அமீரகத்தில் இந்த வாரம் நடைபெற்ற முக்கியமான அறிவிப்பு மற்றும் நிகழ்வுகளை இத்தொகுப்பில் காணலாம்.
புர்ஜ் கலீஃபாவில் இரத்த நிலவு!
இரத்த நிலவு என அழைக்கப்படும் அரிய சந்திர கிரகணம் கடந்த செப்.07 அன்று உலகமெங்கும் பல நாடுகளில் தோன்றியது. துபாயைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ராமி டிபோ என்பவர் எடுத்த, புர்ஜ் கலீஃபாவை கடந்து செல்லும் அரிய சந்திர கிரகண நிலவின் டைம்லேப்ஸ் காணொளி அனைவரையும் கவர்ந்தது. துபாயில் குடியிருப்பாளர்கள் பலர் புர்ஜ் கலீஃபாவின் அருகே இருந்து சந்திர கிரகணத்தைப் பார்த்து ரசித்தனர்.
துபாய் வானியல் குழுவின் நிகழ்ச்சியின் ஓர் பகுதியாக வெளியான இந்த வீடியோ, சில மணி நேரங்களில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை பெற்றது.
அதிகரித்து வரும் மக்கள் தொகை!
கடந்த 2000ஆம் ஆண்டில் 3.17 மில்லியனாக இருந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் மக்கள் தொகை, 2024ஆம் ஆண்டில் 11.3 மில்லியனாக மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது.
2023ஆம் ஆண்டில் 10,678,55ஆக இருந்த அமீரக மக்கள் தொகை 2024ஆம் ஆண்டில் 11,294,243ஆக உயர்ந்துள்ளதாக கூட்டாட்சி போட்டித்திறன் மற்றும் புள்ளிவிவர மையம் (FCSC) தெரிவித்துள்ளது. இவர்களில் ஆண்கள் 7,235,074 பேரும், பெண்கள் 4,059,169 பேரும் உள்ளனர்.
2000ஆம் ஆண்டு முதல் அமீரகத்தில் மக்கள் தொகை 3.17 மில்லியனிலிருந்து 11.3 மில்லியனாக மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
துபாய் புள்ளிவிவர மையத்தின் மக்கள் தொகை தரவுகளின்படி, செப்டம்பர் 8, 2025 அன்று, துபாயின் மக்கள் தொகை முதல் முறையாக 4 மில்லியனைத் தாண்டி, 4,006,656 குடியிருப்பாளர்களை எட்டியது.
அமீரகத்தில் இணைய சேவை பாதிப்பு!
கடந்த சில தினங்களாக இணைய தடைகள், இணைய வேக குறைவு போன்ற பிரச்சனைகளால் அமீரக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு காரணம், செங்கடலின் அடியில் அமைந்துள்ள இணைய கேபிள்கள் சேதமடைந்தது. இதனை சரி செய்ய சில வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
செங்கடல் இணைய கேபிள் துண்டிப்புகளை அமெரிக்க வெளியுறவுத்துறை நெருக்கமாக கண்காணித்து வருவதாக கூறியுள்ளது. இதில் அந்த கேபிள்களை விரைவாக சரி செய்ய முடியாது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செயல்முறையானது இடம், வானிலை, கப்பல்கள் கிடைக்கும் தன்மையை பொறுத்து 2 முதல் 6 வாரங்கள் வரை ஆகும். எனவே தற்போது ஏற்பட்டுள்ள கேபிள் துண்டிப்பு காரணமாக அமீரகத்தில் 6 வாரங்களுக்கு இணைய சேவை பாதிக்கப்படலாம்.
இஸ்ரேலுக்கு அமீரகம் கண்டனம்!
கத்தார் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, அமீரக அதிபர் இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 10ஆம் தேதி தோஹாவிற்கு சென்ற அதிபர் அங்குள்ள அமீரி திவானில் கத்தார் அமீர் மாண்புமிகு ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்களை சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பின்போது, ஐக்கிய அரபு அமீரகம் கத்தாருக்கு ஆதரவாக நிற்கும் என்று கூறினார். அதிபர், இஸ்ரேலிய தாக்குதல் கத்தாரின் இறையாண்மைக்கு எதிரானது என்றும், சர்வதேச சட்டங்கள் மற்றும் விதிகளின் அப்பட்டமான மீறல் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆசிய கோப்பை முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி!
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் செப்.9ஆம் தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
செப்.10 அன்று ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் கணக்கை தொடங்கியது.
