ஐக்கிய அரபு அமீரகத்தின் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு:
அதிகாலை நேரத்தில் மூடுபனி காரணமாக விபத்துகளைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய வானிலை மையம் (NCM) தெரிவித்துள்ளது.
நாட்டின் கிழக்குப் பகுதிகளான ஷார்ஜா, ராஸ் அல் கைமா மற்றும் ஃபுஜைரா ஆகிய இடங்களில் இன்று பிற்பகலில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. சில இடங்களில் மேகங்கள் திரண்டு மழை மேகங்களாக மாறக்கூடும்.
வெப்பநிலை:
இதற்கிடையில், நாட்டின் கிழக்குப் பகுதிகள் தவிர மற்ற இடங்களில் பெரும்பாலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நாடு முழுவதும் வெப்பநிலை படிப்படியாகக் குறைந்து வருகிறது.
நாட்டின் அதிகபட்ச வெப்பநிலை 33°C முதல் 37°C வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 15°C முதல் 19°C வரையிலும் இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரப்பதம் & கடல்நிலை:
மணிக்கு 15 கி.மீ முதல் 25 கி.மீ வேகத்தில், சில சமயங்களில் 35 கி.மீ வேகத்தில் லேசானது முதல் மிதமான காற்று வீசக்கூடும். இந்த காற்று காரணமாக தூசியும், மணலும் பறக்க வாய்ப்புள்ளதால், ஒவ்வாமை உள்ளவர்கள் வெளியில் செல்லும் போது கூடுதல் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.
மேலும், இன்று இரவு நேரத்திலும், செவ்வாய்க்கிழமை அதிகாலையிலும் ஈரப்பதம் அதிகரிக்கும். கடற்கரையோரப் பகுதிகளில் ஈரப்பதம் 75% முதல் 90% வரையிலும், மலைப் பகுதிகளில் 65% முதல் 85% வரையிலும் இருக்கக்கூடும்.
கடல் சீற்றத்தைப் பொறுத்தவரை, அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடலில் லேசானது முதல் மிதமான சீற்றத்துடன் இருக்கும்.
கடந்த அக்.8 அன்று நாட்டின் அதிகபட்ச வெப்பநிலை 38°C முதல் 42°C வரை இருக்கும். கடற்கரைப் பகுதிகளில் சராசரி வெப்பநிலை 35°C முதல் 39°C வரையிலும், மலைப் பகுதிகளில் 21°C முதல் 25°C வரையிலும் இருக்கும் என தேசிய வானிலை மையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
