீஃபா அல் மர்ரி, ”இந்த அங்கீகாரம் ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்கள் மீது வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது மற்றும் பொது பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் வாழ்க்கைத் தரத்திற்கான துபாய் காவல்துறையின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது” என்று கூறினார்.

 ஹிஜ்ரி புத்தாண்டு எப்போது?

வானியல் கணக்கீடுகளின் படி, துல் ஹஜ் மாதம் 29 நாட்கள் நீடிக்கும் பட்சத்தில், புதிய வருடமான ஹிஜ்ரி 1447 ஆம் ஆண்டு, ஜூன் 26 ஆம் தேதி  தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

இங்கே குறிப்பிட்டுள்ள தேதி தேசிய வானியல் மற்றும் புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டது. அல்-ஹிஜ்ரா குறித்த அதிகாரப்பூர்வ தேதியை அரசு அறிவிக்கும்.

ஹிஜ்ரி 1447 ஆம் ஆண்டு, ஜூன் 26 ஆம் தேதி  தொடங்கினால், 2026 பிப்ரவரி 18, புதன் ரமலான் மாதம் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஈத் அல் பித்ர்  2026 மார்ச் 20, வெள்ளி அன்று வருமென எதிர்பார்க்கப்படுகிறது. ஈத் அல் அதா 2026 மே 26, செவ்வாய் அன்று வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

சோசியல் மீடியா இன்ஃபுளூயன்சர்களுக்கு வணிக உரிமம் கட்டாயம்!

அமீரகத்தில் சோசியல் மீடியா இன்ஃபுளூயன்சர்ஸ் மற்றும் கன்டென்ட் கிரியேட்டர்ஸ் பணம்  ஈட்டும் வணிக   நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அதற்கான வணிக உரிமம் பெறுவது  கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, அமீரக மீடியா கவுன்சிலிடமிருந்து ஊடக உரிமம் மட்டுமே பெற வேண்டியிருந்த நிலையில், மீடியா கவுன்சிலிடமிருந்து ஊடக உரிமத்திற்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு வணிக உரிமத்தைப் பெற வேண்டும். மேலும் இன்ஃபுளூயன்சர்ஸ் மற்றும்  கன்டென்ட் கிரியேட்டர்களுக்கான கட்டணத்தை ஊடக கவுன்சில் மூன்று ஆண்டுகளுக்கு தள்ளுபடி செய்துள்ளது. 

டிஜிட்டல் ஊடகங்களை ஒழுங்குபடுத்த இந்த ஆண்டு மே 29 அன்று புதிய ஊடக சட்டம் அமலுக்கு வந்த நிலையில், தற்போது வணிக உரிமம் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியரை கௌரவித்த துபாய் விமான நிலையம்!

துபாயில் வாழும் இந்தியரான ஹாஜி என். ஜமாலுத்தீனின் கல்வி சேவையை போற்றும் வகையில், விமான நிலைய சிறப்பு நுழைவு ஸ்டாம்ப் வழங்கி கௌரவித்துள்ளது DXB துபாய் விமான நிலையம்.

1965ஆம் ஆண்டு துபாய்க்கு கப்பலில் துபாய் வந்த ஹாஜி என். ஜமாலுத்தீன், 1984-ஆம் ஆண்டு Crescent English High School நிறுவி கல்வி சேவை ஆற்றி வருகிறார். இதில் இன்று 1,700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். 

இது அமீரகத்தில் மிகக்குறைந்த கட்டணத்தில் கல்வி அளிக்கும் தனியார் பள்ளிகளில் ஒன்றாக உள்ளது. பள்ளி மாணவர்களும் DXB விமான நிலையத்துக்கு அழைக்கப்பட்டு, அதன் செயல்பாடுகள் பற்றி அனுபவப் பயணம் மேற்கொண்டனர்.

அகமதாபாத் விமான விபத்து – அமீரக அதிபர் இரங்கல்!

ஜூன் 12 அன்று குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 விமானம் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

இந்த விமானத்தில் 242 பேர் பயணம் செய்துள்ள நிலையில், 241 பேர்  உயிரிழந்தனர்.  உலகையே உலுக்கிய இந்த சம்பவத்திற்கு அமீரக அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில் அவர், ”அகமதாபாத்தில் நடந்த துயரமான விமான விபத்து குறித்து நாங்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளோம். மேலும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டிருந்தார். 

மேலும், “இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், இந்திய அரசுக்கும், மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்” என அமீரக வெளியுறவு அமைச்சகம் (MoFA) தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளது.

துபாயில் நீல வழித்தட  மெட்ரோ திட்டம்:

துபாய் தனது போக்குவரத்து வலையமைப்பில் புதிதாக நீல நிற வழித்தட  மெட்ரோ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.  30 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட இருக்கும் இந்த சேவை 15.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்க பாதையிலும், 14.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேம்பாலத்திலும் செல்லும். 

மேலும் இதில் 14 நிலையங்கள் அமையும். இது சிவப்பு வழித்தடத்தை சென்டர்பாயிண்ட் நிலையத்திலும், பச்சை வழித்தடத்தை க்ரீக் நிலையத்திலும் இணைக்கும். இதன் முதல் நிலையம் உலகின் உயரமான மெட்ரோ நிலையமாக  அமைக்கப்பட உள்ளது. புர்ஜ் கலீபா-வை வடிவமைத்த Skidmore, Owings & Merrill நிறுவனம் வடிவமைத்துள்ளது.


TAGGED: